Saturday, August 8, 2020

03.04.086 - சிவன் - காவலர் (watchman) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-03-03

3.4.86 - சிவன் - காவலர் (watchman) - சிலேடை

-------------------------------------------------------

அரவமிக அல்லில் நடமாடி வீடு

புரத்துக்கோ லோச்சுவார் தீயார் - வரமருள்வார்

நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் காவலர்

கற்றைச் சடையீசர் காண்.


சொற்பொருள்:

அரவம் - 1. பாம்பு; / 2. ஓசை;

அல் - இரவு;

நடமாடி - 1. கூத்தாடுபவன்; / 2. சஞ்சரித்து; அங்குமிங்கும் நடந்து;

வீடு - 1. வீடுபேறு; முக்தி; / 2. இல்லம்;

புரத்தல் - 1. அனுக்கிரகித்தல்; / 2. காத்தல்;

கோல் ஓச்சுதல் - 1. ஆட்சி புரிதல்; / 2. குச்சியை உயர்த்துதல்;

தீயார் - 1. நெருப்பை ஏந்தியவர்; / 2. கெட்டவர்கள்;

வரமருள்வர் - 1. வரம் அருள்வார்; / 2. வர மருள்வார்;

மருள்தல் - வெருவுதல்; அஞ்சுதல்;

நற்றுணை - நல்+துணை;

நானிலம் - உலகம்;

காண் - முன்னிலை அசை;


காவலர்:

அரவம் மிக அல்லில் நடமாடி - மிகவும் ஓசை எழுப்பியபடி இரவில் அங்குமிங்கும் நடந்து;

வீடு புரத்துக் கோல் ஓச்சுவார் - வீடுகளைக் காத்து, (விளக்குக் கம்பங்களில் தட்டி ஓசையெழுப்புவதற்காகவும், விலங்குகளையும் துஷ்டர்களையும் காணும்பொழுதும்) கையிலிருக்கும் குச்சியை உயர்த்துவார்;

தீயார் வர மருள்வார் - (காவலர்கள் இருப்பதால்) கெட்டவர்கள் வர அஞ்சுவார்கள்;

நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் - உலகில் நல்லவர்களுக்கு நல்ல துணை;

காவலர் - பாதுகாப்போர் (watchmen);


சிவன்:

அரவம் மிக அல்லில் நடம் ஆடி - பல பாம்புகளை அணிந்து, இருளில் திருநடம் செய்பவர்;

வீடு புரத்துக் கோலோச்சுவார் - முக்தியை அருளிப், பக்தர்களை ஆள்பவர்;

தீயார் - (கையில்) தீயை ஏந்தியவர்;

வரம் அருள்வார் - வரங்கள் கொடுப்பார்;

நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் - உலகில் அடியவர்களுக்கு நல்ல துணை ஆவார்;

கற்றைச்சடை ஈசர் - கற்றையாகத் திகழும் சடையை உடைய சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.113 – கயிலாயம் - பொருளை நினைத்து - (வண்ணம்)

03.05.113 – கயிலாயம் - பொருளை நினைத்து - (வண்ணம்)

2009-02-23

3.5.113) பொருளை நினைத்து - (கயிலாயம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனனத் .. தனதான )

(இரவுபகற் பலகாலும் - திருப்புகழ் - திருவருணை)


பொருளைநினைத் .. ததனாலே

.. பொருமுமனத் .. தினனாகிப்

பெருமிடியுற் .. றுழலாமல்

.. பிறையவுனைத் .. தொழுவேனோ

கருதலர்முப் .. புரம்வேவக்

.. கணைதனையுய்த் .. தருள்வீரா

அருமறைமெய்ப் .. பொருளானாய்

.. அணிகயிலைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொருளை நினைத்து அதனாலே

.. பொருமு மனத்தினன் ஆகிப்,

பெரு-மிடி உற்று உழலாமல்,

.. பிறைய, உனைத் தொழுவேனோ;

கருதலர் முப்புரம் வேவக்

.. கணைதனை உய்த்து-அருள் வீரா;

அருமறை மெய்ப்பொருள் ஆனாய்;

.. அணி கயிலைப் பெருமானே.


