05.26 – புகலூர் (திருப்புகலூர்)
2015-03-13
புகலூர் (திருப்புகலூர்)
----------------------
(எழுசீர்ச் சந்தவிருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்")
1)
வனமேந்து கின்ற முலைமாதை வாமம் மகிழ்கின்ற எந்தை புகழே
தினமோதும் அன்பர் இடர்தீர்த்து மல்கு திருவாக நல்கும் ஒருவன்
கனலேந்தி ஆடி கடல்நஞ்சம் உண்டு கறைகாட்டு கின்ற மிடறன்
புனலார்ந்த வாவி புடைசூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.
வனம் ஏந்துகின்ற முலை மாதை வாமம் மகிழ்கின்ற எந்தை புகழே - அழகு மிக்க முலையையுடைய உமையை இடப்பக்கம் கூறாக விரும்பிய எம் தந்தையின் புகழையே; (வனம் - அழகு); (ஏந்துதல் - சிறத்தல்; மிகுதல்); (வாமம் - இடப்பக்கம்);
தினம் ஓதும் அன்பர் இடர் தீர்த்து மல்கு திரு ஆக நல்கும் ஒருவன் - தினமும் ஓதுகின்ற பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து மிகுந்த திருவை அருளும் ஒப்பற்றவன்;
கனல் ஏந்தி ஆடி - தீயை ஏந்தி ஆடுபவன்; (ஆடி - ஆடுபவன்);
கடல்நஞ்சம் உண்டு கறை காட்டுகின்ற மிடறன் - கடலில் எழுந்த விடத்தை உண்டு கறையைக் கண்டத்தில் உடையவன்;
புனல் ஆர்ந்த வாவி புடைசூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே - நீர் நிறைந்த தடாகம் சூழ்ந்திருக்கும் திருப்புகலூரி உறைகின்ற பரமன்;
2)
வடியாரும் மூன்று நுனைவேலும் மானும் மழுவாளும் ஏந்தும் இறைவன்
அடியேநி னைந்து துதிபாடு கின்ற அடியார்க்கு நல்கும் அருளன்
துடியேர்ம ருங்குல் உமைபங்கன் நீறு துதைகின்ற மார்பில் அரவன்
பொடியாரும் வண்டு புகழ்பாடு கின்ற புகலூரில் நின்ற பரனே.
வடியாரும் மூன்று நுனைவேலும் - கூரிய மூன்று நுனிகளையுடைய சூலத்தையும்; (வடி - கூர்மை); (நுனை - முனை; நுனி);
துடி ஏர் மருங்குல் - உடுக்கை போன்ற இடை - சிற்றிடை;
துதைதல் - படிதல்; மிகுதல்;
அரவன் - பாம்பை அணிந்தவன்;
பொடி ஆரும் வண்டு புகழ் பாடுகின்ற புகலூரில் நின்ற பரனே - பூக்களில் மதுவுண்டு மகரந்தப் பொடியை உடல்மேல் அணிந்த வண்டுகள் துதி பாடுகின்ற புகலூரில் உறைகின்ற பரமன்; (பொடி - மகரந்தம்); (திருநீறு பூசித் தொண்டர்கள் ஈசன் புகழைப் பாடுவது போல் பொடி அணிந்த வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற புகலூர்);
3)
பாதார விந்த இணைபோற்று பத்தர் பவநீக்கி இன்பம் அருள்வான்
மாதாரு மேனி மணியேறு கண்டம் மதியேறு சென்னி உடையான்
ஆதார மாகி உலகங்க ளாக்கி அவைநீக்கி ஆடல் புரிவான்
போதாரும் ஏர்கொள் பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.
