Sunday, January 19, 2020

04.80 – கொடிமாடச் செங்குன்றூர் (இக்காலத்தில் - திருச்செங்கோடு)


04.80கொடிமாடச் செங்குன்றூர் (இக்காலத்தில் - திருச்செங்கோடு)

2014-10-30
கொடிமாடச் செங்குன்றூர் (இக்காலத்தில் 'திருச்செங்கோடு')
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")

1)
வெளியபொடி திகழ்கின்ற மேனியனை வேதியனைத்
தளிர்மதியும் திரைபுனலும் சடைமீது தரித்தவனைக்
குளிர்மதியம் அணவுகின்ற கொடிமாடச் செங்குன்றூர்
எளியவனை இருபோதும் எண்ணிலிரு வினைவீடே.

வெளிய பொடி - வெண்திருநீறு; (சம்பந்தர் தேவாரம் - 1.2.5 - "செய்யமேனி வெளியபொடிப் பூசுவர்" - சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர்);
தளிர்மதி - முளைமதி; இளநிலா;
திரைபுனல் - திரைகின்ற புனல் - அலையெழும் கங்கை; (திரைதல் / திரைத்தல் - அலையெழுதல்);
அணவுதல் - அணுகுதல்; தழுவுதல்; மேல் நோக்கிச் செல்லுதல் (To go upward, ascend);
கொடிமாடச் செங்குன்றூர் - திருச்செங்கோடு;
எளியவன் - அடியவர்க்கு எளியவன்;
இருபோதும் எண்ணில் இருவினை வீடே - இருவேளையும் எண்ணினால் இருவினைகள் அழியும்; (வீடு - நீக்கம்; முடிவு);

2)
ஏலமலர்க் குழலாளை இடப்பக்கம் உடையானை
ஆலமர நீழலில்நல் லறஞ்சொன்ன ஆரியனைக்
கோலமதி தடவுகின்ற கொடிமாடச் செங்குன்றூர்
நீலமணி மிடற்றானை நினையவிரு வினைவீடே.

ஏலமலர்க் குழலாள் - வாசமலர்க்கூந்தலை உடைய உமை;
ஆரியன் - குரு; பெரியவன்; ஞானி;
கோல மதி - அழகிய சந்திரன்;
நீலமணி மிடற்றானை நினைய இருவினை வீடே - நீலகண்டனை நினைந்தால் இருவினை நீங்கும்;

3)
இரக்கமுடைப் பெருமானை ஏந்திழையார் கடையிற்போய்
இரக்கவொரு சிரமேந்தும் எம்மானைச் செம்மானைக்
குரக்கினங்கள் குதிகொள்ளும் கொடிமாடச் செங்குன்றூர்
வரக்கரனை மறவாது வாழ்த்தவிரு வினைவீடே.

இரக்கமுடைப் பெருமானை - தயாபரனை;
ஏந்திழையார் கடையிற்போய் இரக்க ஒரு சிரம் ஏந்தும் எம்மானை - பெண்கள் வீட்டுவாயிலிற் சென்று யாசிக்க ஒரு மண்டையோட்டை ஏந்தும் எம்பெருமானை; (கடை - வீட்டுவாயில்);
செம்மானை - செம்மேனியனை; (சம்பந்தர் தேவாரம் - 1.87.10 - "செருமால் விடையூருஞ் செம்மான்" - போர் செய்யத்தக்க விடைமீது எழுந்தருளிவரும் சிவந்தநிறத்தினர்);
குரக்கினங்கள் குதிகொள்ளும் கொடிமாடச் செங்குன்றூர் - குரங்குகள் குதித்து மகிழும் திருசெங்கோட்டில் உறைகின்ற; (குரக்கினங்கள் - குரங்குக் கூட்டங்கள்; செம்பு/செப்பு, இரும்பு/இருப்பு, என்பன போல் குரங்கு/குரக்கு என்று திரியும்);
வரக்கரனை மறவாது வாழ்த்த இருவினை வீடே - வரதஹஸ்தனான சிவபெருமானை என்றும் துதித்தால் இருவினை நீங்கும்; (வரக்கரன் - வரத்தை அருளும் கரத்தை உடையவன் - வரதஹஸ்தன்; வரம், கரம் என்ற சொற்களைத் தமிழ்ச்சொற்களாகக் கொண்டதால், புணர்ச்சியில் 'க்' மிக்கது. அன்றேல், "வரகரன்" - வரத்தைத் தருபவன் - என்ற வடசொல், எதுகைக்காக 'க்' மிக்கு வந்தது என்றும் கொள்ளல் ஆம்);
இலக்கணக் குறிப்பு : இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலிமிகும்.
(சம்பந்தர் தேவாரம் - 1.20.4 - "மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய பெருவலி யினனல மலிதரு கரன்..." --- நலம் மலிதரு கரன் - நன்மை மிகுந்த திருக்கரங்களை உடையவன்.);
(ஆதிசங்கரர் அருளிய அன்னபூர்ணாஷ்டகம் - "நித்யானந்தகரீ வராபயகரீ ...."; வராபயகரீ = வரகரீ, அபயகரீ = Salutations to Mother Annapoorna, who always give joy to Her devotees, along with boons and assurance of fearlessness ); (करः 1 A hand; .....-9 A doer. )