பொருளை நினைத்து அதனாலே பொருமு மனத்தினன் ஆகிப் - நிலையில்லாத பொருளையே சதா எண்ணி அதனால் மனத்தில் பொறாமையும் துன்பமும் சேர; (பொருமுதல் - துன்புறுதல்; பொறாமைப்படுதல்);

பெரு மிடிற்றுழலாமல் - மிகுந்த வறுமையும் துன்பமும் அடைந்து வருந்தாமல்; (மிடி - துன்பம்; வறுமை);

பிறைய, னைத் தொழுவேனோ - பிறையை அணிந்தவனே, நான் உன்னைத் தொழுவேனோ? அருள்வாயாக; (பிறைய - பிறையனே - பிறைச்சந்திரனை அணிந்தவனே - என்ற விளி); (சம்பந்தர் தேவாரம் - 1.134.10 - "சடையன் பிறையன்");

கருதலர் முப்புரம் வேவக் கணைதனைய்த்து அருள் வீரா - பகைவர்களது முப்புரங்களும் வெந்து அழியும்படி ஒரு கணையை ஏவி அருளிய வீரனே; (கருதலர் - பகைவர்); (உய்த்தல் - ஆயுதம் பிரயோகித்தல்);

அருமறை மெய்ப்பொருள் ஆனாய் - அரிய வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருள் ஆனவனே;

அணி கயிலைப் பெருமானே - அழகிய கயிலையில் உறைகின்ற பெருமானே; (அணி - அழகு); (சம்பந்தர் தேவாரம் - 2.11.2 - "அந்தணர் சேரும் அணிகாழி எம்மானை");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.112 – கயிலாயம் - பெரிய வினைத்தொடர் - (வண்ணம்)

03.05.112 – கயிலாயம் - பெரிய வினைத்தொடர் - (வண்ணம்)

2009-02-23

3.5.112) பெரிய வினைத்தொடர் - (கயிலாயம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனனத் .. தனதான )

(இரவுபகற் பலகாலும் - திருப்புகழ் - திருவருணை)


பெரியவினைத் .. தொடர்போகப்

.. பிணைமலரிட் .. டிருபோதும்

பரிவுமிகுத் .. துனதாளைப்

.. பணியவெனக் .. கருளாயே

அரிபிரமற் .. கரியானே

.. அடியவருக் .. கெளியானே

கரியமிடற் .. றமுதேஎம்

.. கயிலைமலைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பெரிய வினைத்தொடர் போகப்,

.. பிணை-மலர் இட்டு இரு போதும்

பரிவு மிகுத்து உன தாளைப்

.. பணிய எனக்கு அருளாயே;

அரி பிரமற்கு அரியானே;

.. அடியவருக்கு எளியானே;

கரிய மிடற்று அமுதே; எம்

.. கயிலைமலைப் பெருமானே.


பெரிய வினைத்தொடர் போகப் - கொடிய வினையெல்லாம் நீங்குமாறு;

பிணை-மலர் இட்டு இரு போதும் பரிவு மிகுத்து உன தாளைப் பணிய எனக்கு அருளாயே - தொடுத்த மலர்களை இட்டு இருவேளையும் அன்போடு உன் திருவடியை நான் வழிபடுமாறு எனக்கு அருள்வாயாக; ("மலர்" = சொல்மலர் என்று கொண்டு, பிணைமலர் = பாமாலை என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (பிணைத்தல் - தொடுத்தல்); (இரு போதும் - (காலை மாலை / இரவு பகல்) இரு வேளையும்); (பரிவு - அன்பு; பக்தி); (உன தாள் - உனது திருவடி); (- ஆறாம் வேற்றுமை உருபு);

அரி பிரமற்கு அரியானே - திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாதவனே;

அடியவருக்கு எளியானே - பக்தர்களால் எளிதில் அடையப்படுபவனே;

கரிய மிடற்று அமுதே - நீலகண்டனே! அமுதம் போல்பவனே; (மிடறு - கண்டம்);

எம் கயிலைமலைப் பெருமானே - எம் கயிலைநாதனே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.111 – இடைமருதூர் - கருவம் மனத்து எழ நாளும் - (வண்ணம்)

03.05.111 – இடைமருதூர் - கருவம் மனத்து எ நாளும் - (வண்ணம்)

2009-02-23

3.5.111) கருவம் மனத்து எழ நாளும் - (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனனத் .. தனதான )

(இரவுபகற் பலகாலும் - திருப்புகழ் - திருவருணை)


