06.03 – மடக்கு
2010-01-10
6.3.46) ஆனஞ்சு - கொண்டாடு - மடக்கு
--------------
ஆனஞ்சு வேங்கை அதள்அணிவான்; தேவர்க்கா
ஆனஞ்சு கண்டத் தடைத்தருள்வான்; - ஆனஞ்சு
கொண்டாடு முக்கணனைக் கோனென்று நெஞ்சேநீ
கொண்டாடு; தீரும் குறை.
பதம் பிரித்து:
ஆன் அஞ்சு வேங்கை-அதள் அணிவான்; தேவர்க்கா
ஆல்-நஞ்சு கண்டத்து அடைத்து-அருள்வான்; ஆன்-அஞ்சு
கொண்டு ஆடு முக்கணனைக் கோன் என்று நெஞ்சே நீ
கொண்டாடு; தீரும் குறை.
ஆனஞ்சு - 1. ஆன் அஞ்சு (பசுக்கள் அஞ்சுகின்ற); 2. ஆல் நஞ்சு (ஆலகால விஷம்); 3. ஆன் அஞ்சு (பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்கள் - பால், தயிர், நெய், கோசலம், கோமயம் - பஞ்சகவ்வியம்);
கொண்டாடு - 1. கொண்டு ஆடுகின்ற (கொண்டு அபிஷேகம் செய்யப்பெறும்); 2. புகழ்தல்; பாராட்டுதல்;
வேங்கை அதள் - புலித்தோல்;
தேவர்க்கா - தேவர்க்காக - கடைக்குறை - செய்யுள் விகாரம்.
கோன் - தலைவன்;
( சுந்தரர் தேவாரம் - 7.17.4 - "அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்")
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment