2014-10-14
P.250 - பிரம்மதேசம்
(பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில் - தாமிரபரணிநதியின் வடக்கே அம்பாசமுத்திரம் அருகுள்ள தலம்)
--------------------------------
(12 பாடல்கள்)
(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)
(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")
1)
ஒருமதிக் கீற்றினை உச்சி வைத்தவன்
இருநதிச் சடையினன் ஏத்தும் அன்பருக்(கு)
அருநிதி ஆகிய ஐயன் தன்னிடம்
பெருமதில் புடையணி பிரம தேசமே.
ஒரு மதிக்-கீற்றினை உச்சி வைத்தவன் - பிறையைத் திருமுடிமேல் சூடியவன்;
இருநதிச் சடையினன் - கங்கையைச் சடையில் தரித்தவன்; (இருநதி - பெரிய நதி - கங்கை);
ஏத்தும் அன்பருக்கு அருநிதி ஆகிய ஐயன் தன் இடம் - துதிக்கும் பக்தர்களுக்கு அரிய செல்வம் ஆன தலைவன் உறையும் தலம்;
பெருமதில் புடை அணி பிரமதேசமே - பெரிய மதிலால் சூழப்பெற்ற பிரமதேசம் ஆகும்; (புடை - பக்கம்);
2)
வெஞ்ஞமன் தன்னுயிர் வீட்டு தாளினார்
மஞ்ஞையின் மேல்வரு மைந்தன் தாதையார்
மைஞ்ஞவில் மிடற்றினர் மதியம் சூடிய
பிஞ்ஞக னாரிடம் பிரம தேசமே.
வெஞ்ஞமன் தன்னுயிர் வீட்டு தாளினார் - கொடிய எமனுடைய உயிரை (உதைத்து) அழித்த திருப்பாதர்; (ஞமன் - நமன் - கூற்றுவன்); (தாள் - பாதம்);
மஞ்ஞையின்மேல் வரும் மைந்தன் தாதையார் - மயில்மேல் ஏறி வரும் முருகனுக்குத் தந்தையார்; (மஞ்ஞை - மயில்); (சுந்தரர் தேவாரம் - 7.86.1 - "விடையின்மேல் வருவானை");
மைஞ்-ஞவில் மிடற்றினர் - கருமை திகழும் கண்டத்தை உடையவர்; (மை - கருமை); (ஞவில் - நவில்; நவில்தல் - தாங்குதல்); (அப்பர் தேவாரம் - 4.60.4 - "மைஞ்ஞவில் கண்டன் தன்னை");
மதியம் சூடிய பிஞ்ஞகனார் இடம் பிரமதேசமே - சந்திரனை அணிந்த, பிஞ்ஞகன் என்ற திருநாமம் உடைய, சிவபெருமானார் உறையும் இடம் பிரமதேசம் ஆகும். (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);
3)
கோணிய பிறையினன் கொடும்ப வக்கடல்
தோணியை ஒத்தவன் சுடலை நீற்றினன்
ஊணிடும் என்றுழல் ஒருவன் மாதிடம்
பேணிய கோனிடம் பிரம தேசமே.
கோணிய பிறையினன் - வளைந்த பிறையை அணிந்தவன்; (கோணுதல் - வளைதல்); (சுந்தரர் தேவாரம் - 7.48.10 - "கோணிய பிறைசூடியை");
கொடும்-பவக்கடல் தோணியை ஒத்தவன் - கொடிய பிறவிக்கடலைக் கடப்பதற்குத் தெப்பம் போன்றவன்; (பவம் - பிறவி); (தோணி - ஓடம்); (கடற்றோணி - கடலைக் கடப்பிக்கின்ற தெப்பம்; உருபும் பயனும் உடன்தொக்க தொகை);
சுடலை நீற்றினன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவன்;
"ஊண் இடும்" என்று உழல் ஒருவன் - "பிச்சை இடுங்கள்" என்று யாசித்து உழலும் ஒப்பற்றவன்; (ஊண் - உணவு);
மாது இடம் பேணிய கோன் இடம் பிரமதேசமே - உமையை இடப்பாகமாக விரும்பிய தலைவன் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்; (பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்); (கோன் - தலைவன்; நாதன்);
4)
சிறப்புறு செந்தமிழ் செப்பி நாள்தொறும்
மறப்பில ராய்அடி வணங்கு வார்வினை
அறப்பரிந் தருள்பவன் அந்த மில்லவன்
பிறப்பிலி உறைவிடம் பிரம தேசமே.