4)
மட்டவிழும் மலர்க்குழலி மலைமகளோர் பங்குடையான்
இட்டமொடு நஞ்சுண்ட இருள்கண்டன் இமையவர்கோன்
குட்டியொடு மந்திதிரி கொடிமாடச் செங்குன்றூர்ச்
சிட்டனவன் திருநாமம் செப்பவிரு வினைவீடே

மட்டு - தேன்;
இட்டம் - இஷ்டம் - விருப்பம்;
இமையவர்கோன் - வானோர் தலைவன்;
சிட்டன் - சிஷ்டாசாரம் உடையவன்; நீதிமுறை வழுவாதவன்; மேலானவன்;

5)
வண்டமரும் மலர்க்குழலி மருவுமிடப் பாகத்தன்
வெண்டிரையார் வேலைதனில் விளைநஞ்சை அமுதுண்ட
கொண்டலன கண்டத்தன் கொடிமாடச் செங்குன்றூர்
அண்டனடி தொழுவாரை அருவினைநோய் அடையாவே.

வண்டு அமரும் மலர்க்குழலி மருவும் இடப் பாகத்தன் - வண்டுகள் விரும்பும் மலர்க்கூந்தலையுடைய உமையை இடப்பாகமாக உடையவன்; (மருவுதல் - தழுவுதல்);
வெண் திரை ஆர் வேலைதனில் விளை நஞ்சை அமுதுண்ட கொண்டல் அன கண்டத்தன் - வெள்ளிய அலைகள் இருக்கும் பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அமுதுபோல் உண்ட, மேகம் போன்ற கரிய நிறமுடைய கண்டத்தை உடையவன்; (திரை - அலை); (வேலை - கடல்); (கொண்டல் - மேகம்) (அன - அன்ன - இடைக்குறை);
கொடிமாடச் செங்குன்றூர் அண்டன் அடி தொழுவாரை அருவினைநோய் அடையாவே - திருச்செங்கோட்டில் உறைகின்ற கடவுளின் திருவடியை வழிபடுபவர்களை வினைகள் அடையமாட்டா; (அண்டன் - அண்டங்களுக்கெல்லாம் தலைவன்);

6)
வாளனகண் மங்கைபங்கன் மலர்க்கணைகள் ஐந்துடைய
வேளையெரி கண்ணுதலான் விரிசடைமேல் வெண்மதியன்
கோளரவக் கச்சுடையான் கொடிமாடச் செங்குன்றூர்க்
காளகண்டன் கழலிணையைக் கைதொழுவார் கவலாரே.