கருவ(ம்)மனத் .. தெழநாளும்

.. கடுவினையைப் .. புரியாமல்

திருமலியத் .. தமிழாலே

.. திருவடியைப் .. புகழேனோ

உருவிலுமைக் .. கிடமீவாய்

.. ஒளிமதியைப் .. புனைவோனே

இருவினையைக் .. களைவோனே

.. இடைமருதிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

கருவம் மனத்து எழ, நாளும்

.. கடுவினையைப் புரியாமல்,

திரு மலியத் தமிழாலே

.. திருவடியைப் புகழேனோ;

உருவில் உமைக்கு இடம் ஈவாய்;

.. ஒளிமதியைப் புனைவோனே;

இருவினையைக் களைவோனே;

.. இடைமருதில் பெருமானே.


கருவம் மனத்து எழ நாளும் கடுவினையைப் புரியாமல் - மனத்தில் செருக்கு மிக, அதனால் தினமும் கொடிய செயல்களைச் செய்து உழலாமல்; (கருவம் - கர்வம்; செருக்கு); (கடுமை - கொடுமை);

திரு மலியத் தமிழாலே திருவடியைப் புகழேனோ - திரு மிகும்படி தேவாரம் முதலிய தமிழ்ப்பாமாலைகளால் உன் திருவடியைப் புகழ்வேனோ? அருள்வாயாக; (திரு - செல்வம்; பாக்கியம்; தெய்வத்தன்மை); (மலிதல் - மிகுதல்); (திருமலியத் தமிழாலே - 1. திரு மலியத் தமிழாலே; 2. திரு மலி அத்-தமிழாலே; "திரு மலி அத்-தமிழ்" = தேவாரம் திருவாசகம் முதலியன);

உருவில் உமைக்கு இடம் ஈவாய் - திருமேனியில் இடப்பாகத்தை உமைக்கு அளித்தவனே; (உரு - மேனி; வடிவு);

ஒளிமதியைப் புனைவோனே - ஒளி திகழும் சந்திரனை அணிந்தவனே; (அப்பர் தேவாரம் - 5.24.1 - "ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை");

இருவினையைக் களைவோனே - பக்தர்களது இருவினையைத் தீர்ப்பவனே; (இருவினை - புண்ணிய பாவங்கள்);

இடைமருதில் பெருமானே - திருவிடைமருதூரில் எழுந்தருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Friday, August 7, 2020

03.05.110 – இடைமருதூர் - சரிவழியைக் கருதாமல் - (வண்ணம்)

03.05.110 – இடைமருதூர் - சரிவழியைக் கருதாமல் - (வண்ணம்)

2009-02-23

3.5.110) சரிவழியைக் கருதாமல் - (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனனத் .. தனதான )

(இரவுபகற் பலகாலும் - திருப்புகழ் - திருவருணை)


சரிவழியைக் .. கருதாமல்

.. தவறுகளைத் .. தவிராமல்

திரியுமனத் .. தமியேனும்

.. தெளிவுதனைப் .. பெறுவேனோ

தெரிவைதனக் .. கிடமீவாய்

.. சிலைவளைவித் .. தரண்வேவ

எரிகணையைத் .. தொடுவோனே

.. இடைமருதிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

சரி வழியைக் கருதாமல்,

.. தவறுகளைத் தவிராமல்,

திரியும் மனத் தமியேனும்

.. தெளிவுதனைப் பெறுவேனோ;

தெரிவைதனக்கு இடம் ஈவாய்;

.. சிலை வளைவித்து அரண் வேவ

எரி கணையைத் தொடுவோனே;

.. இடைமருதில் பெருமானே.


சரி வழியைக் கருதாமல் - நல்ல வழியிற் செல்ல எண்ணாமல்;

தவறுகளைத் தவிராமல் - குற்றங்களை நீங்காமல்;

திரியும் மனத் தமியேனும் - அலைகின்ற மனத்தையுடைய கதியற்ற நானும்; (திரிதல் - அலைதல்; வேறுபடுதல்; கெடுதல்; மயங்குதல்); (தமியேன் - கதியற்ற நான்);

தெளிவுதனைப் பெறுவேனோ - தெளிவைப் பெறுவேனோ? அருள்வாயாக;

தெரிவைதனக்கு இடம் ஈவாய் - உமைக்குத் திருமேனியில் இடப்பக்கத்தை அளித்தவனே; (தெரிவை - பெண் - உமை); (இடம் - இடப்பக்கம்);

