03.04 – சிவன் சிலேடைகள்
2006-04-19
3.4.35 - சிவன் - மூன்று - சிலேடை
-------------------------------------------------------------
எண்ணில் இரண்டொன்று கூடிவரும் எவ்வித
வண்ணமும் ஆகும் வகுப்பதற் கொண்ணாமை
காட்டிடும் காலங் கடந்திடும்பு ரங்களில்தீ
மூட்டிய மேருவில்லி மூன்று.
சொற்பொருள்:
எண்ணில் - 1. எண்களில்; / 2. சிந்தித்தால்;
இரண்டொன்று கூடி - 1. இரண்டும் ஒன்றும் கூடி - (உம்மைத்தொகை); / 2. இரண்டு ஒன்றுகூடி;
ஒன்றுகூடுதல் - ஒன்றாய்ச்சேர்தல்;
வண்ணம் - 1. நிறம்; / 2. குணம்;
வகுத்தல் - 1. பகுத்தல் (divide); / 2. இனம் பிரித்தல்;
காலங்கடந்திடும் - 1. காலங்கள் தந்திடும்; / 2. காலம் கடந்திடும்;
மூன்று:
எண்ணில் இரண்டு ஒன்று கூடி வரும் - எண்களில் இரண்டும் ஒன்றும் சேர்ந்து வருவது.
எவ்வித வண்ணமும் ஆகும் - எல்லா நிறங்களும் மூன்று அடிப்படை நிறங்களின் கலவையால் கிடைக்கும்.
வகுப்பதற்கு ஒண்ணாமை காட்டிடும் - வகுக்க முடியாத எண் (prime number).
காலங்கள் தந்திடும் - காலங்கள் மூன்று ஆகும்.
மூன்று - மூன்று என்ற எண்.
சிவன்:
எண்ணில் இரண்டு ஒன்று கூடி வரும் - தியானித்தால் சிவனும் பார்வதியும் ஒன்றாக இணைந்து அர்த்தநாரீஸ்வரனாகக் காட்சிதருவான்;
எவ்வித வண்ணமும் ஆகும் - எல்லாக் குணங்களும் உடையவன்;
வகுப்பதற்கு ஒண்ணாமை காட்டிடும் - (அவன் அவள் அது என்று) வகைப்படுத்த இயலாதவன்; (அப்பர் தேவாரம் - 6.97.10 - "அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே");
காலம் கடந்திடும் - காலத்தைக் கடந்தவன்;
புரங்களில் தீ மூட்டிய மேருவில்லி - முப்புரங்களில் தீ மூட்டிய, மேருமலையை வில்லாக ஏந்திய, சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment