Saturday, May 10, 2025

V.042 - சிவாஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

2017-08-06

V.042 - சிவாஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

---------------------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(தனானா தனானா தனானா தனானா - சந்தம்; இந்தச் சந்தத்தை வடமொழியில் புஜங்கம் என்பர்)


* முற்குறிப்பு : சிவாஷ்டகங்கள் சில உள்ளன. அவற்றுள் "ப்ரபும் ப்ராணநாதம்" என்று தொடங்கும் சிவாஷ்டகம் பலரும் கேட்டுள்ள / கேள்விப்பட்டுள்ள ஒன்று. பல துதிப்பாடல்களில் நிகழ்வதுபோல இதனிலும் சில பாடபேதங்கள் உள்ளன. இந்தச் சிவாஷ்டகம் வடமொழியில் புஜங்கம் என்ற யாப்பமைப்பில் உள்ளது.

இந்தச் சிவாஷ்டகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாக அதே புஜங்கச் சந்தத்தில் அமைந்த அஷ்டகம் இது.


1)

பிரானெம்மு யிர்க்கோன் அகன்ஞால நாதன்

முராரிக்கு மையன் அறாவின்ப னாகி

இராவிற்கு மப்பால் உளன்பூத நாதன்

.. சிவன்சங்க ரன்சம் புதாள்போற்றி போற்றி.


பதம் பிரித்து:

பிரான்; எம் உயிர்க்-கோன்; அகன் ஞால நாதன்;

முராரிக்கும் ஐயன்; அறா இன்பன் ஆகி,

இராவிற்கும் அப்பால் உளன்; பூத-நாதன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பிரான் - தலைவன்;

எம் உயிர்க்-கோன் - எம் உயிர்க்குத் தலைவன்;

அகன் ஞால நாதன் - அகன்ற உலகங்களுக்குத் தலைவன்; (ஞாலம் - உலகம்);

முராரிக்கும் ஐயன் - திருமாலுக்கும் தலைவன்; (முராரி - முரன் என்ற அசுரனைக் கொன்றவன் - திருமால்);

அறா இன்பன் ஆகி - என்றும் தீராத, அழியாத பேரின்ப வடிவன் ஆகி; (அறுதல் - இல்லாமற் போதல்; தீர்தல்);

இராவிற்கும் அப்பால் உளன் - காலத்தைக் கடந்தவன்; அன்றும் இன்றும் என்றும் உள்ளவன்; (இரா - இரவு - மஹா சம்ஹார காலம்); (அற்புதத் திருவந்தாதி - 11.4.25 - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும்");

பூத-நாதன் - பூதகணங்களுத் தலைவன்;

சிவன் சங்கரன் சம்பு - ஈசன் திருநாமங்கள்;

தாள் போற்றி போற்றி - திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


2)

சிரங்கள்பு னைந்தான் அராவார்ந்த ஆகன்

இருங்கூற்று தைத்தான் விசும்போர்ப்பு ரந்தான்

பெருங்கங்கை மோதும் படர்செஞ்ச டைக்கோன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

சிரங்கள் புனைந்தான்; அரா ஆர்ந்த ஆகன்;

இருங்கூற்று உதைத்தான்; விசும்போர்ப் புரந்தான்;

பெருங்கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


சிரங்கள் புனைந்தான் - தலைமாலை அணிந்தவன்; (சிரம் - தலை; கபாலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.44.2 - "கனல்சுடரால் இவர் கண்கள் தலையணி சென்னியர்");

அரா ஆர்ந்த ஆகன் - பாம்புகளை உடம்பில் அணிந்தவன்; (அரா - பாம்பு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; அணிதல்); (ஆகம் - உடம்பு);

இரும்-கூற்று உதைத்தான் - பெரிய கரிய நமனை உதைத்தவன்; (இருமை - பெருமை; கருமை); (அப்பர் தேவாரம் - 6.85.6 - "பெருங்கூற்றைச் சேவடியினால் செற்றவன்காண்"); (அப்பர் தேவாரம் - 4.109.1 - "இருங்கூற்றகல"); (குலோத்துங்க சோழனுலா - "பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன்");

விசும்போர்ப் புரந்தான் - தேவர்களைக் காப்பவன்; (விசும்பு - வானுலகு; விசும்போர் - தேவர்கள்): (புரத்தல் - காத்தல்; பாலனம் செய்தல்; அருள்செய்தல்); (புரந்தான் என்ற இறந்தகாலப் பிரயோகம் - சில பாடல்களில் அது போல இறந்தகாலப் பிரயோகம் வருவதுண்டு. உதாரணம்: அப்பர் தேவாரம் - 6.68.7 - "தொண்டர் வல்வினைவே ரறும்வண்ணம் மருந்துமாகித் தீர்த்தானை"); (இலக்கணக் குறிப்பு - "விசும்போர்ப் புரந்தான்" - உயர்திணையில் இரண்டாம்-வேற்றுமைத்தொகையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);

பெரும்-கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன் - பெரிய கங்கைநதியின் அலைகள் மோதுகின்ற, படர்ந்த செஞ்சடையை உடைய தலைவன்;

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


3)

மகிழ்ச்சிக்கொ ரூற்றாய் மணிக்குள்மி ளிர்ந்தான்

நிகர்ப்பில்லி அண்டன் பொடிப்பூசு மண்ணல்

தகர்ப்பான்ம யக்கம் வரம்பாதி இல்லான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

மகிழ்ச்சிக்கொர் ஊற்றாய், மணிக்குள் மிளிர்ந்தான்;

நிகர்ப்பில்லி; அண்டன்; பொடிப்-பூசும் அண்ணல்;

தகர்ப்பான் மயக்கம்; வரம்பு-ஆதி இல்லான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


மகிழ்ச்சிக்கு ஒர் ஊற்று ஆய் - ஒப்பற்ற இன்ப ஊற்று ஆகி; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்; ஓர் - ஒப்பற்ற);

மணிக்குள் மிளிர்ந்தான் - அழகுக்கு அழகுசெய்து திகழ்பவன்; (மணி - நவரத்தினங்கள்; ஆபரணம்; அழகு); (மிளிர்தல் - பிரகாசித்தல்); ("மணிக்குள் மிளிர்ந்தான்" - மணியுள் மிளிர்ந்தான் என்பது சந்தம் கருதி இப்படி வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.6.7 - "சோதியாய் நிறைந்தான் சுடர்ச்-சோதியுட் சோதியான்"); (அபிராமி அந்தாதி - 24 - "மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கு அழகே");

நிகர்ப்பு-இல்லி, அண்டன் - ஒப்பற்றவன், அண்டன்; (நிகர்ப்பு - ஒப்பு); (அண்டன் - பிரபஞ்சத்தின் தலைவன்);

பொடிப் பூசும் அண்ணல் - திருநீற்றைப் பூசிய பெருமான்; (பொடிப்பூசு, பொடிபூசு - என்று இருவகைப் பிரயோகங்களையும் தேவாரத்தில் காணலாம். இவ்விடத்தில் சந்தம் கருதிப், "பொடிப்பூசு" என்ற பிரயோகம்); (சம்பந்தர் தேவாரம் - 1.135.7 - "வெண்பொடிப்பூசுவர்");

தகர்ப்பான் மயக்கம் - அறியாமையை அழிப்பவன்;

வரம்பு ஆதி இல்லான் - எல்லையும் முதலும் அற்றவன்; (வரம்பு - எல்லை);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


4)

புரம்வேவ நக்கான் அறஞ்சொல்லு மாலன்

அரும்பாவ நாசன் வளம்பொங்கு தேசன்

பெருந்தேவ தேவன் கணம்போற்று வெற்பன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

