Thursday, May 6, 2021

05.08 – குரோம்பேட்டைக் குமரன் குன்றம்

05.08 – குரோம்பேட்டைக் குமரன் குன்றம்


2014-12-08

குரோம்பேட்டைக் குமரன் குன்றம் (சென்னைப் புறநகர்ப் பகுதியில் தாம்பரம் அருகே உள்ளது)

----------------------------------

(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு.)

(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல")

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்")


1)

பண்டும் இன்றும் என்றுமுளாய் .. பாவை பங்கா எனவாழ்த்தித்

தொண்டு செய்யும் அடியார்தம் .. தொல்லை வினையைத் துடைத்தருள்வான்

அண்டர் வேண்ட அவர்க்கிரங்கி .. அருநஞ் சத்தை அமுதுண்ட

கொண்டற் கண்டன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


பண்டும் இன்றும் என்றும் உளாய் - அன்றும் இன்றும் என்றும் உள்ளவனே;

பாவை பங்கா என வாழ்த்தித் - உமைபங்கனே என்று வாழ்த்தி;

தொண்டு செய்யும் அடியார்தம் தொல்லை வினையைத் துடைத்தருள்வான் - தொண்டு செய்யும் பக்தர்களது பழவினையைத் தீர்த்து அருள்வான்;

அண்டர் வேண்ட அவர்க்கு இரங்கி அருநஞ்சத்தை அமுதுண்ட கொண்டற் கண்டன் - தேவர்கள் இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கிக் கொடீய விடத்தை உண்ட, மேகம் போன்ற நீலகண்டத்தை உடையவன்; (அண்டர் - தேவர்); (கொண்டல் - மேகம்);

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


2)

நீற்றைப் பூசி நெஞ்சத்தில் .. நிலைத்த நேயம் உடையவராய்

ஆற்றுச் சடையாய் அடல்விடையாய் .. அமரர் கோவே அருளென்று

போற்றி நாளும் பொன்னடியிற் .. பூவிட் டேத்து மாணிக்காக்

கூற்றை உதைத்தான் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


நீற்றைப் பூசி நெஞ்சத்தில் நிலைத்த நேயம் உடையவராய் - திருநீற்றைப் பூசி உள்ளத்தில் நீங்காத அன்பு உடையவர்கள் ஆகி;

ஆற்றுச் சடையாய், அடல் விடையாய், அமரர் கோவே அருள் என்று போற்றி - "கங்கையைச் சடையில் உடையவனே, வலிய இடபத்தை வாகனமாக உடையவனே, தேவர் தலைவா, அருள்க" என்று துதித்து;

நாளும் பொன்னடியில் பூ இட்டு ஏத்து மாணிக்காக் கூற்றை உதைத்தான் - தினமும் பொற்பாதத்தில் பூவைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயருக்காகக் காலனை உதைத்தவன்; (மாணி - மார்க்கண்டேயர்);

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே.




3)

புத்தம் புதிய மலர்தூவிப் .. புகழ்ந்து பாடிப் பொன்னடியை

நித்தம் நீள நினைந்தேத்தும் .. நேயர்க் கன்பன் நீள்சடையன்

மத்தன் வலிய அந்தகன்றன் .. மார்பில் கூரார் சூலத்தாற்

குத்திச் செற்றான் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


நித்தம் - தினந்தோறும்;

மத்தன் - ஊமத்த மலர் அணிந்தவன்;

அந்தகன் - அந்தகாசுரன்;

செற்றான் - அழித்தான்;


4)

பொக்கம் இன்றிப் பொன்னடியைப் .. போற்றிப் பணியும் அடியார்தம்

துக்கம் எல்லாம் தீர்த்தருளித் .. தோன்றாத் துணையாய் நிற்குமரன்

அக்கும் அரவும் அணிமார்பன் .. ஆறு லாவும் சடைமீது

கொக்கின் இறகன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


பொக்கம் - பொய்;