சிலை வளைவித்து அரண் வேவ எரி கணையைத் தொடுவோனே - வில்லை வளைத்து முப்புரங்களும் வெந்து அழியும்படி சுடுகின்ற அம்பை எய்தவனே; (சிலை - வில்; மலை); (வளைவித்தல் - வளைத்தல்);

இடைமருதில் பெருமானே - திருவிடைமருதூரில் எழுந்தருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.109 – ஆனைக்கா - கூலிக்கே நித்தலும் ஆடி - (வண்ணம்)

03.05.109 – ஆனைக்கா - கூலிக்கே நித்தலும் ஆடி - (வண்ணம்)

2009-02-13

3.5.109) கூலிக்கே நித்தலும் ஆடி - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


கூலிக் கேநித் .. தலுமாடிக்

.. கூனிச் சீவித் .. தழியாமல்

பாலிப் பாயைத் .. தமிழாலே

.. பாடிப் பாடிப் .. பணிவேனே

போலிப் பூசைக் .. கரியானே

.. போதத் தாருக் .. கெளியானே

ஆலித் தோடிப் .. புனல்சூழும்

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

கூலிக்கே நித்தலும் ஆடிக்

.. கூனிச் சீவித்து அழியாமல்,

பாலிப்பாயைத் தமிழாலே

.. பாடிப் பாடிப் பணிவேனே;

போலிப் பூசைக்கு அரியானே;

.. போதத்தாருக்கு எளியானே;

ஆலித்து ஓடிப் புனல் சூழும்

.. ஆனைக்காவில் பெருமானே.


கூலிக்கே நித்தலும் ஆடிக், கூனிச் சீவித்து அழியாமல் - பணத்திற்காகவே எப்பொழுதும் செயல்பட்டுத், தகுதியற்றவர்களுக்குக் குனிந்து அடிபணிந்து வாழ்ந்து அழியாமல்; (கூனுதல் - வளைதல்; முதுகுவளைதல்); (சீவித்தல் - உயிர்வாழ்தல்; ஜீவனம் பண்ணுதல்);

பாலிப்பாயைத் தமிழாலே பாடிப் பாடிப் பணிவேனே - காக்கின்ற உன்னைத் தமிழால் பலவாறு பாடித் தொழுவேன்; (பாலித்தல் - காத்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.34.1 – "தம்மையே புகழ்ந் திச்சை பேசினுஞ் சார்கினுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதே யெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்");

போலிப் பூசைக்கு அரியானே - (உண்மையான பக்தி இல்லாத) போலிப் பூசை செய்பவர்களால் அடையப்படாதவனே; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.90.9 - "பொக்க(ம்) மிக்கவர் பூவு(ம்) நீருங் கண்டு நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே);

போதத்தாருக்கு எளியானே - ஞானிகளால் எளிதில் அடையப்படுபவனே; (போதம் - ஞானம்; அறிவு);

ஆலித்து ஓடிப் புனல் சூழும் ஆனைக்காவில் பெருமானே - சப்தமிட்டு ஓடிக் காவிரி சூழ்கின்ற திருவானைக்காவில் எழுந்தருளிய பெருமானே; (ஆலித்தல் - ஒலித்தல்); (புனல் - நீர் - இங்கே, காவிரி);

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.108 – ஆனைக்கா - தேவைக்காகச் சிறியாரை - (வண்ணம்)

03.05.108 – ஆனைக்கா - தேவைக்காகச் சிறியாரை - (வண்ணம்)

2009-02-13

3.5.108) தேவைக்காகச் சிறியாரை - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


தேவைக் காகச் .. சிறியாரைத்

.. தேடிச் சேவித் .. திழியாமல்

பாவைப் பாடிப் .. பரமாநின்

.. பாதப் போதைப் .. பணிவேனே

பாவைக் காகத் .. திடமீவாய்

.. பாசத் தோடப் .. படர்சூழும்

ஆவற் காலத் .. தருள்வோனே

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

தேவைக்காகச் சிறியாரைத்

.. தேடிச் சேவித்து இழியாமல்,

பாவைப் பாடிப், பரமா, நின்

.. பாதப்-போதைப் பணிவேனே;

பாவைக்கு ஆகத்து இடம் ஈவாய்;

.. பாசத்தோடு அப்-படர் சூழும்

ஆவற்காலத்து அருள்வோனே;

.. ஆனைக்காவில் பெருமானே.