பாதாரவிந்த இணை போற்று பத்தர் பவம் நீக்கி இன்பம் அருள்வான் - இரு திருவடித்தாமரைகளைப் போற்றும் பக்தர்களது பிறவிப்பிணியை நீக்கி இன்பம் அருள்பவன்; (பவம்- பிறவித்தொடர்);
மாது ஆரும் மேனி, மணி ஏறு கண்டம், மதி ஏறு சென்னி உடையான் - அர்த்தநாரீஸ்வரன், நீலகண்டன், சந்திரசேகரன்;
ஆதாரம் ஆகி உலகங்கள் ஆக்கி அவை நீக்கி ஆடல் புரிவான் - ஆதாரம் ஆகி, உலகங்களையெல்லாம் படைத்துப், பின் அவற்றை ஒடுக்கித் திருவிளையாடல் செய்பவன்; (ஆதாரம் - பற்றுக்கோடு);
போது ஆரும் ஏர்கொள் பொழில் சூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே- பூக்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்து விளங்குகின்ற புகலூரில் உறைகின்ற பரமன்; (போது - பூ); (ஏர் - அழகு);
4)
சேவேறு கின்ற சிவனைப்ப ணிந்து திருவாக்கும் நால்வர் தமிழ்தான்
நாவேறு கின்ற அடியார்கள் என்றும் நலவாழ்வு வாழ அருள்வான்
வானாறு கொன்றை மதமத்தம் வன்னி மதிசூடு கின்ற முடியன்
பூநாறு கின்ற பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.
சே ஏறுகின்ற - இடபத்தை ஊர்தியாக உடைய;
திரு ஆக்கும் நால்வர் தமிழ்தான் நா ஏறுகின்ற அடியார்கள் - நன்மை தரும் தேவாரம், திருவாசகம் பாடுகின்ற பக்தர்கள்;
என்றும் நலவாழ்வு வாழ அருள்வான் - என்றும் நலம் மிக்க வாழ்வு பெற அருள்பவன்; (நலவாழ்வு - 1. நலம் + வாழ்வு; 2. நல்ல வாழ்வு);
வான் ஆறு, கொன்றை, மதமத்தம், வன்னி, மதி சூடுகின்ற முடியன் - திருமுடிமேல் கங்கை, கொன்றை, ஊமத்தமலர், வன்னி, திங்கள் அணிந்தவன்; (வான் ஆறு - வானதி - கங்கை);
பூ நாறுகின்ற பொழில் - பூக்கள் மணம் வீசுகின்ற சோலை;
5)
கதநாகம் ஆர்த்த அரையாதொ டுத்த கணைகண்டு கண்ணி லெரியால்
மதனாகம் அட்ட மணியேபி றங்கு மதியாயெ னச்சொ லடியார்
எதனாலும் இன்னல் இலராக நல்கும் எழிலார்ந்த கண்டம் உடையான்
புதுவீயில் வண்டு மதுவுண்டு பாடு புகலூரில் நின்ற பரனே.
கத நாகம் ஆர்த்த அரையா - சீறும் பாம்பைக் கட்டிய அரையை உடைய அரசனே; (கதம் - சினம்); (அரையன் - அரசன்); (அரை - இடுப்பு );
தொடுத்த கணை கண்டு கண்ணில் எரியால் மதன் ஆகம் அட்ட மணியே - மன்மதன் மலர்க்கணையைத் தொடுத்தபொழுது நெற்றிக்கண்ணின் நெருப்பால் அவனது உடலை எரித்தவனே, சிறந்த மணி போன்றவனே;
பிறங்கு மதியாய் எனச் சொல் அடியார் - பிரகாசிக்கும் சந்திரனை அணிந்தவனே என்று போற்றும் பக்தர்கள்; (பிறங்குதல் - விளங்குதல்); (அப்பர் தேவாரம் - 4.89.2 - "தேய்ந்திலங்கும் சிறு வெண்மதியாய்");
எதனாலும் இன்னல் இலராக நல்கும் எழில் ஆர்ந்த கண்டம் உடையான் - எவ்விதத் துன்பமும் அற்றவர்கள் ஆகும்படி அருளும், அழகிய நீலகண்டத்தை உடையவன்;
புது வீயில் வண்டு மது உண்டு பாடு - அன்று பூத்த பூவில் வண்டுகள் தேனை உண்டு ரீங்காரம் செய்கின்ற; (வீ - பூ); (சுந்தரர் தேவாரம் - 7.41.1 - "மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா");
புகலூரில் நின்ற பரனே - திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;
6)
நாவார வாழ்த்தி அடிபோற்றும் அன்பர் நலமாக வாழ அருள்வான்
மேவார்தம் மூன்று புரம்வேவ மேரு விலையேந்தி நக்க பெருமான்
தேவாதி தேவன் மலைமங்கை கூறு திகழ்கின்ற மேனி உடையான்
பூவாச மல்கு பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.
