Monday, October 9, 2023

08.05.033 - காத்தருளாய் கற்பகமே (மும்மண்டில வெண்பா)

08.05 – பலவகை

2008-08-30

08.05.033 - காத்தருளாய் கற்பகமே (மும்மண்டில வெண்பா)

----------------------------------------

காத்தருளாய் கற்பகமே; மூத்தவனே; சென்னிமிசை

ஆர்த்துவரும் நற்புனலைச் சேர்த்தவனே; - பேர்த்தெறிய

வெற்பெடுத்தான் வேர்த்தழுது தோத்திரிக்க வைத்தவனே;

நெற்றியொரு நேத்திர னே.


கற்பகமே மூத்தவனே சென்னிமிசை ஆர்த்துவரும்

நற்புனலைச் சேர்த்தவனே பேர்த்தெறிய - வெற்பெடுத்தான்

வேர்த்தழுது தோத்திரிக்க வைத்தவனே நெற்றியொரு

நேத்திரனே காத்தரு ளாய்.


மூத்தவனே சென்னிமிசை ஆர்த்துவரும் நற்புனலைச்

சேர்த்தவனே பேர்த்தெறிய வெற்பெடுத்தான் - வேர்த்தழுது

தோத்திரிக்க வைத்தவனே நெற்றியொரு நேத்திரனே

காத்தருளாய் கற்பக மே.


காத்தருளாய் - காத்தருள் செய்வாயாக;

கற்பகமே - கற்பகமரம்போல் எண்ணிய வரங்கள் அளிப்பவனே;

மூத்தவனே - எல்லாவற்றிற்கும் முன்பே இருந்தவனே;

சென்னிமிசை ஆர்த்துவரும் நற்புனலைச் சேர்த்தவனே - திருமுடிமேல் ஒலித்துவரும் தூய கங்கையைத் தாங்கியவனே; (புனல் - நீர்);

பேர்த்து எறிய வெற்பு எடுத்தான் வேர்த்து அழுது தோத்திரிக்கவைத்தவனே - கயிலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனை அவன் அஞ்சி அழுது திருவடியைத் துதிக்கச்செய்தவனே; துதிக்கும்படி விரலை வைத்தவனே; (வெற்பு - மலை); (வேர்த்தல் - அஞ்சுதல்);

நெற்றியொரு நேத்திரனே - நெற்றியில் ஒரு கண்ணை உடையவனே;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள்:

இலக்கணக் குறிப்பு: மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் சீரையோ மூன்றாம் சீரையோ முதற்சீராகக் கொண்டு முதற்சீரையோ முதல் இருசீர்களையோ இறுதியில் வைத்து நோக்கினாலும், வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்.


முதல் வெண்பாவின் இரண்டாம் சீரை இரண்டாம் வெண்பாவின் முதல் சீராக வைத்து எழுதும்போது முதல் வெண்பாவின் முதல் சீர் இரண்டாம் வெண்பாவின் இறுதியில் வரும். இப்படியே அடுத்த வகைக்கும் முதல் இரண்டு சீர்கள் வெண்பாவின் இறுதியில் வரும். தளையைப் பார்த்துச் சீர்களைப் பிரிக்க நேரிடும்.

-------------------------------- -------------------------------


08.05.032 - காவலனே நாவலனே (மும்மண்டில வெண்பா)

08.05 – பலவகை

2008-08-30

08.05.032 - காவலனே நாவலனே (மும்மண்டில வெண்பா)

----------------------------------------

காவலனே நாவலனே மேவலரூர் மூன்றெரித்த

ஏவலனே பூவமர்வோன் மாவலிபால் மூவடியோன்

மேவகிலாத் தீவணனே தேவவென ஆவலொடு

சேவடிக்கே பாவமைத் தேன்.


நாவலனே மேவலரூர் மூன்றெரித்த ஏவலனே

பூவமர்வோன் மாவலிபால் மூவடியோன் மேவகிலாத்

தீவணனே தேவவென ஆவலொடு சேவடிக்கே

பாவமைத்தேன் காவல னே.


மேவலரூர் மூன்றெரித்த ஏவலனே பூவமர்வோன்

மாவலிபால் மூவடியோன் மேவகிலாத் தீவணனே

தேவவென ஆவலொடு சேவடிக்கே பாவமைத்தேன்

காவலனே நாவல னே.


காவலனே - காப்பவனே; அரசனே;

நாவலனே - நாவன்மை உடையவனே; (நா வலன் - மறையோதுவதால் நாவலன்);

மேவலர் ஊர் மூன்று எரித்த -வலனே - பகைவரது முப்புரங்களை அம்பு எய்து அழித்தவனே; (மேவலர் - பகைவர்); (- அம்பு); (வலன் - வல்லவன்); (நா வலன் - மறையோதுவதால் நாவலன்);

பூமர்வோன் மாவலிபால் மூவடியோன் மேவகிலாத் தீவணனே - தாமரைமேல் இருக்கும் பிரமன், மகாபலியிடம் மூவடி மண் யாசித்த திருமால் இவர்களால் அடைய ஒண்ணாத ஜோதிவடிவினனே; (மாவலி - மஹாபலி); (மேவுதல் - அடைதல்); (தீவணன் - தீவண்ணன்);

தேவன ஆவலொடு சேவடிக்கே பாமைத்தேன் - தேவனே என்று விரும்பித் திருவடிக்கே ஒரு பாடல் அமைத்தேன்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள்:

1. இலக்கணக் குறிப்பு: மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் சீரையோ மூன்றாம் சீரையோ முதற்சீராகக் கொண்டு முதற்சீரையோ முதல் இருசீர்களையோ இறுதியில் வைத்து நோக்கினாலும், வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்.


முதல் வெண்பாவின் இரண்டாம் சீரை இரண்டாம் வெண்பாவின் முதல் சீராக வைத்து எழுதும்போது முதல் வெண்பாவின் முதல் சீர் இரண்டாம் வெண்பாவின் இறுதியில் வரும். இப்படியே அடுத்த வகைக்கும் முதல் இரண்டு சீர்கள் வெண்பாவின் இறுதியில் வரும். தளையைப் பார்த்துச் சீர்களைப் பிரிக்க நேரிடும்.


2. சுந்தரர் தேவரம் - 7.17.1 -

கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய

மேவலர் முப்புரம் தீயெழு வித்தவர் ஓரம்பினால்

ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட

நாவல னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே);

-------------------------------- -------------------------------