தேவைக்காகச் சிறியாரைத் தேடிச் சேவித்து இழியாமல் - உலக வாழ்வின் தேவைகளுக்காக அற்பரை நாடிப் போய் வணங்கி அவர்கள் இட்ட பணியைச் செய்து இழிவுபடாமல்; (சேவித்தல் - பணிசெய்தல்; வணங்குதல்);

பாவைப் பாடிப், பரமா, நின் பாதப்-போதைப் பணிவேனே - பரமனே, பாமாலைகளைப் பாடி உன் திருவடித் தாமரையைத் தொழுவேன்; (பா - பாட்டு); (போது - மலர்); (திருவாசகம் - திருச்சதகம்-26 - "நாயினேன்றன் கண்ணிணை நின் திருப்பாதப் போதுக் காக்கி");

பாவைக்கு ஆகத்து இடம் ஈவாய் - உமைக்குத் திருமேனியில் இடப்பக்கத்தைத் தந்தவனே; (பாவை - பெண் - உமை); (ஆகம் - உடம்பு); (இடம் - இடப்பக்கம்);

பாசத்தோடு அப்-படர் சூழும் ஆவற்காலத்து அருள்வோனே - அந்த எமதூதர்கள் வந்து பாசம் வீசி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இறுதிநாளில் "அஞ்சேல்" என்று அருள்பவனே; (படர் - எமதூதர்); (ஆவற்காலம் - ஆபத் காலம் - ஆபத்துண்டாங்காலம்; இறுதிநாள்);

ஆனைக்காவில் பெருமானே - திருவானைக்காவில் எழுந்தருளிய பெருமானே;

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.107 – ஆனைக்கா - ஈனப் பாவப் பணிமேவி - (வண்ணம்)

03.05.107 – ஆனைக்கா - ஈனப் பாவப் பணிமேவி - (வண்ணம்)

2009-02-13

3.5.107) ஈனப் பாவப் பணிமேவி - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


ஈனப் பாவப் .. பணிமேவி

.. ஈறுற் றீமத் .. தெரியாமுன்

நானற் றாளைப் .. புகழ்மாலை

.. நாவிற் சூடிப் .. பிழையேனோ

வானத் தேமுப் .. புரநூற

.. வாய்விட் டேநக் .. கவனேயோர்

ஆனைத் தோலைப் .. புனைவானே

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

ஈனப் பாவப் பணி மேவி,

.. ஈறு உற்று ஈமத்து எரியாமுன்,

நான் நற்றாளைப் புகழ்மாலை

.. நாவிற் சூடிப் பிழையேனோ;

வானத்தே முப்புரம் நூற

.. வாய்விட்டே நக்கவனே; ஓர்

ஆனைத் தோலைப் புனைவானே;

.. ஆனைக்காவில் பெருமானே.


ஈனப் பாவப் பணி மேவி - இழிந்த பாவச் செயல்களையே விரும்பிச் செய்து; (ஈனம் - இழிவு); (மேவுதல் - விரும்புதல்);

ஈறு உற்று ஈமத்து எரியாமுன் - (காலம் ஓடி) இறந்து, சுடுகாட்டில் எரிக்கப்படுவதன்முன்; (ஈறு - மரணம்; முடிவு); (ஈமம் - சுடுகாடு; சிதை);

நான் நற்றாளைப் புகழ்மாலை நாவில் சூடிப் பிழையேனோ - உன் நல்ல திருவடியைப் புகழும் பாமாலைகளை நான் என் நாவில் தரித்து உய்ய அருள்வாயாக; (சூடுதல் - தரித்தல்; அணிதல்); (பிழைத்தல் - உய்தல்);

வானத்தே முப்புரம் நூற வாய்விட்டே நக்கவனே - வானில் முப்புரங்களும் அழியும்படி வாய்விட்டுச் சிரித்தவனே; (நூறுதல் - அழித்தல்); (வாய்விடுதல் - உரக்கச் சத்தமிடுதல்); (நகுதல் - சிரித்தல்);

ஓர் ஆனைத் தோலைப் புனைவானே - ஒரு பெரிய யானையின் தோலைப் போர்த்தவனே; (புனைதல் - அணிதல்);

ஆனைக்காவில் பெருமானே - திருவானைக்காவில் எழுந்தருளிய பெருமானே;

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------