05.02 – கருவூர் - (கரூர்)
2014-11-16
கருவூர் - (கரூர்)
--------------------------------------
(கலித்துறை - 'மா மா கூவிளம் மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)
(திருஞானசம்பந்தர் தேவாரம் - 1.97.1 - "எய்யா வென்றித் தானவ ரூர்மூன் றெரிசெய்த");
1)
நண்ணும் அன்பர் தம்மிடர் தீர்த்து நலம்நல்கும்
அண்ணல் அரிய நஞ்சினை ஆர்ந்த அருளாளன்
எண்ணில் நாமம் ஏற்றவெம் மீசன் இடமென்பர்
கண்ணுக் கினிய கார்வயல் சூழ்ந்த கருவூரே.
நண்ணும் அன்பர்தம் இடர் தீர்த்து நலம் நல்கும் அண்ணல் - அடைந்த பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து நலம் அளிக்கின்ற தலைவன்;
அரிய நஞ்சினை ஆர்ந்த அருளாளன் - ஆலகால விடத்தை உண்ட அருளாளன்; (ஆர்தல் - உண்ணுதல்);
எண் இல் நாமம் ஏற்ற எம் ஈசன் இடம் என்பர் - எண்ணற்ற திருப்பெயர்கள் உடைய எம் ஈசன் உறையும் தலம்;
கண்ணுக்கு இனிய கார்வயல் சூழ்ந்த கருவூரே - கண்ணுக்கு இனிமை தரும், நீர்வளம் மிக்குப் பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்); (கார் - மேகம், மழை, நீர்; பசுமை; அழகு); ('மிக்க' என்றது இசையெச்சம் - Omission, from a sentence, of words needed to complete the sense; ellipsis for the sake of brevity or elegance;).
(சுந்தரர் தேவாரம் - 7.84.1 - "கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே");
குறிப்பு : கரூர் பெரிய ஊராகிவிட்டதால், வயல்களை ஊரின் புறப்பகுதிகளிலேயே காண இயலும்.
2)
போற்றிப் பாடும் அன்புடை யார்க்குப் புகலானான்
ஆற்றை ஏற்ற அஞ்சடை அப்பன் அயில்வேலன்
ஏற்றுக் கொடியன் ஏந்திழை கூறன் இடமென்பர்
காற்றில் அசையும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.
புகல் - அடைக்கலம்;
அஞ்சடை - அம் சடை - அழகிய சடை;
அயில்வேலன் - கூர்மையுடைய சூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை); (வேல் - இங்கே மூவிலை வேல் - சூலத்தைச் சுட்டியது);
ஏற்றுக் கொடியன் - இடபச் சின்னம் பொறித்த கொடியை உடையவன்;
ஏந்திழை கூறன் - உமையை ஒரு கூறாக உடையவன்;
காற்றில் அசையும் கார்வயல் - நெற்பயிர் காற்று வீசும்போது அசைந்தாடுகின்ற, நீர்வளம் மிக்குப் பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல்; (வயல் என்றதால், காற்றில் அசைவது நெற்பயிர் என்று குறிப்பால் உணர்த்தப்பெற்றது);
3)
அரவார் சடையன் அம்புலி சூடி அடிநாளும்
பரவாப் பணியும் பத்தருக் கன்பன் பலிநாடி
இரவா உழலும் எம்பெரு மான்றன் இடமென்பர்
கரவா தளிக்கும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.
அரவு ஆர் சடையன், அம்புலி சூடி - நாகம் பொருந்திய சடையினன், பிறையைச் சூடியவன்;
அடி நாளும் பரவாப் பணியும் பத்தருக்கு அன்பன் - திருவடியைத் தினமும் துதித்துப் பணியும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்; (பரவுதல் - புகழ்தல்);
பலி நாடி இரவா உழலும் எம்பெருமான்தன் இடம் என்பர் - பிச்சை விரும்பி இரந்து உழல்கின்ற எம்பெருமான் உறையும் இடம் ஆவது;
கரவாது அளிக்கும் கார்வயல் சூழ்ந்த கருவூரே - வஞ்சமின்றி கொடுக்கின்ற, நீர்வளம் மிக்குப் பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்) ஆகும்;
இலக்கணக் குறிப்பு - பரவா, இரவா - பரவி, இரந்து; ( செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம்);
4)
அயில்கொள் சூலன் ஆர்கழல் பணியும் அடியார்தம்
மயல்கள் தீர்த்து வானம ளிக்கும் மணிகண்டன்
எயில்கள் மூன்றை எய்தவன் உறையும் இடமென்பர்
கயல்கள் உகளும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.
அயில்கொள் சூலன் - கூர்மையுடைய சூலத்தை ஏந்தியவன்;
ஆர்கழல் பணியும் அடியார்தம் மயல்கள் தீர்த்து வானம் அளிக்கும் மணிகண்டன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியை வணங்கும் அடியவர்களது மயக்கங்களைத் தீர்த்துச் சிவலோகம் அளிக்கின்ற நீலகண்டன்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (கழல் - திருவடி); (மயல்கள் - மயக்கங்கள்);
எயில்கள் மூன்றை எய்தவன் உறையும் இடம் என்பர் - முப்புரங்களை ஓர் அம்பால் எய்தவன் உறையும் தலம்;
கயல்கள் உகளும் கார்வயல் சூழ்ந்த கருவூரே - கயல் மீன்கள் பாயும், வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்) ஆகும்;;
5)
தவறா தென்றும் தண்டமிழ் பாடித் தனையேத்தும்
அவர்வா னுலகம் ஆள்வதற் கருளும் அழல்வண்ணன்
இவரான் ஏறும் எம்பெரு மான்றன் இடமென்பர்
கவினார் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே.
தவறாது என்றும் தண் தமிழ் பாடித் தனை ஏத்தும் அவர் வானுலகம் ஆள்வதற்கு அருளும் அழல்வண்ணன் - மறவாமல் எந்நாளும் குளிர்ந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடித் தன்னைப் போற்றும் பக்தர்கள் சிவலோகம் ஆள அருள்கின்ற தீவண்ணன்; (தண்டமிழ் - தண்+தமிழ் - குளிர்ந்த தமிழ் - தேவாரம், திருவாசகம் முதலியன); (அழல் - தீ);
இவர்ஆன் ஏறும் எம்பெருமான்தன் இடம் என்பர் - இடப்வாகனம் உடைய எம்பெருமானது தலம்; (இவர்தல் - ஏறிச்செலுத்துதல்); (ஆன் - பசு/இடபம்);
கவின் ஆர் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே - அழகிய பொழிலும் பசிய வயலும் சூழ்ந்த கருவூர் (கரூர்); (கவின் - அழகு);
6)
முதலும் முடிவும் ஆகிய மூர்த்தி முடிவில்லான்
நுதலிற் கண்ணன் கையினில் மூன்று நுனைவேலன்
எதிரில் லாத எம்பெரு மான்றன் இடமென்பர்
கதலி தென்னை கார்வயல் சூழ்ந்த கருவூரே.
நுதலில் கண்ணன் - நெற்றிக்கண்ணன்;
மூன்று நுனை வேலன் - மூன்று முனைகளை உடைய வேலை ஏந்தியவன் - திரிசூலன்;
எதிர் இல்லாத - ஒப்பற்ற; (எதிர் - ஒப்பு);
கதலி - வாழை;
7)
வாணி லாவை வார்சடை மீது மகிழ்பெம்மான்
பேணி வாழ்த்தும் அன்பரைப் பேணிப் பெருவான்சேர்
ஏணி ஆன எந்தையி ருக்கும் இடமென்பர்
காணற் கினிய கார்வயல் சூழ்ந்த கருவூரே.
வாணிலாவை வார் சடைமீது மகிழ் பெம்மான் - ஒளி வீசும் சந்திரனை நீள்சடையின்மேல் விரும்பிச் சூடிய பெருமான்; (வாணிலா - வாள் நிலா - ஒளி திகழும் சந்திரன்); (வார்தல் - நீள்தல்); (மகிழ்தல் - விரும்புதல்);
பேணி வாழ்த்தும் அன்பரைப் பேணிப் பெரு வான் சேர் ஏணி ஆன எந்தை - போற்றித் துதிக்கும் பக்தர்களைக் காத்துச் சிவலோகத்தில் சேர்க்கின்ற ஏணி ஆன எம் தந்தை; (பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்; பாதுகாத்தல்); (பெருவான்சேர் - பெரிய வானுலகத்தில் சேர்க்கின்ற);
8)
முனிவால் மலையைப் பேர்த்தவன் அலற முடிபத்தைத்
தனியோர் விரலை ஊன்றிய டர்த்துத் தயைசெய்தார்
இனியார் கைத்த நஞ்சணி கண்டர் இடமென்பர்
கனியார் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே.