மேவார் - பகைவர்;
மேரு விலை - மேருமலை என்ற வில்லை; (விலை - வில்லை என்பது இடைக்குறையாக வந்தது);
நக்க - சிரித்த;
பூவாசம் மல்கு பொழில் - பூக்களின் மணம் மிகுந்த சோலை;
7)
அவியாது வாழ அமுதத்தை நாடும் இமையோர்க டைந்த கடலில்
குவிநஞ்சு கண்டு தவிநெஞ்சு கொண்டு குழுமிப்ப ராவு மொழிகள்
செவியேற்று நஞ்சை மணிசெய்து காத்த திருநீல கண்டம் உடையான்
புவியோர டைந்து புகழ்பாடு கின்ற புகலூரில் நின்ற பரனே.
அவியாது வாழ அமுதத்தை நாடும் இமையோர் கடைந்த கடலில் - இறவாமல் வாழ அமுதத்தைப் பெற விரும்பிய தேவர்கள், கடைந்த பாற்கடலில்; (அவிதல் - சாதல்);
குவி நஞ்சு கண்டு தவி நெஞ்சு கொண்டு குழுமிப் பராவு மொழிகள் - திரண்ட விடத்தைக் கண்டு தவிக்கும் மனம்கொண்டு ஒன்றுகூடித் துதித்த துதிகளை; (குவிநஞ்சு - குவிந்த நஞ்சு);
செவியேற்று நஞ்சை மணிசெய்து காத்த திருநீலகண்டம் உடையான் - கேட்டருளி, ஆலகால விடத்தை நீலமணி (போல) ஆக்கிக் காத்த திருநீலகண்டன்; (அப்பர் தேவாரம் - 5.97.24 - "மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்");
புவியோர் அடைந்து புகழ் பாடுகின்ற புகலூரில் நின்ற பரனே - உலகத்தினர் வந்து ஈசன் புகழைப் பாடி வழிபடுகின்ற திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;
8)
கரமூன்றி நீடு வரைபேர்த்த மூடன் உரமார்பு யங்க ளுடனே
சிரமூன்று மேழும் இறவூன்றி யாழின் இசைகேட்டி ரங்கு வரதன்
சரமூன்றி ரண்டு தனையேவு காமன் உடல்நீறு செய்த தலைவன்
புரமூன்றை எய்த வரைவில்லி எந்தை புகலூரில் நின்ற பரனே.
பதம் பிரித்து:
கரம் ஊன்றி நீடு-வரை பேர்த்த மூடன் உரம் ஆர் புயங்களுடனே
சிரம் மூன்றும் ஏழும் இற ஊன்றி, யாழின் இசை கேட்டு இரங்கு வரதன்;
சரம் மூன்று இரண்டுதனை ஏவு காமன் உடல் நீறு செய்த தலைவன்;
புரம் மூன்றை எய்த வரைவில்லி, எந்தை, புகலூரில் நின்ற பரனே.
கரம் ஊன்றி நீடு வரை பேர்த்த மூடன் - கைகளால் கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது; (நீடு வரை - நெடிய மலை - இங்கே கயிலைமலை);
உரம் ஆர் புயங்களுடனே சிரம் மூன்றும் ஏழும் இற ஊன்றி - வலிய புஜங்களும் பத்துத்தலைகளும் அழியும்படி திருப்பாத விரலை ஊன்றி;
யாழின் இசை கேட்டு இரங்கு வரதன் - அவன் இசைத்த யாழ் இசையைக் கேட்டு இரங்கி வரம் அருளியவன்; (வரதன் - வரம் அளிப்பவன்);
சரம் மூன்று இரண்டுதனை ஏவு காமன் உடல் நீறு செய்த தலைவன் - ஐந்து பாணங்களைத் தொடுக்கும் மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய தலைவன்;
புரம் மூன்றை எய்த வரைவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தி ஒரு கணையை எய்து முப்புரங்களை அழித்தவன்; (வரைவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்);
எந்தை - எம் தந்தை;
புகலூரில் நின்ற பரனே - திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;
9)
மயல்கொண்டு நேடு மலரானும் மாலும் அறியாத சோதி வடிவன்
இயல்கொண்டும் ஏழின் இசைகொண்டும் ஏத்தும் அடியாரை நாடி வருவான்
கயல்கெண்டை பாயும் வயல்கண்டு நாரை இரைதேர நிற்க அயலே
புயல்வந்து தீண்டு பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.