புரம் வேவ நக்கான்; அறம் சொல்லும் ஆலன்;

அரும் பாவ நாசன்; வளம் பொங்கு தேசன்;

பெருந்தேவ தேவன்; கணம் போற்று வெற்பன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


புரம் வேவ நக்கான் - முப்புரங்கள் எரியும்படி சிரித்தவன்;

அறம் சொல்லும் ஆலன் - மறைப்பொருளைக் கல்லால-மரத்தின்கீழ் உபதேசித்தவன்;

அரும்-பாவ-நாசன் - தீர்த்தற்கு அரிய பாவங்களை எல்லாம் அழிப்பவன்;

வளம் பொங்கு தேசன் - மேன்மை பொங்குகின்ற ஒளிவடிவினன்;

பெரும்-தேவதேவன் - மஹாதேவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன்;

கணம் போற்று வெற்பன் - பூதகணங்கள் எல்லாம் போற்றுகின்ற கயிலைமலையான்; (வெற்பு - மலை); (அப்பர் தேவாரம் - 4.111.2 - "விஞ்சத் தடவரை வெற்பா");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


5)

மலைப்பாவை ஆகத் திடப்பாக மானான்

அலைப்புண்ட டைந்தார் அலம்தீர்பொ ருப்பன்

கலைப்பாவை கேள்வன் சுரர்போற்று மேலோன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

மலைப்-பாவை ஆகத்து இடப்-பாகம் ஆனான்;

அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன்;

கலைப்-பாவை கேள்வன், சுரர் போற்று மேலோன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


மலைப்பாவை ஆகத்து இடப்பாகம் ஆனான் - தன் திருமேனியில் இடப்பாகமாக மலைக்கு மகளான உமையை உடையவன்; (ஆகம் - மேனி);

அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன் - மிக-வருந்தி வந்து தன்னைச் சரணடைந்தவர்களது துன்பத்தைத் தீர்த்து அருளும் கயிலாயன்; (அலைப்பு - வருத்தம்); (அலம் - துன்பம்); (பொருப்பு - மலை);

கலைப்பாவை கேள்வன் சுரர் போற்று மேலோன் - சரஸ்வதி கணவனான பிரமனாலும் பிற தேவர்களாலும் வணங்கப்பெறுகின்ற பரம்பொருள்; (கலைப்பாவை - கலைமகள் - சரஸ்வதி); (கேள்வன் - கணவன்); (சுரர் - தேவர்);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


6)

கரத்திற்க பாலம் சுடர்சூல மேந்தி

வரத்தைக்கொ டுப்பான் மலர்த்தாள்வ ணங்கில்

சுரர்க்கோர்பி ரான்தான் பெரும்பெற்ற மூர்ந்தான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

கரத்தில் கபாலம், சுடர்-சூலம் ஏந்தி;

வரத்தைக் கொடுப்பான் மலர்த்-தாள் வணங்கில்;

சுரர்க்கோர் பிரான் தான்; பெரும் பெற்றம் ஊர்ந்தான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


கரத்தில் கபாலம், சுடர் சூலம் ஏந்தி - கையில் கபாலத்தையும், (நெருப்பையும்), ஒளிவீசும் சூலத்தையும் ஏந்தியவன்; (சுடர்தல் - பிரகாசித்தல்); (சுடர் - நெருப்பு);

வரத்தைக் கொடுப்பான் மலர்த்தாள் வணங்கில் - தாமரைத்திருவடியை வணங்கினால் விரும்பிய வரங்களையெல்லாம் தருபவன்;

சுரர்க்கு ஓர் பிரான் தான் - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவன் அவன்; (தான் - அவன்; தேற்றச்சொல்லாகவோ அசைச்சொல்லாகவோ கொண்டும் பொருள்கொள்ளலாம்);

