Monday, July 12, 2021

05.13 – சிக்கல்

05.13 – சிக்கல்


2014-12-27

சிக்கல்

----------------------------------

(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு.)

(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல")

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்")


1)

ஆரா அமுதே அருந்துணையே .. அமரர் வேண்டப் புரமெய்த

வீரா பன்றிப் பின்சென்று .. விசய னுக்குப் படையீந்தாய்

நீரார் சடையாய் அருளென்று .. நித்தம் போற்றும் அடியார்தம்

தீரா நோயெல் லாம்தீர்க்கும் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


* வெண்ணெய்ப் பெருமான் - சிக்கல் ஈசன் திருநாமம்.

"ஆரா அமுதே அருந்துணையே - தெவிட்டாத அமுதமே, அரிய துணையே;

அமரர் வேண்டப் புரம் எய்த வீரா - தேவர்களுக்கு இரங்கி முப்புரங்களை ஓரம்பால் எய்த வீரனே;

பன்றிப்பின் சென்று விசயனுக்குப் படை ஈந்தாய் - ஒரு பன்றியின் பின் வேடனாகிச் சென்று அருச்சுனனுக்குப் பாசுபட்ஹாஸ்திரத்தை அருளியவனே;

நீர் ஆர் சடையாய் அருள்" என்று நித்தம் போற்றும் அடியார்தம் - கங்கையைச் சடையில் தரித்தவனே அருள்வாயாக" என்று தினமும் துதிக்கும் பக்தர்களது;

தீரா நோயெல்லாம் தீர்க்கும் சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - தீராத நோயையெல்லாம் தீர்ப்பான், சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப் பெருமானே. (தீர்க்கும் - தீர்க்கின்றவன் / தீர்ப்பவன்); (செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);


2)

வானும் நிலனும் பணிந்தேத்தும் .. மங்கை பங்கன் தாவுகின்ற

மானும் மழுவும் கையேந்தி .. மாண்டார் உடல்கள் எரிகின்ற

கானும் நடம்செய் மன்றாகக் .. கருது கின்ற கறைக்கண்டன்

தேனும் பாலும் மகிழ்ந்தாடும் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


கையேந்தி - கையில் ஏந்துபவன்;

கான் - சுடுகாடு;


3)

என்ன சொல்லி அடியார்கள் .. ஏத்தி னாலும் இனிதேற்று

முன்னை வினையை வேரறுக்கும் .. முக்கட் பெருமான் சுந்தரர்க்குத்

தன்னைத் தோழன் எனத்தந்த .. தலைவன் கொன்றை மலரோடு

சென்னி மீது பிறைசூடும் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


(சம்பந்தர் தேவாரம் - 3.71.1 - "கோழை மிடறாக ... ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொல்மகிழும் ஈசன்...");


4)

விரையார் மலர்கொண் டடிபோற்றி .. விழுந்து வணங்கும் அடியார்க்குத்

தரைமேல் மீளா நிலையருளும் .. தலைவன் தேவர் தமைக்காக்க

வரையோர் வில்லாக் கையேந்தி .. மதில்மூன் றெரித்தான் கூவிளமும்

திரையார் நதியும் திகழ்சடையான் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


விரை ஆர் மலர்கொண்டு அடிபோற்றி விழுந்து வணங்கும் அடியார்க்குத் - மணம் கமழும் பூக்களைத் தூவித் திருவடியை வழிபட்டு நிலமுற விழுந்து வணங்கும் பக்தர்களுக்கு;

தரைமேல் மீளா நிலை அருளும் தலைவன் - இனிப் பிறவாமையை அருள்கின்ற பெருமான்;

தேவர்தமைக் காக்க வரை ஓர் வில்லாக் கை ஏந்தி மதில் மூன்று எரித்தான் - தேவர்களைக் காப்பதற்காக மலையை ஒரு வில்ளாகக் கையில் தாங்கி முப்புரங்களை எரித்தவன்; (வரை - மலை);