வாள் அன கண் மங்கைபங்கன் - வாள் போன்ற கண்ணையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (அன - அன்ன);
மலர்க்கணைகள் ஐந்து உடைய வேளை எரி கண்ணுதலான் - ஐந்து மலரம்புகளை உடைய மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (வேள் - மன்மதன்);
விரிசடைமேல் வெண்மதியன் - விரித்த சடைமேல் பிறைச்சந்திரனைச் சூடியவன்;
கோள் அரவக் கச்சு உடையான் - கொடிய பாம்பை அரைக்கச்சாகக் கட்டியவன்;
கொடிமாடச் செங்குன்றூர்க் காளகண்டன் கழலிணையைக் கைதொழுவார் கவலாரே - திருச்செங்கோட்டில் உறைகின்ற நீலகண்டனது இரு திருவடிகளை வழிபடும் அன்பர்களுக்குக் கவலை இல்லை; (காளகண்டன் - நீலகண்டன்);

7)
செம்பொன்னார் சடையுடையான் சிலைவில்லைக் கையேந்தி
அம்பொன்றால் அரண்மூன்றை ஆரழல்வாய்ப் படவைத்தான்
கொம்பன்னாள் ஒருகூறன் கொடிமாடச் செங்குன்றூர்
நம்பன்தாள் தொழுதேத்த நசியும்வல் வினைக்கட்டே.

செம்பொன் ஆர் சடை உடையான் - செம்பொன் போன்ற சடையை உடையவன்;
சிலைவில்லைக் கை ஏந்தி அம்பு ஒன்றால் அரண் மூன்றை ஆரழல்வாய்ப் படவைத்தான் - மேருமலை என்ற வில்லைக் கையில் ஏந்தி ஒரு கணையால் முப்புரங்களைத் தீப்புகச்செய்தவன்; (சிலை - மலை);
கொம்பு அன்னாள் ஒரு கூறன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு ப்கூறாக உடையவன்;
கொடிமாடச் செங்குன்றூர் நம்பன் தாள் தொழுதேத்த நசியும் வல்வினைக்கட்டே - திருச்செங்கோட்டில் உறைகின்ற சிவபெருமானது திருவடியை வழிபட்டால் வலிய வினைக்கட்டு அழியும்; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்); (நசிதல் - அழிதல்);

8)
வாராரும் முலைமங்கை ஒருபங்கன் மாமலையை
ஓராமல் அசைத்தவனை ஒருவிரலிட் டடர்த்தபரன்
கூராரும் சூலத்தன் கொடிமாடச் செங்குன்றூர்ப்
பேராமல் உறைவான்சீர் பேசவரும் பெரும்புகழே.

வார் ஆரும் முலை மங்கை ஒரு பங்கன் - கச்சு அணிந்த முலையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;
மாமலையை ஓராமல் அசைத்தவனை - சற்றும் எண்ணாமல் கயிலைமலையை அசைத்த இராவணனை; (ஓர்தல் - எண்ணுதல்);
ஒரு விரல் இட்டு அடர்த்த பரன் - ஒரு விரலை ஊன்றி நசுக்கிய பரமன்;
கூர் ஆரும் சூலத்தன் - கூர்மை மிக்க திரிசூலத்தை உடையவன்;
கொடிமாடச் செங்குன்றூர்ப் பேராமல் உறைவான் சீர் - திருச்செங்கோட்டில் நீங்காமல் உறைகின்ற பெருமான் புகழை; (இலக்கணக் குறிப்பு : ஏழாம் வேற்றுமைத் தொகையில் வரும் வலி மிகும் );
சீர் பேசவரும் பெரும்புகழே. - 1) சீர் பேச, வரும் பெரும்புகழே = அவன் சீரைப் பேசும் பக்தர்களுக்குப் ப்ரும்புகழ் வரும்; 2) சீர், பேச அரும் பெரும் புகழே = அவன் சீர் பேசுவதற்கு அரிய பெரிய புகழே = எல்லையற்ற புகழை உடையவன்;

9)
வெல்பவரார் என்றிருவர் மிகமுயன்ற பரஞ்சோதி
சில்பலிக்கென் றுழல்பெருமான் சேயிழையோர் பங்குடையான்
கொல்புலித்தோல் அரைக்கசைத்தான் கொடிமாடச் செங்குன்றூர்
நில்புனிதன் பாதமலர் நினைவார்தம் வினைவீடே.