பெரும்-பெற்றம் ஊர்ந்தான் - பெரிய விடையை வாகனமாக உடையவன்; (பெற்றம் - இடபம்); (சம்பந்தர் தேவாரம் - 2.80.1 - "பெரிய விடைமேல் வருவார்"); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "பெற்றமூர்ந்த பிரமாபுர மேவிய பெம்மானிவனன்றே");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


7)

சுடர்ச்சோதி ஆகன் கணங்கட்கி னிப்பான்

சுடர்க்கண்ண னீற்றன் குபேரற்கு நண்பன்

மடப்பாவை கேள்வன் திகழ்கின்ற மெய்யன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

சுடர்ச்-சோதி ஆகன்; கணங்கட்கு இனிப்பான்;

சுடர்க்-கண்ணன்; நீற்றன்; குபேரற்கு நண்பன்;

மடப்-பாவை கேள்வன்; திகழ்கின்ற மெய்யன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


சுடர்ச்-சோதி ஆகன் - சந்திரனது ஒளி போலக் குளிர்ந்த ஒளி திகழும் திருமேனியன்; (சுடர் - சந்திரன்); (சோதி - ஒளி; கிரணம்); (ஆகம் - மேனி);

கணங்கட்கு இனிப்பான் - பூதகணங்களுக்கும் அன்பர் கூட்டங்களுக்கும் இன்பம் தருபவன்; (கணம் - பூதகணம்; கூட்டம்); (இனித்தல் - தித்தித்தல்); (அப்பர் தேவாரம் - "பத்திசெய் வித்தகர்க்கு அண்ணித்தாகும் அமுதினை" - அண்ணித்தாகும் - இனிக்கும்);

சுடர்க்கண்ணன் - தீயை (நெற்றிக்) கண்ணில் உடையவன்; சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று சுடர்களை மூன்று கண்களாக உடையவன்; (சுடர் - சூரியன்; சந்திரன்; நெருப்பு); (அப்பர் தேவாரம் - 6.90.1 - "மூன்றுசுடர்க் கண்ணானை"); (அப்பர் தேவாரம் - 6.98.4 - " சுடர்நயனச் சோதியையே தொடர்வுற்றோமே");

நீற்றன் - திருநீற்றைப் பூசியவன்; (திருநீறு - தூய்மையைக் குறிப்பது); (சம்பந்தர் தேவாரம் - 2.66.7 - "சுத்தமதாவது நீறு");

குபேரற்கு நண்பன் - குபேரனுக்குத் தோழன்; (திருவிசைப்பா - 9.1.7 - "தனதன் நற்றோழா சங்கரா" - தனதன் - குபேரன் - धनदः - an epithet of Kubera);

மடப்பாவை கேள்வன் - உமாதேவி மணவாளன்;

திகழ்கின்ற மெய்யன் - என்றும் இருக்கும் மெய்ப்பொருள்; ஒளிவீசும் திருமேனியை உடையவன்; (திகழ்தல் - விளங்குதல்); (மெய் - உண்மை; உடல்);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


8)

அரன்பாம்ப ணிந்தான் மயானத்தி லாடி

பரன்வேத நாதன் பவன்மாற்ற மில்லான்

கருங்காடு றைந்தான் மதன்தன்னை அட்டான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

அரன்; பாம்பு அணிந்தான்; மயானத்தில் ஆடி;

பரன்; வேத நாதன்; பவன்; மாற்றம் இல்லான்;

கருங்காடு உறைந்தான்; மதன்-தன்னை அட்டான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


அரன் - ஹரன்;

பாம்பு அணிந்தான் - நாகத்தை மாலையாகப் பூண்டவன்;

மயானத்தில் ஆடி - மயானத்தில் சஞ்சரிப்பவன்; சுடுகாட்டில் கூத்தன்; (ஆடுதல் - சஞ்சரித்தல்; கூத்தாடுதல்);

பரன் - மேலானவன்;

வேத-நாதன் - வேதத்தலைவன்; வேதப்பொருள் ஆனவன்;

பவன் - என்றும் இருப்பவன்;

