Monday, May 1, 2023

08.05.031 - தண்டியடிகள் வரலாறு - மணியை அடித்த

08.05 – பலவகை

2008-01-05

08.05.031 - தண்டியடிகள் வரலாறு - மணியை அடித்த

----------------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)


1)

மணியை அடித்த பசுவிற்கா

.. மகனைக் கூடத் தண்டிக்கத்

துணியும் அரசன் மனுநீதிச்

.. சோழன் ஆண்ட ஆரூரில்

மணியாய்த் தண்டி வந்துதித்தார்;

.. மனக்கண் மட்டும் பெற்றிருந்தார்;

தணியா அன்பால் தியாகேசன்

.. தாளைத் தினமும் தொழுதுவந்தார்.


பசுவிற்கா - பசுவிற்காக – கடைக்குறை;

தண்டி வந்து உதித்தார் - தண்டியடிகள் அவதரித்தார்;

மனக்கண் மட்டும் பெற்றிருந்தார் - பிறவிக்குருடர்;

தணியா - தணியாத - குறையாத;

தியாகேசன் - திருவாரூரில் சிவன் திருநாமம்;

தொழுதுவந்தார் - தொழுது உவந்தார்; / தொழுது வந்தார்;


2)

அந்த நாளில் அமணர்கள்

.. ஆதிக் கத்தால் திருவாரூர்

எந்தை கோயிற் குளம்சுற்றி

.. எங்கும் அவர்கள் பாழிகளே

வந்த டைந்து, குளம்தூர்ந்து

.. மறையத் தொடங்கு வதுகேட்டு

நொந்து, குளத்தை விரிவாக்கும்

.. நோக்கம் கொண்டார் தண்டியுமே.


அமணர் - சமணர்கள்;

எந்தை - எம் தந்தை - கடவுள்;

பாழி - சமணர்களது ஆலயம்/உறைவிடம்;


3)

கரையில் கோலை நாட்டிஒரு

.. கயிற்றைக் கட்டிக் குளம்நடுவே

தரையில் இன்னோர் கோல்நட்டுத்

.. தடவி நடந்து தளராமல்

இரவு பகலாய் மண்தோண்டி

.. எடுத்து வெளியில் கொட்டி,முன்னர்ப்

புரங்கள் எரித்த பெருமானைப்

.. போற்றித் தொண்டு புரிந்துவந்தார்.


நாட்டுதல் - நடுதல்;


4)

அதனைக் கண்டு சமணரெலாம்

.. "அடாத செயலால் பல்லுயிரை

வதைக்கின் றீரே; நிறுத்துங்கள்;

.. மண்ணைத் தோண்டா தீர்"என்றார்;

"இதைநான் செய்வ தறமே"என்

.. றியம்பித் தண்டி தொடர்ந்துசெய்தார்;

மதம்பி டித்த மனத்தமணர்

.. மறித்து நின்று வசைமொழிந்தார்,


பதம் பிரித்து:

அதனைக் கண்டு சமணரெலாம் "அடாத செயலால் பல்லுயிரை வதைக்கின்றீரே; நிறுத்துங்கள்; மண்ணைத் தோண்டாதீர்" என்றார்; "இதை நான் செய்வது அறமே" என்று இயம்பித் தண்டி தொடர்ந்துசெய்தார்; மதம் பிடித்த மனத்து அமணர் மறித்து நின்று வசை மொழிந்தார்,


இப்பாடலின் கருத்து அடுத்த பாடலிலும் தொடர்கிறது.

அடாத – தகாத;

அறம் - தர்மம்; புண்ணியம்;

இயம்பி - சொல்லி;

மறித்தல் - தடுத்தல்;


5)

"பார்க்கும் கண்தான் குருடென்றால்

.. பாவம் உமது காதுகளும்

கேட்கும் திறனை இழந்தனவோ"?

.. கேட்ட தண்டி அவர்களிடம்

"நோக்கும் கண்கள் இருந்தாலும்

.. நோக்காக் குருடர் ஆகிவிட்டீர்;

வாக்கில் இனிமை இல்லாதீர்

.. மாயக் குழியில் விழுந்தீரே;


இப்பாடலின் கருத்து அடுத்த பாடலிலும் தொடர்கிறது.