சிறப்புறு செந்தமிழ் செப்பி நாள்தொறும் மறப்பிலராய் அடி வணங்குவார் வினை அறப் பரிந்து அருள்பவன் - சிறந்த தமிழ்ப்பாமாலைகளை ஓதித் தினமும் மறவாமல் திருவடியை வணங்கும் பக்தர்களது வினை தீர இரங்கி அருள்பவன்; (அறுதல் - தீர்தல்; இல்லாமற்போதல்);
அந்தம் இல்லவன் பிறப்பிலி - சாதலும் பிறத்தலும் இல்லாதவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.112.8 - "அந்தமில்லவன் ஆடானை");
உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;
5)
நாருடை யார்க்கருள் நல்கும் நல்லவன்
கூருடை மழுவினன் கோல வெண்பிறை
நீரடை செஞ்சடை நிமலன் ஆயிரம்
பேருடை யானிடம் பிரம தேசமே.
நார் உடையார்க்கு அருள் நல்கும் நல்லவன் - அன்பர்களுக்கு அருளும் நல்லவன்; (நார் - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 1.41.11 - "நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்");
கூருடை மழுவினன் - கூர்மையான மழுவை ஏந்தியவன்;
கோல வெண்பிறை நீர் அடை- செஞ்சடை நிமலன் - அழகிய வெண்திங்களும் கங்கையும் பொருந்திய செஞ்சடையை உடைய தூயன்;
ஆயிரம் பேர் உடையான் - ஆயிரம் திருநாமங்கள் உள்ளவன்;
இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;
6)
முத்தியை நல்கிடும் முதல்வன் முக்கணன்
மத்தம ணிந்தவன் மதுரை மன்னவன்
மொத்தினை ஏற்றவன் முன்னம் நஞ்சையுண்
பித்தனி ருப்பது பிரம தேசமே.
முத்தியை நல்கிடும் முதல்வன் - முக்தியை அளிக்கும் முதல்வன்;
முக்கணன் - மூன்று கண்கள் உடையவன்;
மத்தம் அணிந்தவன் - ஊமத்தமலரைச் சூடியவன்;
மதுரை மன்னவன் மொத்தினை ஏற்றவன் (முன்னம்) - முன்னொருநாள் பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டவன்; (மொத்து - அடி); (முன்னம் - இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைக்கலாம்);
முன்னம் நஞ்சை உண் பித்தன் - முன்பு ஆலகாலத்தை உண்ட பேரருளாளன்; (பித்தன் - சிவன் திருநாமம் - பேரருளாளன்);
இருப்பது பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;
7)
நறைமலர் நாள்தொறும் நம்பி இட்டவர்
குறையறப் பல்வரம் கொடுக்கும் அன்பினன்
அறைபுனல் கூவிளம் அரவம் வெள்ளிளம்
பிறையணிந் தானிடம் பிரம தேசமே.
நறைமலர் நாள்தொறும் நம்பி இட்டவர் குறை அறப் பல்வரம் கொடுக்கும் அன்பினன் - தினமும் வாசமலர்களைத் தூவி விரும்பி வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் குறையெல்லாம் தீரும்படி பலவரங்களைக் கொடுக்கும் அன்புடையவன்; (நறை - தேன்; வாசனை); (நம்புதல் - விரும்புதல்);
அறை-புனல் கூவிளம் அரவம் வெள்-இளம்-பிறை அணிந்தான் - அலைமோதி ஒலிக்கின்ற கங்கை, வில்வம், பாம்பு, வெண்மையான இளந்திங்கள் இவற்றைச் சூடியவன்; (அறைதல் - ஒலித்தல்; அலைமோதுதல்); (கூவிளம் - வில்வம்);
இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;
8)
விண்ணவ ருந்தொழு வெற்பி டந்தவன்
திண்ணிய தோள்நெரி செய்த தாளினார்
வெண்ணிற விடையினர் விமலர் பங்கினில்
பெண்ணமர்ந் தாரிடம் பிரம தேசமே.
விண்ணவரும் தொழு வெற்பு இடந்தவன் திண்ணிய தோள் நெரிசெய்த தாளினார் - (மண்ணுலகோரும்) வானவரும் வணங்கும் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது வலிய புஜங்களை நசுக்கிய திருப்பாதர்; (விண்ணவரும் - தேவர்களும்; உம் - எச்சவும்மை); (வெற்பு - மலை); (நெரிசெய்தல் - நசுக்குதல்);
வெண்ணிற விடையினர் - வெள்ளை எருதை வாகனமாக உடையவர்;
விமலர் - பரிசுத்தர்;
பங்கினில் பெண் அமர்ந்தார் - ஒரு பங்கில் உமையை விரும்பியவர்; ( அமர்தல் - விரும்புதல்);
இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;
9)
கரியவன் நான்முகன் காணொ ணாதவோர்
எரியவன் ஒருகணை ஏவி ஒன்னலர்
திரியரண் மூன்றினில் தீயைச் சேர்த்தருள்
பெரியவன் உறைவிடம் பிரம தேசமே.