மாற்றம் இல்லான் - என்றும் மாறாமல் இருப்பவன் - மெய்ப்பொருள்;

கருங்காடு உறைந்தான் - சுடுகாட்டை வாழும் இடமாக உடையவன்; (கருங்காடு - சுடுகாடு); (சம்பந்தர் தேவாரம் - 2.38.2 - "வெண்டலைக் கருங்காடுறை வேதியன்");

மதன்தன்னை அட்டான் - மன்மதனைச் சுட்டெரித்தவன்; (அடுதல் - எரித்தல்); (அப்பர் தேவாரம் - 6.26.1 - "வன்கருப்புச்-சிலைக் காமன்-உடல் அட்டானை");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, May 6, 2025

P.406 - புகலூர் - கொடியில் எருதையுடை

2017-07-24

P.406 - புகலூர்

---------------------------------

(நாலடிமேல் ஈரடி வைப்பு - யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க)

முற்குறிப்புகள்:

1. படிப்போர் வசதிக்காகப் பாடல்களில் சில இடங்களில் சீர்களிடையே புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. புணர்ச்சியைக் கருத்திற்கொண்டு நோக்கினால் இப்பாடல்களில் சந்தம் கெடாமையை அறியலாம். உதாரணம்: அடிகள் அரவினொடு = அடிக ளரவினொடு; முடியில் நிலவுபுனை = முடியி னிலவுபுனை;

2. மேல்வைப்பாக வரும் இரண்டு அடிகளின் பொருளை முதற்பாடலின் விளக்கத்தில் காண்க. மற்றப் பாடல்களிலும் அதே மேல்வைப்பு அடிகளே வருகின்றன.


1)

கொடியில் எருதையுடை

அடிகள் அரவினொடு

முடியில் நிலவுபுனை ஈசன்

நெடிய கயிலைமலை வாசன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


கொடியில் எருதையுடை அடிகள் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய கடவுள்;

அரவினொடு முடியில் நிலவு புனை ஈசன் - திருமுடிமேல் பாம்பையும் திங்களையும் அணிந்த ஈசன்;

நெடிய கயிலைமலை வாசன் - உயர்ந்த கயிலைமலையில் உறைபவன்;

அரன் ஊர் அணி ஆர் புகலூரே - ஹரன் என்ற திருநாமம் உடைய சிவபெருமான் உறையும் தலம் அழகிய திருப்புகலூர்; (அணி - அழகு);

பரவிப் பணிவார் கவலாரே - அப்பெருமானைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்குக் கவலை இல்லை; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்);


2)

குயிலை அனையமொழி

கயலை அனையவிழி

மயிலை அனையவுமை பங்கன்

கயிலை மலையிலுறை துங்கன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


குயிலை அனைய மொழி, கயலை அனைய விழி, மயிலை அனைய உமை பங்கன் - குயில் போன்ற இன்மொழியும் கயல்மீன் போன்ற கண்ணும், மயில் போன்ற சாயலும் உடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்; (அனைய - ஒத்த);

கயிலைமலையில் உறை துங்கன் - கயிலைமலைமேல் உறைகின்ற பெரியோன்; (துங்கன் - உயர்ந்தவன்; பெரியோன்);


3)

கடலில் எழுகொடிய

விடமும் அமுதமென

மிடறு கருகவுண வல்லான்

கடையும் முதலுமவன் நல்லான்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


கடலில் எழு கொடிய விடமும் அமுதம் என, மிடறு கருக உண வல்லான் - பாற்கடலில் தோன்றிய கொடிய நஞ்சையும் அமுதம் என்று, கண்டம் கறுக்கும்படி உண்ண வல்லவன்;

கடையும் முதலும் அவன் நல்லான் - அந்தமும் ஆதியும் ஆனவன், நல்லவன்;


4)

