Wednesday, September 9, 2020

03.04.087 - சிவன் - கூடை - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-03-06

3.4.87 - சிவன் - கூடை - சிலேடை

-------------------------------------------------------

பண்டம்பெய் பாங்கிருக்கும் பாரித் திருக்கும்தீக்

கண்ணீறாம் பெற்றியும் காட்டும்பூ - வுண்ணிறைய

மாந்தருச்சி மேல்கொள் முடைதலையும் பெற்றவிடை

ஊர்ந்தசிவன் ஓர்கூடை ஒப்பு.


சொற்பொருள்:

பண்டம்பெய் - 1. பண்டு அம்பு எய் / 2. பண்டம் பெய்

பண்டு - முற்காலம்;

எய்தல் - பாணம் பிரயோகித்தல்;

பண்டம் - பொருள்;

பெய்தல் - கலம் முதலியவற்றில் இடுதல்;

பாங்கு - இயல்பு; நன்மை; அழகு;

பாரித்தல் - 1. காத்தல் (protect); / 2. கனத்தல் (சுமையாதல்);

கண் - 1. விழி (eye); / 2. ஏழாம் வேற்றுமை உருபு;

பெற்றி - தன்மை; இயல்பு;

பூ - 1. பூமி; / 2. மலர்;

நிறைதல் - நிரம்புதல்; மிகுதல்;

உச்சி - தலை;

கொள்தல் - 1. நன்கு மதித்தல்; கொண்டாடுதல்; / 2. வைத்துக்கொள்ளுதல்;

முடைதல் - பின்னுதல்;

முடை - புலால்; துர்நாற்றம்;

முடை-தலை - புலால் நாறும் பிரமனது மண்டையோடு; ("முடைத்தலை" என்பதில் தகர ஒற்றுத், தொகுத்தலாயிற்று - சுந்தரர் தேவாரம் - 7.72.8 - "பாறணி முடைதலை கலனென");

ஊர்தல் - ஏறுதல்; ஏறிநடத்துதல்;


கூடை:

பண்டம் பெய் பாங்கு இருக்கும் - பொருள்களை இடுமாறு இருக்கும்;

பாரித்து இருக்கும் - (பொருளை உள்ளே இட்டபின்) கனமாக இருக்கும்;

தீக்கண் நீறு ஆம் பெற்றியும் காட்டும் - தீயில் சாம்பல் ஆகும் தன்மையும் கொண்டிருக்கும்;

பூ உள் நிறைய, மாந்தர் உச்சிமேல் கொள் - (அதன்) உள்ளே பூக்களை இட்டு அது நிரம்பியதும், மக்கள் தலைமேல் சுமக்கின்ற;

முடைதலையும் பெற்ற - (பிரம்பு முதலியவற்றைக்கொண்டு) பின்னுதலையும் பெற்ற;

ஓர் கூடை - ஒரு கூடை;


சிவன்:

பண்டு அம்பு எய் பாங்கு இருக்கும் - முன்னொரு சமயம், (முப்புரங்கள் மேல் / ஒரு பன்றி மேல்) அம்பு எய்த நன்மை இருக்கும்;

பாரித்து இருக்கும் - காத்து அருளும்; (திருவாசகம் - சிவபுராணம்- 8.1 - அடி-64 - "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே");

தீக்கண், ஈறு ஆம் பெற்றியும் காட்டும் - நெருப்பை உமிழும் கண்ணையும், அனைத்திற்கும் முடிவாக இருக்கும் தன்மையையும் காட்டும்; (தீக்கண் - தீக்கண்ணையும்; வேற்றுமைத்தொகை, உம்மைத்தொகை); (தீ - "சுடுகாட்டு நெருப்பு" என்றும் கொள்ளல் ஆம்; ஊழி முடிவில் இப்பிரபஞ்சமே சுடலை; அங்கே திருக்கூத்து ஆடி அனைத்திற்கும் அந்தம் ஆகின்ற பெருமையையும் காட்டுகின்ற);

பூவுள் நிறைய மாந்தர் உச்சிமேல் கொள் - பூமியில் பலரும் மிகவும் போற்றும்;

முடை தலையும் பெற்ற - (பிரமனது) புலால் நாறும் மண்டையோட்டைக் கையில் ஏந்தும்;

விடை ஊர்ந்த சிவன் - இடபத்தின்மேல் ஏறிவரும் சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment