Friday, January 29, 2021

05.04 – விரிஞ்சிபுரம்

05.04 – விரிஞ்சிபுரம்


2014-11-27

விரிஞ்சிபுரம் ( வேலூர் அருகே உள்ள தலம்)

------------------

(எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் மா' - அரையடி வாய்பாடு)

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 1.76.1 - "மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு");

(சுந்தரர் தேவாரம் - 7.58.1 - "சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்")

(திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.1 - "போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே")


1)

பாண்டிய நாட்டினில் நரிபரி ஆக்கும்

.. பரிவினன் அகம்நிறை அன்பொடு குளத்தைத்

தோண்டிய தண்டியின் கண்களில் பார்வை

.. தோன்றிடச் செய்தவன் விளக்கினில் திரியைத்

தூண்டிய எலிதனக் கின்னருள் செய்த

.. தூமறைக் காட்டினன் தொழுதுரு கடியார்

வேண்டிய தீபவன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


* வழித்துணைநாதர் - விரிஞ்சிபுரத்து ஈசன் திருநாமம்;


* நரியைப் பரி ஆக்கியதைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க.

* தண்டியடிகள் நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.

* திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) விளக்குத் திரியை ஓர் எலி தற்செயலாகத் தூண்டிய புண்ணியத்திற்கு அதனை மஹாபலியாகப் பிறப்பித்ததைத் தேவாரத்திற் காண்க.

(அப்பர் தேவாரம் - 4.49.8 -

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்

கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட

நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாம்

குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.)


பரிவு - அன்பு; கருணை;

தொழுது உருகு அடியார் வேண்டியது ஈபவன் - (அப்பர் தேவாரம் - 6.23.1 - "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்")

(உருகடியார் - வினைத்தொகை - உருகு + அடியார்; இதனை ஒத்த ஒரு பிரயோகம்:

"விரும்படியார் = விரும்பு + அடியார்".

திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 9 - "கடலமுதே கரும்பே விரும்படியார் எண்ணகத்தாய்");


2)

சூள்பிழை சுந்தரர் கண்மறைப் பித்துச்

.. சொற்றமிழ் மாலைகள் கேட்டருள் செய்தான்

ஆள்பர மாவென அடியிணை போற்றும்

.. அடியவர் இடர்களை அகற்றிடும் அண்ணல்

நீள்கயி லைக்கிறை நெற்றியிற் கண்ணன்

.. நின்மலன் விரைமலர்க் கணைதனை எய்த

வேள்பட விழித்தவன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


சூள் பிழை சுந்தரர் கண் மறைப்பித்துச், சொல்தமிழ் மாலைகள் கேட்டு அருள்செய்தான் - சங்கிலியார்க்குச் செய்த சபதத்தை மீறியதால் சுந்தரர் இருகண்களிலும் பார்வை இழந்து, பல பதிகங்கள் பாடி மீண்டும் பார்வை பெற்றதைச் சுட்டியது. (சுந்தரர் தேவாரம் - 7.89.1 - “பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம்என்கண் மறைப்பித்தாய்”);

விரைமலர்க்கணைதனை எய்த வேள் பட விழித்தவன் - வாசமலர் அம்பை எய்த மன்மதன் அழிய அவனை நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;


3)

ஆணியை ஆரழல் போற்றிகழ் மேனி

.. அண்ணலைப் போற்றிய அன்பும னத்து

மாணியைக் கொன்றிட வந்தடை கூற்றைக்

.. குரைகழல் கொண்டுதை செய்துயிர் காத்தான்

கோணிய வான்பிறை கொக்கிற கரவம்

.. கூவிளம் குரவொடு கொன்றையும் ஏறும்

வேணியில் ஆற்றினன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


ஆணி - பொன்னின் மாற்று அறிதற்கு வைத்திருக்கும் மாற்றுயர்ந்த பொன்; தனக்கு உவமையில்லாதான் என்னும் கருத்தில் இறைவனுக்குப் பெயராயிற்று;

ஆர் அழல் போல் திகழ் மேனி அண்ணல் - தீப்போன்ற செம்மேனி உடையவன்;

மாணி - பிரமசாரி - மார்க்கண்டேயர்;

