01.05 - பொது - "சிவன் பேர் செப்பும் என் நா"
2007-11-13
பொது
"சிவன் பேர் செப்பும் என் நா"
-----------------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.)
1)
பெற்ற(து) எல்லாம் என்னால் என்று பெருமை பேசியது
குற்றம் என்(று)அ றிந்தேன்; தில்லைக் கூத்தா; உன்கழலே
உற்ற துணைஎன்(று) இன்(று)உ ணர்ந்தேன்; ஓடி வரும்எமனைச்
செற்ற சிவனே; மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
செற்ற
-
அழித்த;
(செறுதல்
-
அழித்தல்);
2)
எல்லை இல்லா ஆசைக் கடலை என்றன் அகந்தையெனும்
கல்லைக் கட்டிக் கொண்டு கடக்கக் கருதித் துயருற்றேன்;
தொல்லை போக்கித் துணையாய் வரும்உன் தூய கழல்என்றே,
தில்லைச் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
தொல்லை
-
துன்பம்;
3)
உய்யும் வழியை உணரா(து) இந்த உலகில் உழன்றுநிதம்
பொய்யும் புரட்டும் பேசி வாழ்வில் பொருளைத் தேடிமனம்
தொய்யும் நிலையை மாற்றப், புரங்கள் சுட்டு நீறாகச்
செய்யும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
நீறு
-
சாம்பல்;
4)
பேரும் புகழும் விரும்பித் தினமும் பெரிதும் உற்றதுயர்
தீரும் வழிஉன் திருத்தாள் என்று தெரிந்து கொண்டேனே;
பாரும் விண்ணும் படைத்தாய்; முடிமேல் பாம்பும் பிறைமதியும்
சேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
பாரும்
விண்ணும் படைத்தாய்
-
பூமியையும்
வானுலகையும் படைத்தவனே;
5)
ஆரும் இங்கே துணைஆ கார்என்(று) அறியா(து) உழன்றிருந்தேன்;
நேரும் இடர்கள் நீக்கிக் காப்பாய் நீஎன்(று) இன்றுணர்ந்தேன்;
நீரும் நிலவும் அரவும் முடிமேல் நிலவ இடத்திலுமை
சேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
நேர்தல்
-
நிகழ்தல்;
சம்பவித்தல்;
6)
ஓரும் அடியார் தங்கள் வினையை ஓட்டும் வழிஆனாய்;
ஊரும் அரவும் பிறையும் சடைமேல் உடையாய்; நறுங்கொன்றைத்
தாரும் அணிந்து, கையில் பிரமன் தலையில் இடுபிச்சை
தேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
ஓரும்
-
தியானிக்கும்;
(ஓர்தல்
-
எண்ணுதல்);
நறுங்கொன்றை-
மணம்
கமழும் கொன்றைமலர்;
தார்
-
மார்பில்
அணியும் மாலை;
தேர்தல்
-
கொள்ளுதல்
(To
acquire, obtain);
7)
பார்க்கும் பொருள்கள் எல்லாம் ஆன பரமா; பணியாத
ஆர்க்கும் காண இயலா அரனே; அரவு மதியோடு
நீர்க்கும் முடிமேல் இடம்தந் தருளும் நிமலா; எவ்வினையும்
தீர்க்கும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
ஆர்க்கும்
-
யாருக்கும்;
(ஆர்
=
யார்);
8)
வானே வழியாய்ச் செல்லும் தன்தேர் மலையால் தடைப்படவும்,
நானே வலியன் என்று மலையை நகர்த்த முயல்இலங்கைக்
கோனே அலற நசுக்கிப் பின்வாள் கொடுத்த பெருமானே;
தேனே; சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
வலியன்
-
வலிமையுள்ளோன்
(Strong,
powerful man);
முயல்இலங்கைக்கோன்
-
முயன்ற
இலங்கைமன்னன் இராவணன்;
வாள்
-
சந்திரஹாஸம்
என்ற வாள்;
9)
ஆடும் கடலில் பாம்புப் படுக்கை அதன்மேல் துயில்பவனும்
ஏடும் மணமும் மிகுந்த கமலத்(து) இருக்கும் நான்முகனும்
வாடும் படிநீ தீயாய் நிற்க, வானில் மண்ணிலவர்
தேடும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
ஏடு
-
பூவிதழ்
(Petal);
10)
அல்லும் பகலும் வேத வழியை அகன்று விடுமாறு
சொல்லும் அவர்கள் அறியா மெய்யே; தொடரும் வினையையெலாம்
வெல்லும் வழியைக் காட்டும் முக்கண் வேந்தே; ஏற்றின்மேல்
செல்லும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
11)
பூவா இலையா என்னா(து), அடியைப் போற்றும் அன்பருக்குச்
சாவா நிலைதந் தருளும் முக்கண் தந்தை நீயலையோ;
மூவா முதலே; முடிவாம் பொருளே; முன்னர் நஞ்சுண்ட
தேவா; சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
முக்கட்
டந்தை
-
முக்கண்
தந்தை;
நீயலையோ
-
நீ
அல்லையோ -
நீயன்றோ?
மூவா
-
மூப்பு
இல்லாத;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
படிக்க எளிமையாக இருப்பதற்காக இப்பாடல்களில் சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. அவ்விடங்களில் முதற்சொல்லின் கடைசி எழுத்து அடைப்புக்குறிகளுக்குள் காட்டப்பட்டுள்ளது.