கால காலனொரு

சூலம் ஏந்துமிறை

ஆல நீழலமர் அண்டன்

நீல வண்ணமணி கண்டன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


காலகாலன் - காலனுக்குக் காலன் ஆனவன்;

ஒரு சூலம் ஏந்தும் இறை - சூலபாணி;

ஆல-நீழல் அமர் அண்டன் - கல்லாலின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;

நீல வண்ணமணி கண்டன் - நீலநிற மணி திகழும் கண்டத்தை உடையவன்; (வண்ணமணி - 1. வண்ண மணி; / 2. வண்ணம் அணி);


5)

ஆற்றை அஞ்சடையில்

ஏற்ற முக்கணிறை

கூற்று மாளவுதை காலன்

ஏற்றன் ஆருலவு சூலன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


ஆற்றை அம்-சடையில் ஏற்ற முக்கண்-இறை - கங்கையை அழகிய சடையில் ஏற்ற முக்கட்பெருமான்;

கூற்று மாள உதை காலன் - நமனைக் காலால் உதைத்து அழித்தவன்;

ஏற்றன், ஆர் உலவு சூலன் - இடப-வாகனன்; கூர்மை பொருந்திய சூலத்தை உடையவன்; (ஆர் - கூர்மை);


6)

வம்பு வாளிமதன்

அம்பொன் ஆகமெரி

நம்பன் நீறுபுனை தூயன்

உம்பர் ஏத்துகயி லாயன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


வம்பு-வாளி மதன் அம்பொன் ஆகம் எரி நம்பன் - வாசனை மிக்க அம்புகளை உடைய மன்மதனது உடலை எரித்த சிவபெருமான்; (வம்பு - வாசனை); (வாளி - அம்பு ); (ஆகம் - உடல்); (அம்பொனாகமெரி - சந்தம் கருதி ன் மிகாது வந்தது);

நீறு புனை தூயன் - திருநீற்றை அணியும் தூயவன்;

உம்பர் ஏத்து கயிலாயன் - தேவரெல்லாம் வழிபடும் கயிலைமலை நாதன்;


7)

காடு வாழுமிறை

சூடு மாலையென

ஆடு நாகமணி தேவன்

பாடு நாலுமறை நாவன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


காடு வாழும் இறை - சுடுகாட்டில் இருக்கும் இறைவன்;

சூடு-மாலை என ஆடு-நாகம் அணி தேவன் - சூடுகின்ற மாலையாக, அசைகின்ற பாம்பை அணிந்த தேவன்;

பாடு நாலுமறை நாவன் - நால்வேதத்தைப் பாடிய திருநாவன்;


8)

மலையை எறிசிதடன்

அலற விரலையிடு

தலைவன் அரையிலதள் ஆர்த்தான்

தலையில் அரவுமதி சேர்த்தான்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


மலையை எறி-சிதடன் அலற விரலை இடு தலைவன் - கயிலைமலையைப் பெயர்த்து வீசியெறிய முயன்ற அறிவிலியான இராவணன் அலறும்படி தன் திருப்பாத-விரலை ஊன்றிய தலைவன்; (சிதடன் - அறிவிலி; குருடன்; பித்தன்);

அரையில் அதள் ஆர்த்தான் - அரையில் தோலைக் கட்டியவன்; (அதள் - தோல்); (ஆர்த்தல் - கட்டுதல்);

தலையில் அரவு மதி சேர்த்தான் - திருமுடிமேல் பாம்பையும் திங்களையும் ஒன்றாக வாழவைத்தவன்;


9)

கரியின் உரிவைபுனை

பெரியன் இருவரெதிர்

எரியின் உருவினொடு சென்றான்

அரிய அடிபணிய நின்றான்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


கரியின் உரிவை புனை பெரியன் - ஆனைத்தோலைப் புனையும் பெரியவன்;

இருவர் எதிர் எரியின் உருவினொடு சென்றான் - திருமால் பிரமன் இவர் இருவர்முன் ஜோதி வடிவினில் சென்றவன்;