தோன்றாத் துணையாய் நிற்கும் அரன் - தோன்றாத துணை ஆகி நின்று காக்கும் ஹரன்;

அக்கு - உருத்திராக்கம்; எலும்பு;

ஆறு உலாவும் சடைமீது கொக்கின் இறகன் - கங்கை திகழும் சடையின்மேல், (கொக்கு வடிவம் உடைய குரண்டாசுரனை அழித்து அதன் ஆடையாளமாகக்) கொக்கின் இறகை அணிந்தவன்;


5)

ஒன்றும் பலவும் ஆகியவன் .. உமையாள் பங்கன் தில்லைதனுள்

மன்றில் ஆடும் மலர்ப்பாதன் .. மறவா அன்பர் மனத்தளியில்

என்றும் உள்ள எம்பெருமான் .. இளவெண் திங்கள் திகழ்முடிமேல்

கொன்றை சூடி குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


மனத்தளி - மனக்கோயில்;

கொன்றை சூடி - கொன்றைமலரைச் சூடியவன்;


6)

பறைகள் ஒலிக்க இரவில்நடம் .. பயிலும் பரமன் படுநஞ்சால்

கறைகொள் கண்டன் கணையெய்த .. காம னைக்காய் கண்ணுதலான்

மறைகள் பாடு மாதேவன் .. வணங்கு கின்ற அடியார்தம்

குறைகள் தீர்க்கும் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


இரவினடம் - இரவில் + நடம்;

நடம் பயிலும் - நாட்டியத்தை நிகழ்த்தும்;

படுநஞ்சு - இறத்தற்கு ஏதுவாகிய நஞ்சு; (படுத்தல் - கொல்லுதல்; அழித்தல்); (படுதல் - to touch; ஒன்றன்மீது ஒன்று உறுதல் - என்றும் கொள்ளலாம் - கண்டத்தில் பட்ட விடம்);

காமனைக் காய் கண்ணுதலான் - மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்;


7)

பிழைசெய் தாதை தாள்துணித்த .. பிள்ளை சண்டிக் கருளீசன்

பழையாய் பதியே அருளென்று .. பணிந்த தேவர் உயிர்காத்த

மழையார் மிடற்றன் கயிலாய .. மலையன் கையில் மழுவேந்தி

குழையோர் செவியன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


பிழை செய் தாதை தாள் துணித்த பிள்ளை சண்டிக்கு அருள் ஈசன் - குற்றம் செய்த தந்தையின் இரு கால்களையும் வெட்டிய மகனாரான சண்டீசருக்கு அருளிய ஈசன்;

"பழையாய் பதியே அருள்" என்று பணிந்த தேவர் உயிர் காத்த மழை ஆர் மிடற்றன் - "புராதனனே தலைவனே அருளாய்" என்று இறைஞ்சிய தேவர்களது உயிரைக் காத்த மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்;

கயிலாய மலையன் - கயிலைமலையில் வீற்றிருப்பவன்;

கையில் மழு ஏந்தி - கையில் மழுவை ஏந்தியவன்;

குழை ஓர் செவியன் - ஒரு காதில் குழை அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே.


8)

சூலப் படையான் திருமலையைத் .. துணிந்த சைத்த இராவணனைச்

சால நாள்கள் அழுமாறு .. தனியோர் விரலால் நசுக்கியவன்

மூலர் மூவா யிரந்தமிழை .. மொழிய அருள்செய் முக்கண்ணன்

கோலப் பிறையன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


சூலப் படையான் திருமலையைத் துணிந்து அசைத்த இராவணனைச் - சூலாயுதத்தை ஏந்தும் சிவபெருமான் உறையும் கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை;

சால நாள்கள் அழுமாறு தனி ஓர் விரலால் நசுக்கியவன் - பல காலம் அழும்படி அவனை ஒப்பற்ற ஒரு விரலால் நசுக்கிய பெருமான்;

மூலர் மூவாயிரம் தமிழை மொழிய அருள்செய் முக்கண்ணன் - திருமூலரைத் திருமந்திரம் பாட அருள்செய்த நெற்றிக்கண்ணன்; (மூவாயிரம் தமிழ் - 3000 பாடல்களையுடைய திருமந்திரம்);

கோலப் பிறையன் - அழகிய பிறைச்சந்திரனை அணிந்தவன்;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே.