முனிவால் மலையைப் பேர்த்தவன் அலற முடி பத்தைத் தனி ஓர் விரலை ஊன்றி அடர்த்துத் தயைசெய்தார் - சினத்தால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அலறும்படி அவனது பத்துத் தலைகளையும் ஒரே ஒரு விரலை ஊன்றி நசுக்கி அருள்செய்தவர்; (முனிவு - கோபம்; சினம்); (அடர்த்தல் - நசுக்குதல்); (தயைசெய்தல் - அருள்செய்தல்);
இனியார் - இனியவர்;
கைத்த நஞ்சு அணி கண்டர் இடம் என்பர் - கசப்புடைய ஆலகால விடத்தை அணிந்த கண்டத்தை உடையவர் உறையும் தலம்; (கைத்தல் - கசத்தல்);
கனி ஆர் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே - கனிகள் நிறைந்த சோலைகளும் வளம் மிக்க வயலும் சூழ்ந்த கருவூர் (கரூர்);
9)
பெரிய தேவன் பேணிடு வாரைப் பிரியாதான்
அரியும் அயனும் அன்றடி முடியை அடையாத
எரியின் உருவன் ஏறமர் ஈசன் இடமென்பர்
கரிய சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே.
பெரிய தேவன் - மகாதேவன்;
பேணிடுவாரைப் பிரியாதான் - பக்தர்களை நீங்காமல் துணைநிற்பவன்;
எரியின் உருவன் ஏறு அமர் ஈசன் இடம் என்பர் - சோதி வடிவினன், இடபவாகனம் உடைய ஈசன் உறையும் தலம்;
கரிய சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே - அடர்ந்த சோலைகளும் வளம் மிக்க வயலும் சூழ்ந்த கருவூர் (கரூர்);
10)
துரும்பைத் தோணி என்றுரை துரிசர் சொலைநீங்கும்;
விரும்பு பத்தர் வெவ்வினை தீர்க்கும் விடையேறி
இரும்பு வெள்ளி பொன்னெயில் எய்த இறைவன்னூர்
கரும்பார் கின்ற கார்வயல் சூழ்ந்த கருவூரே.
துரும்பைத் தோணி என்று உரை துரிசர் சொலை நீங்கும் - பிறவிக் கடலைக் கடப்பிக்கும் தோணி என்று ஒரு துரும்பினைப் புகழ்ந்து பேசும் குற்றமுடையவர்கள்தம் சொல்லை மதியாமல் நீங்குங்கள்;
விரும்பு பத்தர் வெவ்வினை தீர்க்கும் விடையேறி - விரும்பி வழிபடும் பக்தர்களது கொடிய வினையைத் தீர்க்கும் இடபவாகனன்; (வெவ்வினை - கொடிய வினை); (விடையேறி - இடபவாகனன்);
இரும்பு வெள்ளி பொன் எயில் எய்த இறைவன்னூர் - முறையே இரும்பு, வெள்ளி, பொன் இவற்றால் செய்யப்பெற்ற கோட்டைகளான முப்புரங்களை ஒரு கணையால் எய்த இறைவன் உறையும் தலம்; (இறைவன்னூர் - இறைவன் ஊர் - னகர ஒற்று விரித்தல் விகாரம்);
கரும்பு ஆர்கின்ற கார்வயல் சூழ்ந்த கருவூரே - கரும்புகள் நிறைந்த வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்);
11)
மின்னற் சடையன் வெண்திரு நீறு மிளிர்மார்பன்
பன்னி நாளும் பாதமி ரண்டைப் பணிவார்தம்
இன்னல் களையும் எம்பெரு மான்றன் இடமென்பர்
கன்னல் விளையும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.
மின்னல் சடையன் - மின்னல் போல் ஒளி திகழும் சடையை உடையவன்;
வெண் திருநீறு மிளிர் மார்பன் - வெண்மை திகழும் திருநீறு ஒளிவீசும் மார்பை உடையவன்;
பன்னி நாளும் பாதம் இரண்டைப் பணிவார்தம் இன்னல் களையும் எம்பெருமான்தன் இடம் என்பர் - புகழ்ந்து பாடி இரு திருவடிகளை வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கும் எம்பெருமானது தலம்; (பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்);
கன்னல் விளையும் கார்வயல் சூழ்ந்த கருவூரே - கரும்பு விளையும் வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்); (கன்னல் - கரும்பு );
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
----------------- ----------------
No comments:
Post a Comment