Saturday, March 6, 2021

05.06 – பாதிரிப்புலியூர் - (திருப்பாதிரிப்புலியூர்)

05.06 – பாதிரிப்புலியூர் - (திருப்பாதிரிப்புலியூர்)


2014-12-01

பாதிரிப்புலியூர் - (திருப்பாதிரிப்புலியூர்)

------------------------

(கலிவிருத்தம் - "தானன தனதான தானன தனதான";

தானன என்ற சீர்கள் தனதன என்றும் வரலாம்)

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப்")


1)

துணிமதிச் சடையானைத் தொழுதவர் கரையேறப்

பிணிகலும் புணையாகப் பெரிதருள் புரியீசன்

பணியணி திருமார்பன் பாதிரிப் புலியூரை

நணியணி மலர்தூவில் நமைவினை நலியாவே.


துணிமதிச் சடையானைத் தொழு தவர் கரையேறப் - பிறைச்சந்திரனை அணிந்த சடையுடையவனைத் தொழுத தவத்தினரான திருநாவுக்கரசர் கரையை அடையும்படி; (துணி - துண்டம்); (தவர் - தவம் உடையவர்);

பிணி கலும் புணை ஆகப் பெரிது அருள்புரி ஈசன் - அவரோடு கட்டிய கல்லே தெப்பம் ஆகி மிதக்கும்படி பேரருள் செய்த ஈசன்; (பிணி கலும் - பிணித்த கல்லும்); (புணை - தெப்பம்; படகு);

பணி அணி திருமார்பன் பாதிரிப் புலியூரை நணி அணி மலர் தூவில் - மார்பில் பாம்பை மாலியாகப் பூண்ட பெருமானது திருப்பாதிரிப் புலியூரை அடைந்து அழகிய மலர் தூவி வழிபட்டால்; (பணி - பாம்பு); (நணி - நண்ணி - அடைந்து); (அணி - அழகிய);

நமை வினை நலியாவே - நம்மை வினைகள் வருத்தமாட்டா; அவை அழியும்; (நமை - நம்மை); நலிதல் - வருத்துதல்);


2)

வந்தடி பணிதேவர் வாழ்ந்திடப் புரமூன்றும்

செந்தழற் படுமாறு சிலைவிலிற் கணைகோத்தான்

பைந்தமிழ்த் தொடைசாத்திப் பாதிரிப் புலியூரில்

எந்தையைத் தொழுதேத்தில் இருவினை அடையாவே.


வந்து அடி பணி தேவர் வாழ்ந்திடப் - வந்து திருவடியைப் பணிந்த தேவர்கள் உய்யும்படி;

புரம் மூன்றும் செந்தழற் படுமாறு சிலைவிலில் கணைகோத்தான் - முப்புரங்களும் செந்தீயில் புகுந்து அழியும்படி மேருமலை என்ற வில்லில் அம்பைத் தொடுத்தவன்; (படுதல் - அழிதல்); (சிலை - மலை); (விலில் - வில்லில்);

பைந்தமிழ்த்தொடை சாத்திப் - அழகிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி;

பாதிரிப் புலியூரில் எந்தையைத் தொழுது ஏத்தில் - திருப்பாதிருப் புல்யீரில் உறையும் எம் தந்தையைத் துதித்து வணங்கினால்;

இருவினை அடையாவே - கொடிய வினைகள் நம்மை நெருங்கமாட்டா;


3)

திரையினில் ஒருகல்லைச் சீரிய புணையாக்கி

அரசினைக் கரையேற்றி அருளிய சடையானைப்

பரமனைக் கடல்சூழ்ந்த பாதிரிப் புலியூரில்

வரதனை மறவாமல் வழிபடு மடநெஞ்சே.


திரை - கடல்;

சீரிய புணை - சிறந்த தெப்பம்;

அரசு - திருநாவுக்கரசர்;

வரதன் - வரம் அளிப்பவன்;


4)

பாலன துயிர்கொல்லப் பாசமொ டருகுற்ற

காலனை உதைசெய்த கழலினன் அகலத்தில்

பாலன திருநீற்றன் பாதிரிப் புலியூரில்

ஏலமென் குழல்பங்கன் இணையடி நினைநெஞ்சே.