கூவிளமும் திரை ஆர் நதியும் திகழ் சடையான் - வில்வத்தையும் அலை மிக்க கங்கையையும் சடையில் அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்); (திரை - அலை);


5)

மத்தா மலையைக் கடலிலிட்டு .. வானோர் கடைய நஞ்செழக்கண்

டத்தா அபயம் அருளாயென் .. றரற்ற அதனை அமுதுண்டான்

முத்தார் நகையாள் ஒருகூறன் .. முளைவெண் மதியம் புனைசடையன்

செத்தார் எலும்பை அணிகின்ற .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


மத்தா மலையைக் கடலில் இட்டு வானோர் கடைய நஞ்சு எழக் கண்டு - மலையையே மத்தாகக்கொண்டு தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது ஆலகால விடம் வெளிப்படக்கண்டு;

"அத்தா அபயம் அருளாய்" என்று அரற்ற அதனை அமுதுண்டான் - "தந்தையே அஞ்சல் அளித்து அருள்வாயாக" என்று அவர்கள் வணங்கி இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி அந்தக் கொடிய நஞ்சை அமுதாக உண்டவன்;

முத்து ஆர் நகையாள் ஒரு கூறன் - முத்துப் போன்ற பல் உடைய உமையை ஒரு பாகமாக உடையவன்;

முளை வெண் மதியம் புனை சடையன் - இளவெண்பிறையைச் சடையில் அணிந்தவன்;

செத்தார் எலும்பை அணிகின்ற சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - இறந்த பிரமவிஷ்ணுக்களின் எலும்பை மாலையாக அணிகின்றவன், திருச்சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்பெருமான்;


6)

மறைகள் ஓதி வழிபட்ட .. வசிட்டர்க் கருள்செய் மாதேவன்

பறைகள் முழக்கிப் பாரிடங்கள் .. பாட இரவில் நடமாடும்

இறைவன் கையில் ஓடேந்தி .. இடுமின் பலியென் றுழலீசன்

சிறைவண் டார்க்கும் பொழில்சூழ்ந்த .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


* வசிஷ்டர் காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம் இது. சிக்கல் தலபுராணச் செய்தி.

மறைகள் ஓதி வழிபட்ட வசிட்டர்க்கு அருள்செய் மாதேவன் - வேதமந்திரங்களால் வழிபாடு செய்த வசிஷ்டருக்கு அருள்செய்த மகாதேவன்;

பாரிடங்கள் பாட இரவில் நடம் ஆடும் இறைவன் - பூதங்கள் பாட நள்ளிருளில் கூத்து ஆடும் இறைவன்; (பாரிடங்கள் - பூதகணங்கள்); (சம்பந்தர் தேவாரம் - 3.126.7 - "பாதத்தொலி பாரிடம் பாட நடஞ்செய் நாதத்தொலியர்");

கையில் ஓடு ஏந்தி இடுமின் பலி என்று உழல் ஈசன் - கையில் மண்டையோட்டை ஏந்திப், "பிச்சை இடுங்கள்" என்று திரியும் ஈசன்;

சிறை வண்டு ஆர்க்கும் பொழில் சூழ்ந்த- இறகுகளை உடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலை சூழ்ந்த;

சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - திருச்சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்பெருமான்;


7)

வம்பு மலர்கள் பலதூவி .. மலர்த்தாள் இணையை மனத்திருத்தி

நம்பி நாமம் நவில்வார்க்கு .. நலங்கள் எல்லாம் நல்குமரன்

கம்பக் கரியின் உரிமூடி .. கங்கை ஆறு பாய்கின்ற

செம்பொற் சடைமேற் பிறைசூடும் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


வம்பு மலர் - வாசமலர்; (நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி - 11.33.83 - "வம்பு மலர்த்தில்லை யீசனை");

நம்புதல் - விரும்புதல்;

கம்பக் கரி - எப்பொழுதும் அசைந்து கொண்டே யிருக்கும் யானை;

உரி மூடி - தோலைப் போர்த்தவன்;


8)