கோணிய வான் பிறை கொக்கிறகு அரவம் - வளைந்த அழகிய பிறைச்சந்திரன், கொக்கின் இறகு, பாம்பு ; (கொக்கிறகு - கொக்கு வடிவுடைய குரண்டாசுரன் என்றவனை அழித்ததன் அடையாளம்);

கூவிளம் - வில்வம்;

குரவு - குரா மலர்;

வேணியில் ஆற்றினன் - சடையில் கங்கையை உடையவன்;


4)

புள்ளதன் மிசையமர் கரியவன் வயல்கள்

.. புடையணி மிழலையில் ஆழியை வேண்டிக்

கள்வடி தாமரை ஆயிரம் இட்டுக்

.. கைதொழக் கண்டது நல்கிய ஈசன்

கள்வர்கள் ஐவர்செய் கலக்கம ழித்துக்

.. கழலிணை தொழுபவர்க் காத்தருள் அண்ணல்

வெள்விடை ஊர்தியன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


புள்ளதன்மிசை அமர் கரியவன் - கருடவாகனம் உடைய கரிய திருமால்; (புள் - பறவை);

ஆழி - சக்கரம்;

வேண்டுதல் - விரும்புதல்;

கள் வடி தாமரை - தேன் ஒழுகும் தாமரை;

கைதொழக் கண்டு அது நல்கிய ஈசன் - வழிபாடு செய்யக் கண்டு இரங்கி அதனை ஈந்த ஈசன்;

கள்வர்கள் ஐவர் செய் கலக்கம் அழித்துக் கழலிணை தொழுபவர்க் காத்து அருள் அண்ணல் - ஐந்து புலன்கள் செய்யும் கலக்கத்தை அழித்து அடியவர்களைக் காத்து அருள்கின்ற பெருமான்;


இலக்கணக் குறிப்பு : . கி. பரந்தாமனாரின் "நல்ல தமிழ் எழுதவேண்டுமா" என்ற நூலிற் காணும் ஒரு குறிப்பு : பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு.

அதனால், "தொழுபவர்க் காத்தருள் அண்ணல்" என்று இவ்விடத்தில் இரண்டாம் வேற்றுமைத்தொகையில் "க்" என்ற வல்லொற்று மிக்கது;


5)

நண்ணலர் முப்புரம் நொடியினில் வேவ

.. நக்கவன் நரைவிடை ஊர்தியன் ஒருபால்

பெண்ணமர் மேனியன் பேசுதற் கரிய

.. பெருமையன் ஆயிரம் பேருடைப் பெருமான்

மண்ணவர் வானவர் மாமலர் தூவி

.. மலரடி வாழ்த்திட வரமருள் வள்ளல்

விண்ணுயர் திண்மதில் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


நண்ணலர் - பகைவர்;

நக்கவன் - சிரித்தவன்;

நரைவிடை ஊர்தியன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

விண்ணுயர் திண்மதில் விரிபொழில் சூழ்ந்த - வானில் உயரும் திண்ணிய மதிலும் விரிந்த சோலைகளும் சூழ்ந்த;


6)

கானமி சைத்தடி வாழ்த்திடு வார்க்குக்

.. காசினி மீதினிப் பிறவிகள் தீர்த்து

வானம ளித்திக வாழ்விலும் இன்பம்

.. வாரிவ ழங்கிடும் மாமணி கண்டன்

ஏனம ருப்பணி மார்பினில் நூலன்

.. ஈரிரு வர்க்கறம் விரிதிரி சூலன்

மீனய னிக்கிறை விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


பதம் பிரித்து:

கானம் இசைத்து அடி வாழ்த்திடுவார்க்குக்

.. காசினி மீது இனிப் பிறவிகள் தீர்த்து,

வானம் அளித்து, இகவாழ்விலும் இன்பம்

.. வாரி வழங்கிடும் மாமணிகண்டன்;

ஏன மருப்பு அணி மார்பினில் நூலன்;

.. ஈரிருவர்க்கு அறம் விரி திரிசூலன்;

மீன் நயனிக்கு இறை; விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபுரத்து உறை வழித்துணை தானே.


