03.05.113 – கயிலாயம் - பொருளை நினைத்து - (வண்ணம்)
2009-02-23
3.5.113) பொருளை நினைத்து - (கயிலாயம்)
----------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதனனத் .. தனதான )
(இரவுபகற் பலகாலும் - திருப்புகழ் - திருவருணை)
பொருளைநினைத் .. ததனாலே
.. பொருமுமனத் .. தினனாகிப்
பெருமிடியுற் .. றுழலாமல்
.. பிறையவுனைத் .. தொழுவேனோ
கருதலர்முப் .. புரம்வேவக்
.. கணைதனையுய்த் .. தருள்வீரா
அருமறைமெய்ப் .. பொருளானாய்
.. அணிகயிலைப் .. பெருமானே.
பதம் பிரித்து:
பொருளை நினைத்து அதனாலே
.. பொருமு மனத்தினன் ஆகிப்,
பெரு-மிடி உற்று உழலாமல்,
.. பிறைய, உனைத் தொழுவேனோ;
கருதலர் முப்புரம் வேவக்
.. கணைதனை உய்த்து-அருள் வீரா;
அருமறை மெய்ப்பொருள் ஆனாய்;
.. அணி கயிலைப் பெருமானே.
பொருளை நினைத்து அதனாலே பொருமு மனத்தினன் ஆகிப் - நிலையில்லாத பொருளையே சதா எண்ணி அதனால் மனத்தில் பொறாமையும் துன்பமும் சேர; (பொருமுதல் - துன்புறுதல்; பொறாமைப்படுதல்);
பெரு மிடி உற்று உழலாமல் - மிகுந்த வறுமையும் துன்பமும் அடைந்து வருந்தாமல்; (மிடி - துன்பம்; வறுமை);
பிறைய, உனைத் தொழுவேனோ - பிறையை அணிந்தவனே, நான் உன்னைத் தொழுவேனோ? அருள்வாயாக; (பிறைய - பிறையனே - பிறைச்சந்திரனை அணிந்தவனே - என்ற விளி); (சம்பந்தர் தேவாரம் - 1.134.10 - "சடையன் பிறையன்");
கருதலர் முப்புரம் வேவக் கணைதனை உய்த்து அருள் வீரா - பகைவர்களது முப்புரங்களும் வெந்து அழியும்படி ஒரு கணையை ஏவி அருளிய வீரனே; (கருதலர் - பகைவர்); (உய்த்தல் - ஆயுதம் பிரயோகித்தல்);
அருமறை மெய்ப்பொருள் ஆனாய் - அரிய வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருள் ஆனவனே;
அணி கயிலைப் பெருமானே - அழகிய கயிலையில் உறைகின்ற பெருமானே; (அணி - அழகு); (சம்பந்தர் தேவாரம் - 2.11.2 - "அந்தணர் சேரும் அணிகாழி எம்மானை");
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
அனைத்தும ஶிவாம்ருதம்
ReplyDeleteThanks for the feedback.
Delete