06.05 – பலவகை
2012-07-05
06.05.024 - திருமால் - கண்ணப்பன் - சிலேடை
-------------------------------------------------------
கரிய திருமேனி கையில்வில் ஏந்தி
திரிதரு பன்றியு மானான் - அரிநாடி
வான்மதி சூடிமகிழ் வண்ணம்தன் கண்ணிடந்தான்
கான்வதிகண் ணப்பன்மால் காண்.
சொற்பொருள்:
அரி - 1. சிங்கம்; / 2. சக்கரம் (Wheel, discus); ஆயுதம் (Weapon);
ஏந்தி - ஏந்துபவன்;
திரிதரு - 'தரு' என்றது துணைவினை; (An auxiliary added to verbs);
பன்றியுமானான் - 1. பன்றியும் மான் ஆன்; / 2. பன்றியும் ஆனான்;
நாடி - 1. நாடுபவன்; / 2. 'விரும்பி' என்ற வினையெச்சம்;
வான்மதி சூடி - வானில் விளங்கும் அழகிய பிறையைச் சூடியவன் - சிவபெருமான்;
இடத்தல் - தோண்டுதல்;
கான் - காடு;
வதிதல் - உறைதல்; தங்குதல்;
திருமால்:
கரிய திருமேனி - கரிய னிறம் திகழும் திருமேனி உடையவன்;
கையில் வில் ஏந்தி, திரிதரு பன்றியும் ஆனான் - கையில் வில்லை ஏந்தியவனான இராமனும், திரியும் பன்றியும் ஆனவன்; (பன்றி - வராஹ அவதாரம்; அடிமுடி தேடியபொழுது பன்றி வடிவம் கொண்டவன்);
அரி நாடி வான்மதிசூடி மகிழ்வண்ணம் தன் கண் இடந்தான் - சக்கராயுதத்தைப் பெற விரும்பிச், சந்திரனைச் சூடிய சிவன் மகிழுமாறு தாமரைமலர் போலத் தன் கண்ணைப் பெயர்த்து இட்டு அர்ச்சித்தவன்; (திருவீழிமிழலைத் தலவரலாற்று நிகழ்ச்சி);
மால் - விஷ்ணு;
கண்ணப்பன்:
கரிய திருமேனி - கரிய மேனியன்;
கையில் வில் ஏந்தி - கையில் வில் ஏந்தியவன் (வேடன்);
திரிதரு பன்றியும் மான் ஆன் அரி நாடி - திரிகின்ற பன்றியையும், மானையும், ஆனினத்தையும், சிங்கத்தையும் (வேட்டைக்கு) நாடியவன்;
வான்மதிசூடி மகிழ்வண்ணம் தன் கண் இடந்தான் - வான்பிறை சூடிய ஈசன் மகிழுமாறு தன் கண்ணை இடந்து அப்பியவன்;
கான் வதி கண்ணப்பன் - காட்டில் வாழ்ந்த கண்ணப்பன்;
பிற்குறிப்புகள்:
1. தருதல் என்ற துணைவினை தேவாரத்தில் பல பாடல்களில் வரும். உதாரணமாகச்:
சம்பந்தர் தேவாரம் - 3.86.3
புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபம தேறுவர் ஈடுலா
வரிதரு வளையினர் அவரவர் மகிழ்தர மனைதொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.
2) -------- Some Q&A on this song -------
Q) வாசகர் ஒருவர் எழுப்பிய வினாக்கள்:
a) கண்ணப்பர் கரிய நிறத்தவரா? இலக்கியச் சான்றுகள் உள்ளனவா?
b) சிங்கங்கள் பொதுவாக ஆப்பிரிக்கக் காடுகளில் மட்டுமே உள்ளன. கிர் காடுகளில் உள்ள சிங்கங்கள் ஆசியாட்டிக் வகையைச் சேர்ந்தவை என்பது கூற்றளவிலே மட்டுமே உள்ளது. கண்ணப்பர் சிங்கத்தை வேட்டைக்கு நாடியது எங்ஙனம்?
My response:
பொதுவாக வேடர்கள் கரிய மேனியர். சிவனார் அருச்சுனனுக்கு அருள்செய்ய வேட்டுவ வடிவில் வந்தபோது செம்மேனியரான அப்பெருமானும் கரிய வடிவம் தாங்கிவந்தார்.
பாடலை எழுதும்போது, கண்ணப்பர் கரிய மேனியர் என்பதற்கும், அவர் சிங்கத்தை வேட்டை ஆடினார் என்பதற்கும் ஆதாரங்கள் உளவா என்று சிந்தித்திலேன்! உங்கள் வினாவால் இன்று தேடினேன்! அவ்வாறு தேடியதில் அற்புதமான உவமைகள் அடங்கிய இப்பாடலைக் கண்டேன்!
பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம் - பாடல் 82
கருவரையொரு தனுவொடுவிசை கடுகியதென முனைநேர்
குரிசில்முன்விடும் அடுசரமெதிர் கொலைபயில்பொழு தவையே
பொருகரியொடு சினவரியிடை புரையறவுடல் புகலால்
வருமிரவொடு பகலணைவன எனமிடையுமவ் வனமே.
கரிய பெருமலை, கையில் ஒரு வில்லுடன் விரைவாக ஓடுகின்றதெனப், பொருந்தும்படியாக வனத்தின் முன்னாக நேர்ந்து வரும் திண்ணனார், முன் விடுகின்ற கொலை புரியும் அம்புகள் எதிர்வந்த மிருகங்களைக் கொலை செய்கின்ற அமையத்து, அவ்வம்புகள் போரிடும் யானையோடு சினமுடைய சிங்கங்களின் வயிற்றிலும் இடையீடு இன்றிப் புகுதலால், இறந்து வீழ்ந்து கிடக்கும் அம்மிருகங்கள் இரவின் பின்னால் பகல் தொடர்கின்றது எனும்படி அவ்வனம் காட்சியளித்தது
யானை இரவுக்கும் சிங்கம் பகலுக்கும் உவமையாயின.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------