காசினி - பூமி;

ஏன மருப்பு - பன்றிக்கொம்பு;

ஈரிருவர்க்கு அறம் விரி திரிசூலன் - சனகாதியர் நால்வர்க்கு மறைப்பொருளை விளக்கிய சூலபாணி; (விரித்தல் - விளக்கியுரைத்தல்);;

மீன் நயனி - மீன் போன்ற கண்ணை உடையவள் - உமையம்மை; (அப்பர் தேவாரம் - 6.42.1 - "மைத்தான நீள்நயனி பங்கன்");

இறை - கணவன்;


7)

சூலம ழுப்படை தாங்கிய கையன்

.. தோளிரு நான்கினன் சூரனைச் செற்ற

வேலனைப் பயந்தவன் கண்ணுதல் அண்ணல்

.. வெல்விடைக் கொடியினன் வேயன தோளி

சேலன கண்ணுமை பங்கமர் செல்வன்

.. சிலையினை வில்லென ஏந்திய வீரன்

மேலவர் தம்மிறை விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


சூலமழுப்படை - சூலம் மழுப்படை - சூலமும் மழுவாயுதமும்;

தோள் இருநான்கினன் - எட்டுப் புஜங்கள் உடையவன்;

சூரனைச் செற்ற வேலனைப் பயந்தவன் - சூரபதுமனை அழித்த முருகனைப் பெற்றவன்; (பயத்தல் - பெறுதல்; கொடுத்தல்);

கண்ணுதல் அண்ணல் - நெற்றிக்கண்ணன்;

வேய் அன தோளி சேல் அன கண் உமை பங்கு அமர் செல்வன் - மூங்கில் போன்ற புஜமும் சேல்மீன் போன்ற கண்ணும் உடைய உமையம்மையை ஒரு பங்காக விரும்பியவன்;

சிலையினை வில்லென ஏந்திய வீரன் - மேருமலையை வில்லாக ஏந்திய வீரன்;

மேலவர்தம் இறை - வானவர்கோன் - தேவர்கள் தலைவன்;


8)

கேள்வியர் நாள்தொறும் வினைகெடப் போற்றும்

.. கேடிலி மன்றினில் ஆடிய பாதன்

தோள்வலி யால்மலை தூக்கிய வன்றன்

.. சுடர்முடி பத்தையும் நெரித்திசை கேட்டான்

தாள்பணி யாதவன் னெஞ்சின னாகித்

.. தருக்கிய தக்கனின் தலையைய ரிந்து

வேள்விய ழித்தவன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


கேள்வியர் - வேதம் கற்றவர்; கேள்வி ஞானம் மிக்கவர்;

கேடிலி - அழிவற்றவன்;

தோள்வலியால் மலை தூக்கியவன்றன் சுடர்முடி பத்தையும் நெரித்து இசை கேட்டான் - புஜபலத்தால் கயிலையைத் தூக்கிய இராவணனது மணிமுடி அணிந்த தலைகள் பத்தையும் நசுக்கிப் பின் அவன் பாடிய இசையைக் கேட்டு அருளியவன்;

தாள் பணியாத வன்னெஞ்சினன் ஆகித் தருக்கிய தக்கனின் தலையை அரிந்து வேள்வி அழித்தவன் - ஆணவத்தால் ஈசனுக்கு அவி கொடாமல் வேள்விசெய்த கல்மனம் உடைய தக்கனது தலையை அறுத்து, அவன் செய்த வேள்வியை அழித்தவன்;


9)

சந்திர சேகரன் சதுர்மறை நாவன்

.. தருக்கொடு நான்பரம் நான்பரம் என்று

முந்தயன் மாலிவர் வாதிடுங் கால்தன்

.. முடியடி நேடிட மூளெரி யானான்

சந்ததம் நறுமலர் பலகொடு போற்றித்

.. தாள்தொழும் அடியவர் தமக்கருள் செய்து

வெந்துயர் தீர்ப்பவன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


தருக்கு - ஆணவம்;

நான் பரம் - யானே பரம்பொருள்;

முந்து அயன் மால் இவர் வாதிடுங்கால் தன் - முன்னர்ப் பிரமனும் திருமாலும் வாதிட்ட சமயத்தில் தன்னுடைய;

முடியடி நேடிட மூள் எரி ஆனான் - அடியையும் முடியையும் அவர்கள் தேடும்படி மூண்ட சோதி வடிவினன்;