மயல்கொண்டு நேடு மலரானும் மாலும் அறியாத சோதி வடிவன் - ஆணவத்தால் தேடிய பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாத சோதி உருவினன்; (மயல் - அறியாமை); (கொண்டு - ஆல் என்ற வேற்றுமை உருபு); (மலரான் - பிரமன்);
இயல்கொண்டும் ஏழின் இசைகொண்டும் ஏத்தும் அடியாரை நாடி வருவான் - இயற்றமிழ் இசைத்தமிழ் இவற்றால் வழிபடும் பக்தர்களைத் தேடி வருபவன்; (இயல் - இயற்றமிழ்);
கயல் கெண்டை பாயும் வயல் கண்டு நாரை இரைதேர நிற்க அயலே - கயல், கெண்டை முதலிய மீன்கள் பாயும் வயலைக் கண்டு நாரைகள் இரைதேர்வதற்காக நிற்க, அருகே;
புயல் வந்து தீண்டு பொழில் சூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே - மேகம் வந்து தீண்டுகின்ற உயர்ந்த சோலை வீளங்குகின்ற திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்; (புயல் - மேகம்);
10)
கள்ளங்க ரந்த கருநெஞ்சி னோர்கள் கழறும்பு ரட்டை ஒழிமின்
உள்ளங்க ரைந்து தொழுவார்க்கு நம்பன் உலவாத இன்பம் அருள்வான்
வெள்ளங்க ரந்த சடைமீது நாகம் வெறியார்ந்த கொன்றை அணிவான்
புள்ளின்கு லங்கள் ஒலிசோலை சூழ்ந்த புகலூரில் நின்ற பரனே.
கள்ளம் கரந்த கருநெஞ்சினோர்கள் - வஞ்சத்தை உள்ளே மறைத்திருக்கும் கொடிய மனம் உடையவர்கள்; (கருமை - கறுப்பு ; கொடுமை);
கழறுதல் - சொல்லுதல்;
புரட்டு - வஞ்சகப்பேச்சு;
ஒழிமின் - ஒழியுங்கள்; விட்டுநீங்குங்கள்; (ஒழிதல் / ஒழித்தல்);
நம்பன் - விரும்பத்தக்கவன்; விரும்பப்படுபவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;
உலவாத இன்பம் - அழிவற்ற இன்பம்; (உலத்தல் - குறைதல்; அழிதல்);
வெள்ளம் கரந்த சடைமீது நாகம் வெறி ஆர்ந்த கொன்றை அணிவான் - கங்கையை ஒளித்த சடைமேல் பாம்பு, மணம் மிக்க கொன்றைமலர் இவற்றை அணிந்தவன்; (வெள்ளம் - நீர் - கங்கை); (வெறி - வாசனை);
புள்ளின் குலங்கள் ஒலி சோலை - பறவை இனங்கள் ஒலிக்கின்ற பொழில்;
11)
ஒலிமாலை சூட்டி உளமார வாழ்த்தி உடலால்வ ணங்கும் அடியார்
மெலியாத வண்ணம் வினைமாசை வீட்டி மிகவேவ ழங்கும் ஒருவன்
நலியாத வண்ணம் நளிர்திங்கள் வாழ நதியோடு சென்னி அணிவான்
பொலிகோபு ரத்தை முகில்தீண்டு கின்ற புகலூரில் நின்ற பரனே.
ஒலிமாலை சூட்டி உளமார வாழ்த்தி உடலால் வணங்கும் அடியார் - மனம், மொழி, மெய் மூன்றாலும் வழிபடும் பக்தர்கள்; (ஒலிமாலை - பாமாலை; (கலிக்கோவை)); (சம்பந்தர் தேவாரம் - 2.12.11 - "கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன்");
மெலிதல் - இளைத்தல்; வருந்துதல்;
வீட்டுதல் - அழித்தல்;
நலிதல் - அழிதல்; இளைத்தல்; வருந்துதல்;
நளிர்தல் - குளிர்தல்;
பொலிதல் - சிறத்தல்; பெருகுதல் (To be enlarged; to appear grand);
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள்:
1) யாப்புக்குறிப்பு:
எழுசீர்ச் சந்தவிருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்.
சில பாடல்களில் முதற்சீர் 'தானான' என்றும் வரும்;
2) சம்பந்தர் தேவாரம் - 2.88.1 -
துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி உம்பர் உலகங் கடந்த உமைபங்கன் எங்க ளரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில்
தெளிமண்டி உண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே.
---- --------