அரிய அடி பணிய நின்றான் - அவ்விருவரும் அவர்களால் அறிதற்கு அரிய திருவடியைப் பணியுமாறு ஓங்கி நின்றவன்;


10)

வஞ்ச நெஞ்சருரை

நஞ்சை நீங்கிடுமின்

அஞ்சல் என்றருளும் அத்தன்

குஞ்சி மீதுமத மத்தன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


வஞ்ச நெஞ்சர் உரை நஞ்சை நீங்கிடுமின் - மனத்தில் வஞ்சத்தை வைத்தவர்கள் சொல்லும் விஷம் கலந்த பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;

அஞ்சல் என்று அருளும் அத்தன் - அடியவர்களுக்கு அபயம் அருள்கின்ற தந்தை;

குஞ்சி மீது மதமத்தன் - திருமுடிமேல் மணம் மிக்க ஊமத்தமலரை அணிந்தவன்; (குஞ்சி - தலை; ஆண்களின் தலைமயிர்);


11)

மணியை மிடறுதனில்

அணியும் இறைமுதுமை

பிணிகள் இலனுவமன் இல்லான்

திணிய மலையுமொரு வில்லான்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


மணியை மிடறுதனில் அணியும் இறை - கண்டத்தில் நீலமணியை அணியும் இறைவன்;

முதுமை பிணிகள் இலன் - மூப்பும் பிணியும் இல்லாதவன்; (பிணி - நோய்; பந்தம்);

உவமன் இல்லான் - உவமை அற்றவன்;

திணிய மலையும் ஒரு வில்லான் - உறுதிமிக்க மேருமலையையும் ஒரு வில்லாக ஏந்தியவன்; (திணிய - திண்ணிய);



பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:

1. நாலடிமேல் ஈரடி வைப்பு -

முதல் நாலடிகள் ஓர் எதுகை. அடுத்த ஈரடிகள் ஓர் எதுகை.

தனன தனதனன

தனன தனதனன

தனன தனதனன தானா

தனன தனதனன தானா

.. தனனா தனனா தனதானா

.. தனனா தனனா தனதானா

என்ற சந்தம்.

"தனன தனதனன" என்ற அமைப்பு "தான தானதன" என்று சில பாடல்களில் வரும்.

அடி-3 அடி-4 இவற்றில் அடி ஈற்றில் இயைபுத் தொடையும் அமைந்தது.

மேல்வைப்பாக வரும் ஈரடிகளான அடி-5 அடி-6 இவற்றில் அடி ஈற்றில் இயைபுத் தொடையும் அமைந்தது.


2. இந்தப் பாடலின் முதல் மூன்று அடிகளின் சந்தத்தைச் சேர்ந்து ஒரே அடி போல நோக்கினால் - "தனன தனதனன தனன தனதனன தனன தனதனன தானா" - என்ற சந்தம் உடைய அடி அமைப்பு - வடமொழி யாப்பில் "வனலதிகா" - vanalatikA - என்று வழங்கப்பெறுகின்றது.

3. சிருங்கேரி சங்காராசாரியர் - பாரதி தீர்த்தர் இயற்றிய ஒரு விஷ்ணு துதி -

கருட கமன தவ சரண கமல மிஹ மனஸி லஸது மம நித்யம் ||

.. மம தாபமபாகுரு தேவ

.. மம பாபமபாகுரு தேவ ||

இதன் ஓர் ஒலிவடிவம்: https://www.youtube.com/watch?v=lIRiG6DKT9o


வி. சுப்பிரமணியன்

----------- --------------


V.041 - மனமே நீ மிருகங்கள்

2017-07-22

V.041 - "மனத்துக்கு ஒரு மடல்"

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


1)

மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த

வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்

இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்

தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?


வனமே, இனமே - இவற்றில் ஏ - வினா ஏகாரம்;

கேட்டல் - 1. செவிக்குப் புலனாக்குதல்; 2. ஏற்றுக்கொள்ளுதல்;


2)

பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற

குணங்காக்கும் மடநெஞ்சே! கூற்றுவன்றன் வரவால்வீழ்

நிணங்காக்கும் செயலொன்றே நினைந்தாயே! நரகடையா

வணங்காக்கும் மாதேவன் மலரடியை மறந்தாயே!


காத்தல் - 1. பாதுகாத்தல்; 2. அனுஷ்டித்தல்;

திரிதல் - உழல்தல்; குணம் கெடுதல்;

வீழ்தல் - விழுதல்;

நிணம் - மாமிசம்; இங்கே உடலைக் குறித்தது;

நரகு அடையா-வணம் காக்கும் - நரகத்தில் வீழாதபடி காக்கின்ற;


3)

மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்

பொருத்துவது வந்திலையே! பொருதுகின்ற என்மனமே!

வருத்துவதை விட்டொழித்தென் மாற்றத்தைக் கேள்;நல்லார்

கருத்துறையும் கருத்தனவன் கழல்வாழ்த்தக் கற்றுய்யாய்!


மாற்றுமனம் - Mind replacement;

வந்திலையே - வரவில்லையே;

பொருதுதல் - போரிடுதல்;

மாற்றத்தை - வார்த்தையை; (மாற்றம் - வார்த்தை; பரிகாரம்);

நல்லார் கருத்து உறையும் கருத்தன் அவன் கழல் வாழ்த்தக் கற்று உய்யாய் - நல்லவர்கள் சிந்தையில் உறைகின்ற தலைவனான சிவபெருமான் திருவடியை வாழ்த்தக் கற்று உய்வாயாக; (கருத்தன் - கர்த்தா - தலைவன்);


4)

காமமெனும் கடலாழ்ந்து கலங்குகின்றாய், கண்ணுதலான்

நாமமெனும் புணையிருந்தும் நாடாமல்! நச்சரவைத்

தாமமெனத் தரித்தபிரான், தாழ்சடையன், அடியார்க்குச்

சேமமெனும் நிலையருளும் சிவலோகன் நினைமனமே!


காமம் - ஆசை;

புணை - தெப்பம்;

தாமம் - கயிறு; மாலை; வடம்;

சேமம் - க்ஷேமம் - இன்பம்; நல்வாழ்வு;


5)

ஒருபோதன், உமைபங்கன், ஒளிவீசும் மழுவாளன்,

இருபோதும் எம்பெருமான் இணையடியை நீஎண்ணி

இரு,போதும்! ஒருபோதும் இடரில்லை, மடநெஞ்சே!

வருகாலம் தனில்மகிழ மடலிதனை மதிநெஞ்சே!


ஒரு போதன் - ஒப்பற்ற ஞானவடிவினன்;

இருபோதும் - 1. இரண்டு பொழுதிலும்; 2. இருப்பாயாக; அதுவே போதும்;

ஒருபோதும் இடர் இல்லை - என்றும் துன்பம் இல்லை;

வருகாலம் - வினைத்தொகை - எதிர்காலம்;


6)

கடலையன்று கடைந்தக்கால் கடுநஞ்சம் வரக்கண்டு,

"சுடலையென்றும் பிரியாதாய் துணை"யென்று சுரர்வேண்ட,

நடலையின்றி உண்டருள்செய் நம்பா,என் மனத்துக்கோர்

மடலையின்று வரைந்தேன்,இம் மடநெஞ்சை நெறிப்படுத்தாய்!


கடைந்தக்கால் - கடைந்தபொழுது;

கடுநஞ்சம் - கொடிய விஷம்;

சுடலை - சுடுகாடு;

நடலை - வஞ்சம்; பொய்; துன்பம்;

நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - விரும்பப்படுபவன்; விரும்பத்தக்கவன்;

மடல் - ஏடு; ஓலை;

வரைதல் - எழுதுதல்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------