சந்ததம் நறுமலர் பலகொடு போற்றித் தாள் தொழும் அடியவர் தமக்கு அருள் செய்து வெந்துயர் தீர்ப்பவன் - எப்பொழுதும் வாசமலர்கள் பலவற்றால் திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிந்து அவர்களுடைய கொடிய துயரங்களை நீக்குபவன்;


10)

எவ்வழி நல்வழி என்றறி யாமல்

.. இடர்மிகு புன்னெறி உழல்பவர் சொல்லும்

அவ்வழி அல்வழி அஃதடை யேன்மின்

.. அருவமும் உருவமும் ஆயவன் அன்பால்

கொவ்வைநி கர்த்தசெவ் வாயுமை யாளைக்

.. கூறும கிழ்ந்தவன் கும்பிடு வார்தம்

வெவ்வினை தீர்ப்பவன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


புன்னெறி - புன்மையான மார்க்கம்;

அவ் வழி அல் வழி = அந்த நெறியல்லாத நெறி = அந்தத் தீநெறி; (அல்வழி - தகாத வழி; நெறியல்லாத நெறி);

அஃது அடையேன்மின் - அதனை அடையவேண்டா; (மின் - முன்னிலைப் பன்மை விகுதி);

கொவ்வை நிகர்த்த செவ்வாய் உமையாளைக் கூறு மகிழ்ந்தவன் - கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயை உடைய உமையம்மையை ஒரு பாகமாக விரும்பியவன்;

வெவ்வினை - கொடிய வினை;


11)

மடமணி மங்கையை வாமம கிழ்ந்து

.. வளர்சடை மேலலை வானதி வைத்தான்

வடமணி போலிள நாகம ணிந்து

.. மழவிடை ஏறியுண் பலிக்குழல் செல்வன்

நடமணி அரங்கெனச் சுடலைய தாக

.. நள்ளிருள் ஆடிறை வானவர் வாழ

விடமணி மிடறினன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


பதம் பிரித்து:

மட மணி மங்கையை வாமம் மகிழ்ந்து,

.. வளர்சடைமேல் அலை- வான்நதி வைத்தான்;

வடம் அணி போல் இள நாகம் அணிந்து,

.. மழவிடை ஏறி உண்பலிக்கு உழல் செல்வன்;

நட மணி அரங்கு எனச் சுடலையது ஆக,

.. நள்ளிருள் ஆடு இறை; வானவர் வாழ

விடமணி மிடறினன்; விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபுரத்து உறை வழித்துணை தானே.


* மரகதாம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்;

மட மணிமங்கை - அழகிய மரகதாம்பிகை; (மணி - நவரத்தினம் - இங்கே மரகதம்); "மடம் அணி மங்கை" - அழகிய உமையம்மை; (மடம் - அழகு; மென்மை);

வாமம் - இடப்பக்கம்;

அலை-வானதி - அலை வான் நதி - அலைக்கின்ற (/ அலையுடைய) கங்கை;

வடம் அணி போல் - மாலையும் ஆபரணமும் போல; (அணிவடம் போல் என்று மாற்றிக்கொண்டால் - அணிகின்ற மாலைபோல, அழகிய மாலைபோல; மணிவடம் போல் என்று மாற்றிக்கொண்டால் - மணிகளால் ஆன மாலை போல) (வடம் - chains of a necklace; சரம்; String of jewels; மணிவடம்);

மழவிடை ஏறி உண்பலிக்கு உழல் செல்வன் - இளைய எருதின்மேல் ஏறிப் பிச்சைக்குத் திரியும் செல்வன்; (மழ விடை - இளைய இடபம்); (உண்பலி - பிச்சை);

நட மணி அரங்கு எனச் சுடலையது ஆக - சுடுகாடே நாட்டியம் ஆடும் அழகிய அரங்கு என்று ஆக;

விடமணி மிடறினன் - விடம் அணி / விட மணி - விடத்தை அணிந்த கண்டம் உடையவன்; விடமே மணியாகத் திகழும் கண்டத்தை உடையவன்;

மிடறினன் - மிடற்றினன் என்பது ஓசை கருதி மிடறினன் என்று வந்தது; (இப்பிரயோகத்தைத் திருமுறைகளிற் காணலாம்);


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1) விரிஞ்சிபுரம் - மார்க்கபந்தீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=828

-------------- --------------


No comments:

Post a Comment