Thursday, September 10, 2020

03.04.088 - சிவன் - நீள்தொடர் (TV mega serial) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-03-13

3.4.88 - சிவன் - நீள்தொடர் (TV mega serial) - சிலேடை

-------------------------------------------------------

தொல்லை மிகுந்திருக்கும் மேலும் சலமிருக்கும்

எல்லை இலாதிருக்கும் ஏசுதலை - அல்லதொரு

பாத்திரம் இல்லாத பாங்கிருக்கும் நீள்தொடர்

தீத்திரளாய் நின்ற சிவன்.


சொற்பொருள்:

தொல்லை - 1. பழமை; / 2. துன்பம்;

மேலும் - 1. மேலே; (உம் - அசை); / 2. பின்னும்; மற்றும்; (Moreover, further);

சலம் - 1. நீர்; / 2. வஞ்சனை; பொய்ம்மை; கோபம்; தீயசெயல்;

எல்லை - அளவு; முடிவு;

ஏசுதலை - 1. (ஏசு + தலை) இகழப்படும் மண்டையோடு; / 2. (ஏசுதல்+) திட்டுவதை;

பாத்திரம் - 1. கொள்கலம் (Vessel, utensil); / 2. நாடகத்தில் வேடம்பூண்டு நடிப்பவ-ன்-ள்;

பாங்கு - தன்மை; அழகு;

நீள்தொடர் - நெடுநாள்களுக்குத் தொடரும் தொலைக்காட்சி நாடகம்; (TV mega serial);

தீத்திரள் - ஜோதிப்பிழம்பு;


நீள்தொடர் (TV mega serial):

தொல்லை மிகுந்து இருக்கும் - துன்பம் நிறைய இருக்கும்;

மேலும் சலம் இருக்கும் - அதனுடன், பொய்ம்மை/வஞ்சனை/கோபம் போன்றனவும் மிகுந்திருக்கும்;

எல்லை இலாது இருக்கும் ஏசுதலை அல்லது ஒரு பாத்திரம் இல்லாத பாங்கு இருக்கும் - எல்லாப் பாத்திரங்களும் அளவின்றி/ஓயாமல் அடுத்தவரைத் திட்டுதலையும் பழித்தலையும் செய்யும்; ("எல்லை இலாது இருக்கும் - முடிவின்றி நெடுங்காலம் தொடர்ந்து வரும்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

நீள்தொடர் - (தொலைக்காட்சியில் வரும்) பெரும்-தொடர்-நாடகங்கள்.


சிவன்:

தொல்லை மிகுந்து இருக்கும் - பழமை மிகுந்திருக்கும்; (அனாதி);

மேலும் சலம் இருக்கும் - (திருமுடி) மேலே நீர் இருக்கும்; (கங்காதரன்);

எல்லை இலாது இருக்கும் - முடிவு இன்றி இருக்கும்; (பிறப்பு இறப்பு அற்றவன்);

ஏசு-தலை அல்லது ஒரு பாத்திரம் இல்லாத பாங்கு இருக்கும் - இகழப்படும் மண்டையோட்டையே பிச்சைப்பாத்திரமாக கொள்ளும்; (அப்பர் தேவாரம் - 6.57.6 - "ஏசுமா முண்டி உடையாய் போற்றி" - ஏசும் - இகழப்படுகின்ற. முண்டி - தசை நீங்கிய தலை);

தீத்திரளாய் நின்ற சிவன் - (அடிமுடி தேடியபொழுது) ஜோதிப்பிழம்பாகி ஓங்கிய சிவபெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.18.9 - "சடையும் அடியும் இருவர் தெரியாததொர் தீத்திரள் ஆயவனே");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Wednesday, September 9, 2020

03.04.087 - சிவன் - கூடை - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-03-06

3.4.87 - சிவன் - கூடை - சிலேடை

-------------------------------------------------------

பண்டம்பெய் பாங்கிருக்கும் பாரித் திருக்கும்தீக்

கண்ணீறாம் பெற்றியும் காட்டும்பூ - வுண்ணிறைய

மாந்தருச்சி மேல்கொள் முடைதலையும் பெற்றவிடை

ஊர்ந்தசிவன் ஓர்கூடை ஒப்பு.