கரியவன் நான்முகன் காணொணாத ஓர் எரியவன் - திருமால் பிரமன் இவர்களால் காண இயலாத ஒப்பற்ற ஜோதி; (காணொணாத - காண ஒணாத; தொகுத்தல்விகாரம், இடைக்குறைவிகாரம்); (ஓர் - ஒப்பற்ற);
ஒரு கணை ஏவி, ஒன்னலர் திரி-அரண் மூன்றினில் தீயைச் சேர்த்தருள் பெரியவன் - ஓர் அம்பை எய்து, பகைவர்களது, எங்கும் திரிந்த முப்புரங்களும் தீயில் மூழ்கும்படி செய்த பெருமான்; (ஒன்னலர் - பகைவர்); (திரியரண் - திரிந்த அரண்கள்);
உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;
10)
குற்றமி குத்தவர் கூறும் பொய்ம்மொழி
வெற்றுரை இடரினில் வீழ்த்தும் நீங்குமின்
பெற்றமு கந்தவன் பேணு வார்க்கருள்
பெற்றியன் உறைவிடம் பிரம தேசமே.
குற்றம் மிகுத்தவர் கூறும் பொய்ம்மொழி வெற்றுரை இடரினில் வீழ்த்தும் - குற்றம் மிகுந்தவர்கள் சொல்கின்ற பொய்களும் பயனற்ற வார்த்தைகளும் துன்பத்தில் தள்ளும்;
நீங்குமின் - ஆதலால், அவற்றை / அவர்களை நீங்குங்கள்;
பெற்றம் உகந்தவன் - இடபவாகனத்தை விரும்பியவன்; (பெற்றம் - இடபம்; எருது); (உகத்தல் - விரும்புதல்);
பேணுவார்க்கு அருள் பெற்றியன் - போற்றி வழிபடுபவர்களுக்கு அருள்கின்ற தன்மை உடையவன்; (பெற்றி - இயல்பு; பெருமை);
உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;
11)
கருதிவந் தேத்திடக் கவலை தீர்ப்பவன்
பொருதுவெங் கரியுரி போர்த்த மார்பினன்
எருதணி கொடியினன் இலந்தை நீழலைப்
பெரிதுகந் தானிடம் பிரம தேசமே.
கருதி வந்து ஏத்திடக் கவலை தீர்ப்பவன் - விரும்பி வந்து வழிபடும் பக்தர்களுடைய கவலையைத் தீர்ப்பவன்;
பொருது வெங்கரி-உரி போர்த்த மார்பினன் - போர் செய்த கொடிய யானையின் தோலை மார்பில் போர்த்தவன்; (பொருதல் - போர்செய்தல்); (கரி - யானை); (உரி - தோல்);
எருது அணி கொடியினன் - இடபக்கொடி உடையவன்;
இலந்தை நீழலைப் பெரிது உகந்தான் - இலந்தைமரத்தின் கீழே விரும்பி இருப்பவன்; (* இலந்தை - இத்தலத்தின் தலவிருட்சம்); (சம்பந்தர் தேவாரம் - 3.115.1 - "ஆலநீழ லுகந்த திருக்கையே");
இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;
12)
துணிமதிக் கண்ணியைச் சூடு சுந்தரன்
மணியணி மிடற்றினன் மங்கை பங்கினன்
பணியணி மார்பினன் பாதம் பற்றினார்
பிணியறுப் பானிடம் பிரம தேசமே.
துணி-மதிக்-கண்ணியைச் சூடு சுந்தரன் - பிறையைக் கண்ணி போலச் சூடிய அழகன்; (துணி - துண்டம்); (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);
மணி அணி மிடற்றினன் - நீலமணியை அணிந்த கண்டத்தை உடையவன்;
மங்கை பங்கினன் - உமையொருபங்கன்;
பணி அணி மார்பினன் - பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவன்; (பணி - நாகம்);
பாதம் பற்றினார் பிணி அறுப்பான் - திருவடியைச் சரண் அடைந்தவர்களுடைய பந்தங்களையும் நோய்களையும் நீக்குபவன்; (பிணி - பந்தம்; நோய்);
இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------