வாயைக் கொண்டு வசைமொழிந்து .. மலையைப் பெயர்த்தான் தனையடர்த்த

நாயன் பின்னர் நரம்பிசையை .. நயந்து வரங்கள் நல்கியவன்

சேயைத் தந்த கண்ணுதலான் .. தேவ தேவன் ஒருகையில்

தீயை ஏந்தி நடம்செய்யும் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


நாயன் - தலைவன்; கடவுள்;

நரம்பிசை - யாழிசை;

நயத்தல் - விரும்புதல்;

சேய் - முருகன்;


9)

சங்கு தரித்த திருமாலும் .. தாம ரைப்பூ மேலானும்

தங்கை கூப்பித் தொழுமாறு .. தழலாய் நின்ற தனிநாதன்

செங்கண் விடையன் வேல்நெடுங்கண் .. தேவி பங்கன் இண்டையெனத்

திங்கள் திகழும் செஞ்சடையான் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


* வேல்நெடுங்கண்ணி - திருச்சிக்கல் இறைவி திருநாமம்;

சங்கு தரித்த திருமாலும் தாமரைப்பூ மேலானும் - சங்கை ஏந்திய விஷ்ணுவும் பிரமனும்;

தம் கை கூப்பித் தொழுமாறு தழலாய் நின்ற தனி நாதன் - தங்கள் கைகளைக் கூப்பி வணங்கும்படி சோதியாகி ஓங்கிய ஒப்பற்ற தலைவன்; (தனி - ஒப்பற்ற);

வேல்நெடுங்கட்டேவி பங்கன் - வேல்நெடுங்கண் தேவி பங்கன் - மாதொருபாகன்;

இண்டை - தலையில் அணியும் ஒருவகை மாலை;


10)

நீறு பூசா நெற்றியராய் .. நித்தம் பொய்கள் பலசொல்லி

மாறும் என்று மயக்குகின்ற .. வஞ்சர் வார்த்தை மதியேன்மின்

நாறு மலரிட் டடிபோற்றில் .. நலங்கள் நல்கும் நம்பெருமான்

சீறு நாகம் திகழ்சடையான் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


நாறு மலர் இட்டு அடிபோற்றில் நலங்கள் நல்கும் நம்பெருமான் - வாசமலர்களைத் தூவித் திருவடியை வணங்கினால் நன்மைகள் அருளும் பெருமான்;


11)

வந்தார் மண்மேல் சிலகாலம் .. வாளா வாழ்ந்தார் பின்னெரியில்

வெந்தார் வேறு பிறப்பொன்றில் .. வீழ்ந்தார் என்ற நிலைநீக்கி

நொந்தா இன்பம் தருவான்சீர் .. நுவலும் அன்பர் தமக்கெல்லாம்

செந்தீ வண்ண மேனியினான் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


வந்தார் மண்மேல், சிலகாலம் வாளா வாழ்ந்தார், பின் எரியில் வெந்தார், வேறு பிறப்பு ஒன்றில் வீழ்ந்தார் என்ற நிலை நீக்கி - "பூமியிற் பிறந்தார், சிறிது காலம் பயனின்றி வாழ்ந்தார், பின் இறந்து சாம்பலானார், பின்னர் இன்னொரு பிறவி எடுத்தார்" என்று சுழல்கின்ற நிலையை நீக்கி; (வாளா - பயனின்றி; வீணே);

(அப்பர் தேவாரம் - 6.95.6 - "திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில் .. .. அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே");

நொந்தா இன்பம் தருவான் சீர் நுவலும் அன்பர் தமக்கெல்லாம் - திருப்புகழைச் சொல்லும் பக்தர்களுக்கெல்லாம் அழியாத இன்பத்தை அருள்வான்; (நொந்துதல் - அழிதல்); (நுவலுதல் - சொல்லுதல்);

செந்தீ வண்ண மேனியினான் - நெருப்புப் போன்ற செம்மேனியை உடையவன்;

சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - திருச்சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்பெருமான்;


வி. சுப்பிரமணியன்


----------- --------------

Tags: சிக்கல், அறுசீர் விருத்தம், மா மா காய்,