மாயம் - பொய்; அஞ்ஞானம்;


6)

யார்க்கும் தலைவன் சிவபெருமான்

.. அருளால் எனது கண்களுக்குப்

பார்க்கும் சக்தி வந்தும்கண்

.. பார்வை இழந்தால் என்செய்வீர்

மூர்க்க ரே"என் றெதிர்க்கேள்வி

.. மொழிந்தார்; "அவ்வா றானால்நாம்

ஊர்க்குள் இராது போவோம்"என்

.. றுரைத்த அமணர், மிகச்சினந்து,


பதம் பிரித்து:

"யார்க்கும் தலைவன் சிவபெருமான் அருளால் எனது கண்களுக்குப் பார்க்கும் சக்தி வந்து உம் கண் பார்வை இழந்தால் என் செய்வீர் மூர்க்கரே?" என்று எதிர்க்கேள்வி மொழிந்தார்; "அவ்வாறு ஆனால் நாம் ஊர்க்குள் இராது போவோம்"என்று உரைத்த அமணர், மிகச் சினந்து,


இப்பாடலின் கருத்து அடுத்த பாடலிலும் தொடர்கிறது.

ஊர்க்குள் - ஊருள் என்று வரவேண்டியது எதுகைநோக்கி "ஊர்க்குள்" என்று வந்தது;


7)

தண்டி சுமந்த கூடையினைத்

.. தட்டி உருட்டி அபகரித்துக்

கொண்டு, கயிற்றை அறுத்தந்தக்

.. கோல்கள் எல்லாம் உடைத்தெறிந்தார்;

தொண்டு தடைப்பட் டதனாலே

.. துவண்ட பக்தர், கோயிலுள்போய்

"அண்டர் நாதா என்செய்வேன்

.. அருள்செய் வாய்"என் றடிதொழுதார்;


பதம் பிரித்து:

தண்டி சுமந்த கூடையினைத் தட்டி உருட்டி அபகரித்துக்கொண்டு, கயிற்றை அறுத்து, அந்தக் கோல்கள் எல்லாம் உடைத்து எறிந்தார்; தொண்டு தடைப்பட்டதனாலே துவண்ட பக்தர், கோயிலுள்போய் "அண்டர் நாதா என் செய்வேன்? அருள்செய்வாய்" என்று அடிதொழுதார்;


அண்டர் நாதன் - உலகங்களுக்கு எல்லாம் தலைவன்;


8)

ஒன்றும் உண்ணா துறங்குகின்ற

.. உயர்ந்த பக்தர் கனவினிலே

அன்று வந்த எம்பெருமான்

.. "அஞ்ச வேண்டா கண்பெறுவாய்"

என்று மொழிந்து, சோழனுக்கும்

.. "எமது பக்தன் தண்டியிடம்

சென்று திருப்ப ணிக்குதவி

.. செய்க" என்றார் அவன்கனவில்;


9)

மறுநாள் பொழுது விடிந்ததும்போய்

.. மன்னன் அங்கே நிகழ்ந்தெல்லாம்

உறுதி யாகத் தெரிந்துகொண்டான்;

.. ஊரே பார்க்க, வினையெல்லாம்

அறுக்கும் அஞ்செ ழுத்துரைத்தே

.. அடியார் குளத்தில் மூழ்கியெழ,

வெறுத்த அமணர் குருடானார்;

.. விழிகள் பெற்றார் சிவபக்தர்.


அஞ்சு எழுத்து - "நமச்சிவாய" என்ற பஞ்சாட்சரம்;


10)

புவனம் படைத்த சிவனடியைப்

.. போற்றும் சிறந்த தொண்டர்க்குத்

தவறி ழைத்த அமணர்கள்

.. தங்கள் கண்கள் காணாத

அவல நிலையை அடைந்தோம்என்

.. றஞ்சி ஆரூர் நீங்கினரே;

சிவனார் திருக்கு ளப்பணியைச்

.. செய்து முடித்தான் சோழமன்னன்.


பதம் பிரித்து:

புவனம் படைத்த சிவன் அடியைப் போற்றும் சிறந்த தொண்டர்க்குத் தவறு இழைத்த அமணர்கள் தங்கள் கண்கள் காணாத அவல நிலையை அடைந்தோம் என்று, அஞ்சி ஆரூர் நீங்கினரே; சிவனார் திருக்குளப்-பணியைச் செய்து முடித்தான் சோழமன்னன்.


புவனம் - உலகம்;


11)

மண்ணிற் குருடாய்ப் பிறந்தாலும்

.. மாதோர் கூறன் திருவடியே

எண்ணித் தினமும் தொண்டாற்றி

.. ஈடில் லாத கருணையுள்ள

அண்ணல் அவன தருளாலே

.. அனைவர் அறியத் தம்முடைய

கண்ணில் ஒளியைப் பெற்றதண்டி

.. கழலைப் போற்று கின்றேனே.


மாது ஓர் கூறன் - பார்வதியை ஒரு கூறாக உடைய சிவன்;

கழல் - திருவடி;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு:

இலக்கணக் குறிப்பு: ஒரு பாடலின் கருத்து ஒரு பாடலில் முற்றுப்பெறாது அடுத்த பாடலிலும் தொடர்வது "குளகம்" எனப்படும்.

-------------------------------- -------------------------------