சொற்பொருள்:

பண்டம்பெய் - 1. பண்டு அம்பு எய் / 2. பண்டம் பெய்

பண்டு - முற்காலம்;

எய்தல் - பாணம் பிரயோகித்தல்;

பண்டம் - பொருள்;

பெய்தல் - கலம் முதலியவற்றில் இடுதல்;

பாங்கு - இயல்பு; நன்மை; அழகு;

பாரித்தல் - 1. காத்தல் (protect); / 2. கனத்தல் (சுமையாதல்);

கண் - 1. விழி (eye); / 2. ஏழாம் வேற்றுமை உருபு;

பெற்றி - தன்மை; இயல்பு;

பூ - 1. பூமி; / 2. மலர்;

நிறைதல் - நிரம்புதல்; மிகுதல்;

உச்சி - தலை;

கொள்தல் - 1. நன்கு மதித்தல்; கொண்டாடுதல்; / 2. வைத்துக்கொள்ளுதல்;

முடைதல் - பின்னுதல்;

முடை - புலால்; துர்நாற்றம்;

முடை-தலை - புலால் நாறும் பிரமனது மண்டையோடு; ("முடைத்தலை" என்பதில் தகர ஒற்றுத், தொகுத்தலாயிற்று - சுந்தரர் தேவாரம் - 7.72.8 - "பாறணி முடைதலை கலனென");

ஊர்தல் - ஏறுதல்; ஏறிநடத்துதல்;


கூடை:

பண்டம் பெய் பாங்கு இருக்கும் - பொருள்களை இடுமாறு இருக்கும்;

பாரித்து இருக்கும் - (பொருளை உள்ளே இட்டபின்) கனமாக இருக்கும்;

தீக்கண் நீறு ஆம் பெற்றியும் காட்டும் - தீயில் சாம்பல் ஆகும் தன்மையும் கொண்டிருக்கும்;

பூ உள் நிறைய, மாந்தர் உச்சிமேல் கொள் - (அதன்) உள்ளே பூக்களை இட்டு அது நிரம்பியதும், மக்கள் தலைமேல் சுமக்கின்ற;

முடைதலையும் பெற்ற - (பிரம்பு முதலியவற்றைக்கொண்டு) பின்னுதலையும் பெற்ற;

ஓர் கூடை - ஒரு கூடை;


சிவன்:

பண்டு அம்பு எய் பாங்கு இருக்கும் - முன்னொரு சமயம், (முப்புரங்கள் மேல் / ஒரு பன்றி மேல்) அம்பு எய்த நன்மை இருக்கும்;

பாரித்து இருக்கும் - காத்து அருளும்; (திருவாசகம் - சிவபுராணம்- 8.1 - அடி-64 - "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே");

தீக்கண், ஈறு ஆம் பெற்றியும் காட்டும் - நெருப்பை உமிழும் கண்ணையும், அனைத்திற்கும் முடிவாக இருக்கும் தன்மையையும் காட்டும்; (தீக்கண் - தீக்கண்ணையும்; வேற்றுமைத்தொகை, உம்மைத்தொகை); (தீ - "சுடுகாட்டு நெருப்பு" என்றும் கொள்ளல் ஆம்; ஊழி முடிவில் இப்பிரபஞ்சமே சுடலை; அங்கே திருக்கூத்து ஆடி அனைத்திற்கும் அந்தம் ஆகின்ற பெருமையையும் காட்டுகின்ற);

பூவுள் நிறைய மாந்தர் உச்சிமேல் கொள் - பூமியில் பலரும் மிகவும் போற்றும்;

முடை தலையும் பெற்ற - (பிரமனது) புலால் நாறும் மண்டையோட்டைக் கையில் ஏந்தும்;

விடை ஊர்ந்த சிவன் - இடபத்தின்மேல் ஏறிவரும் சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------