03.05.112 – கயிலாயம் - பெரிய வினைத்தொடர் - (வண்ணம்)
2009-02-23
3.5.112) பெரிய வினைத்தொடர் - (கயிலாயம்)
----------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதனனத் .. தனதான )
(இரவுபகற் பலகாலும் - திருப்புகழ் - திருவருணை)
பெரியவினைத் .. தொடர்போகப்
.. பிணைமலரிட் .. டிருபோதும்
பரிவுமிகுத் .. துனதாளைப்
.. பணியவெனக் .. கருளாயே
அரிபிரமற் .. கரியானே
.. அடியவருக் .. கெளியானே
கரியமிடற் .. றமுதேஎம்
.. கயிலைமலைப் .. பெருமானே.
பதம் பிரித்து:
பெரிய வினைத்தொடர் போகப்,
.. பிணை-மலர் இட்டு இரு போதும்
பரிவு மிகுத்து உன தாளைப்
.. பணிய எனக்கு அருளாயே;
அரி பிரமற்கு அரியானே;
.. அடியவருக்கு எளியானே;
கரிய மிடற்று அமுதே; எம்
.. கயிலைமலைப் பெருமானே.
பெரிய வினைத்தொடர் போகப் - கொடிய வினையெல்லாம் நீங்குமாறு;
பிணை-மலர் இட்டு இரு போதும் பரிவு மிகுத்து உன தாளைப் பணிய எனக்கு அருளாயே - தொடுத்த மலர்களை இட்டு இருவேளையும் அன்போடு உன் திருவடியை நான் வழிபடுமாறு எனக்கு அருள்வாயாக; ("மலர்" = சொல்மலர் என்று கொண்டு, பிணைமலர் = பாமாலை என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (பிணைத்தல் - தொடுத்தல்); (இரு போதும் - (காலை மாலை / இரவு பகல்) இரு வேளையும்); (பரிவு - அன்பு; பக்தி); (உன தாள் - உனது திருவடி); (அ - ஆறாம் வேற்றுமை உருபு);
அரி பிரமற்கு அரியானே - திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாதவனே;
அடியவருக்கு எளியானே - பக்தர்களால் எளிதில் அடையப்படுபவனே;
கரிய மிடற்று அமுதே - நீலகண்டனே! அமுதம் போல்பவனே; (மிடறு - கண்டம்);
எம் கயிலைமலைப் பெருமானே - எம் கயிலைநாதனே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment