03.04 – சிவன் சிலேடைகள்
2006-04-20
3.4.36 - சிவன் - சோறு - சிலேடை
-------------------------------------------------------------
மூன்று முறைநாள்நாம் வேண்டுவதால் பாலினில்
தோன்றுதயிர் ஆடுவதால் தூயமலை போன்றவுருத்
தோன்ற இலையிடச் சொல்வதால் ஏறேறு
தோன்றல் பசிதீர்க்கும் சோறு.
சொற்பொருள்:
நாள் - நாளும்; (உம்மைத்தொகை);
வேண்டுதல் - 1. இன்றியமையாததாதல்; தேவைப்படுதல்; / 2. வணங்குதல்; பிரார்த்தித்தல்;
ஆடுதல் - குளித்தல்; அபிஷேகம் பெறுதல்;
தோன்றுதல் - 1. உண்டாதல்; / 2. கண்ணுக்குப் புலப்படுதல்; அறியப்படுதல்;
ஏறு - இடபம்;
ஏறுதல் - மேலே ஏறுதல்; ஏறிச் செலுத்துதல்;
தோன்றல் - தலைவன்;
சோறு:
மூன்றுமுறை நாள் நாம் வேண்டுவதால் - தினமும் மூன்று வேளை நமக்குத் தேவைப்படுகிறது;
பாலினில் தோன்று-தயிர் ஆடுவதால் - பாலில் உண்டாகும் தயிரில் குளிக்கும் (தயிர்சோறு);
தூய-மலை போன்ற உருத் தோன்ற இலை இடச் சொல்வதால் - இலையில் இடும்படி சொல்வோம்; அப்படி அதனை இடும்போது தூய வெண்மலை போன்ற வடிவம் தோன்றும்;
பசி தீர்க்கும் சோறு - நம் பசியத் தீர்க்கின்ற சோறு;
சிவன்:
மூன்றுமுறை நாள் நாம் வேண்டுவதால் - (பக்தர்கள்) தினமும் மூன்று வேளை வணங்குவார்கள். (சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுபதஞ் சொல்லி");
பாலினில் தோன்று-தயிர் ஆடுவதால் - பாலில் உண்டாகும் தயிரால் அபிஷேகம் உண்டு.
தூய-மலை போன்ற உருத் தோன்ற இலை இடச் சொல்வதால் - தூய பவளமலை போன்ற திருவுரு உடைய சிவபெருமான் காட்சிதர வேண்டுமானால் (வில்வம், வன்னி முதலிய) இலைகளைத் தூவி வழிபடுங்கள் என்று (பெரியோர்) சொல்வர்; (திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.2 - "அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே");
ஏறு ஏறு தோன்றல் - இடபவாகனம் உடைய தலைவன்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------