9)

தோடி லங்கும் திருச்செவியன் .. சுடலைப் பொடியன் தூமறைகள்

பாடி யருளும் திருநாவன் .. பன்றி அன்னம் அடிமுடியைத்

தேடி நாண எழுசோதி .. சிவனே அருளென் றடியார்கள்

கூடிப் போற்றும் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


தோடு இலங்கும் திருச்செவியன் - ஒரு காதில் தோடு அணிந்தவன்;

சுடலைப் பொடியன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவன்;

தூமறைகள் பாடியருளும் திருநாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;

பன்றி அன்னம் அடிமுடியைத் தேடி நாண எழு சோதி - திருமாலும் பிரமனும் பன்றி அன்னப்பறவை ஆகி அடியையும் முடியையும் தேடிக் காணாது நாணுமாறு உயர்ந்த ஜோதி;

"சிவனே அருள்" என்று அடியார்கள் கூடிப் போற்றும் - "சிவனே அருளாய்" என்று பக்தர்கள் திரண்டு போற்றுகின்ற;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே.


10)

பாதை அறியாப் புன்னெறியார் .. பகலில் விளக்கைப் பிடித்துழல்வார்

வாதை சேர்க்கும் அவர்மொழியில் .. மயங்கேல் திருவைந் தெழுத்தோதின்

தீதை நீக்கித் திருவருள்வான் .. திங்கள் திகழும் செஞ்சடையான்

கோதை பங்கன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


புன்னெறி - பொய்ச்சமயங்கள்; தீநெறிகள்;

வாதை - துன்பம்;

மயங்கேல் - மயங்காதே; (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி);

திருவைந்தெழுத்து ஓதின் - பஞ்சாக்ஷரம் (நமச்சிவாய மந்திரம்) ஓதினால்;

கோதை பங்கன் - உமைபங்கன்;


11)

அரையா அருளென் றடிபோற்றி .. அமரர் இறைஞ்ச மேருவெனும்

வரையே வில்லா வளைத்ததிலே .. வாயு மால்தீக் கணைகோத்து

விரவார் புரங்கள் மூன்றுமுடன் .. வெந்து பொடியாய் விழவெய்த

குரையார் கழலன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


"அரையா அருள்" என்று அடிபோற்றி அமரர் இறைஞ்ச - "அரசனே அருளாய்" என்று திருவடியைத் தேவர்கள் வணங்க; (அரையன் - அரசன்);

மேரு எனும் வரையே வில்லா வளைத்து அதிலே வாயு மால் தீக் கணை கோத்து - மேரு மலையை வில்ளாக வளைத்து அதில் அக்கினி, திருமால், வாயு இம்மூவரையும் ஒரு கணையாகக் கோத்து; (வரை - மலை);

விரவார் புரங்கள் மூன்றும் உடன் வெந்து பொடியாய் விழ எய்த - எதிர்த்த அசுரர்களது முப்புரங்களும் ஒருங்கே உடனே வெந்து சாம்பலாகி அழிய எய்த; (விரவார் - பகைவர்);

குரை ஆர் கழலன் - ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்தவன்;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே.


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள் :

1) சென்னைப் புறநகர்ப் பகுதியில் தாம்பரம் அருகே உள்ள குரோம்பேட்டையில் குமரன் குன்றம் கோயில் உள்ளது. க்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தனிக்கோயிலும் உள்ளது : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=26


----------- --------------


No comments:

Post a Comment