வெல்பவர் ஆர் என்று இருவர் மிக முயன்ற பரஞ்சோதி - தம்மில் யார் பெரியவர் என்ற போட்டியில் பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி மிக முயலுமாறு நின்ற மேலான சோதி;
சில்பலிக்கு என்று உழல் பெருமான் - பிச்சைக்காகத் திரியும் பெருமான்; (சில் - சில); ( பலி - பிச்சை);
சேயிழை ஓர் பங்கு உடையான் - உமையை ஒரு பங்கில் உடையவன்;
கொல்புலித்தோல் அரைக்கு அசைத்தான் - கொல்லும் புலியின் தோலை அரையில் கட்டியவன்;
கொடிமாடச் செங்குன்றூர் நில் புனிதன் - திருச்செங்கோட்டில் நீங்காமல் உறைகின்ற தூயவன்; (இலக்கணக் குறிப்பு : கொல்புலி, நில்புனிதன் - வினைத்தொகைகள். ஆகவே, ல் திரியாது);
பாதமலர் நினைவார்தம் வினை வீடே - அப்பெருமானது திருவடித்தாமரையைத் தியானிக்கும் அன்பர்களது வினைகள் நீங்கும்;

10)
செவியிருந்தும் சிவன்சீரைக் கேளாத செவிடருரை
அவிநெறிகள் அடையேன்மின் ஆதியந்தம் இல்லாதான்
குவிமுலையாள் பிரியாதான் கொடிமாடச் செங்குன்றூர்
அவிர்சடையான் திருநாமம் அணிநாவர்க் கரணாமே.

அவிநெறி - அழியும் மார்க்கம்; (அவிதல் - அழிதல்; அவித்தல் - அழித்தல்; கெடுத்தல்)
அடையேன்மின் - அடையாதீர்கள்; நீங்கள் சேரவேண்டா;
ஆதி அந்தம் இல்லாதான் - முதலும் முடிவும் இல்லாதவன்;
குவிமுலையாள் பிரியாதான் - குவிந்த முலைகளையுடைய உமையை ஒரு கூறாக உடையவன்;
கொடிமாடச் செங்குன்றூர் அவிர்சடையான் - திருச்செங்கோட்டில் உறைகின்ற, ஒளிவீசும் சடையை உடையவன்; (அவிர்தல் - பிரகாசித்தல்);
திருநாமம் அணி-நாவர்க்கு அரண் ஆம் - அப்பெருமானது திருப்பெயரான திருவைந்தெழுத்தை அணிந்த நாவை உடையவர்க்கு அது சிறந்த பாதுகாவல் ஆகும்;
(அப்பர் தேவாரம்- 4.11.2 - "நாவினுக் கருங்கல நமச்சி வாயவே" - நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும்);
(அப்பர் தேவாரம்- 4.81.8 - "படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்" - தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந் தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன்);

11)
பொடியணிந்த திருமார்பன் பூதகணம் புடைசூழ்ந்து
துடியொலிக்கச் சுடலைதனிற் சுழன்றாடும் திருப்பாதன்
கொடியிடையாள் கூறுடையான் கொடிமாடச் செங்குன்றூர்
அடிகளையே அடிபரவும் அடியார்கட் கிடரிலையே.

பொடி அணிந்த திருமார்பன் - மார்பில் திருநீற்றைப் பூசியவன்;
பூதகணம் புடைசூழ்ந்து துடி ஒலிக்கச் சுடலைதனில் சுழன்று ஆடும் திருப்பாதன் - பூதகணங்கள் சூழ்ந்து உடுக்கைகளை ஒலிக்கச் சுடுகாட்டில் சுழன்று ஆடுகின்ற பாதத்தை உடையவன்; (துடி - உடுக்கை); (சுடலை - சுடுகாடு);
கொடியிடையாள் கூறு உடையான் - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்; அர்த்தநாரீஸ்வரன்;
கொடிமாடச் செங்குன்றூர் அடிகளையே அடிபரவும் அடியார்கட்கு இடர் இலையே - திருச்செங்கோட்டில் உறையும் சுவாமியையே வணங்கும் அடியவர்களுக்குத் துன்பம் இல்லை; (அடிகள் - கடவுள்); (அடிபரவுதல் - வணங்குதல்);

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்புகள் :
1) கொடிமாடச் செங்குன்றூர் - திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=531
----------- --------------