பாலனது உயிர் கொல்லப் பாசமொடு அருகு உற்ற காலனை உதைசெய்த கழலினன் - மார்க்கண்டேயரது உயிரைக் கொல்லப் பாசத்தை ஏந்தி அவரை நெருங்கிய இயமனை உதைத்த திருவடியினன்;

அகலத்தில் பால் அன திருநீற்றன் - மார்பில் பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவன்;

பாதிரிப் புலியூரில் ஏல மென் குழல் பங்கன் இணையடி நினை நெஞ்சே - திருப்பாதிரிப் புலியூரில் வாச மென் கூந்தலையுடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமானது இரு திருவடிகளை நெஞ்சே நீ நினை;


5)

பித்தனை ஒருபங்கிற் பெண்ணனை அழியாத

நித்தனை ஒருகையில் நிழல்மழு உடையானைப்

பத்தரைக் கரையேற்றும் பாதிரிப் புலியூரில்

முத்தனைத் தொழுதேத்தில் முன்வினை அடையாவே.


பித்தனை ஒரு பங்கிற் பெண்ணனை - பேரருளாளனை, உமைபங்கனை; (அப்பர் தேவாரம் – 5.79.3 - “அருமறையனை ஆணொடு பெண்ணனைக்");

நிழல் - ஒளி;


6)

மழவிடை மிசையேறி மாதுடன் வருமீசன்

அழலினைக் கரமேந்தி ஆரிருள் நடமாடி

பழவினை அவைதீர்க்கும் பாதிரிப் புலியூரிற்

குழகனின் அடிபோற்றிக் கும்பிட அடைநெஞ்சே.


மழவிடைமிசை ஏறி மாதுடன் வரும் ஈசன் - இளைய எருதின்மேல் ஏறி உமையோடு வரும் ஈசன்;

அழலினைக் கரம் ஏந்தி ஆரிருள் நடம் ஆடி - கையில் தீயை ஏந்தி நள்ளிருளில் கூத்தாடுபவன்;


7)

நாவினுக் கரையர்க்கு நற்றுணை எனநின்றான்

தீவணத் திருமேனிச் சேவகன் முடிமீது

பாவன நதிசூடி பாதிரிப் புலியூரில்

தேவன தடிபோற்றத் தீவினை தொடராவே.


நாவினுக்கு அரையர்க்கு நற்றுணை என நின்றான் - திருநாவுக்கரசருக்கு நல்ல துணை ஆனவன்;

தீவணத் திருமேனிச் சேவகன் - தீ வண்ணம் உடைய செமேமேனி வீரன்; (சேவகன் - வீரன்);

முடிமீது பாவன நதிசூடி - திருமுடியில் தூய கங்கையைச் சூடியவன்;

பாதிரிப் புலியூரில் தேவனது அடிபோற்றத் தீவினை தொடராவே - திருப்பாதிரிப் புலியூரில் சிவபெருமானது திருவடியை வணங்கினால் நம்மைத் தீவினைகள் நெருங்கமாட்டா;


8)

சீரிய குணமின்றித் திருமலை அசைமூடன்

ஆரிடர் படவூன்றிப் பேரினை அருள்செய்தான்

பாரினர் சுரர்போற்றும் பாதிரிப் புலியூரில்

நீரிள மதிசூடி நீள்கழல் நினைநெஞ்சே.


சீரிய – சிறந்த; சிறப்பான;

ஆர் இடர் - பெரும் துன்பம்;

பேரினை அருள்செய்தான் - இராவணன் ('அழுதவன்') என்ற பெயரைக் கொடுத்தான்;

பாரினர் - பாரோர் - உலகமக்கள்; சுரர் - வானோர்;

நீர் இளமதி சூடி - கங்கையையும் பிறைச்சந்திரனையும் சூடியவன்;


9)

யான்பரம் எனுமாயன் நான்முகன் இவர்நாண

வான்வளர் எரியான கோன்விரி சடைமீது

பான்மதி புனையீசன் பாதிரிப் புலியூரைத்

தேன்மலர் கொடுபோற்றில் தீவினை அடையாவே.


யான் பரம் எனும் மாயன் நான்முகன் இவர் நாண - “நானே உயர்ந்தவன்" என்று வாதுசெய்த திருமாலும் பிரமனும் நாணும்படி;

வான் வளர் எரி ஆன கோன் - வானில் ஓங்கிய சோதி உருக்கொண்ட தலைவன்;

விரிசடை மீது பான்மதி புனை ஈசன் - விரிந்த சடையின்மேல் வெண்பிறைச் சந்திரனை அணிந்த ஈசன்; (பான்மதி - பால்+மதி - வெண்திங்கள்);

பாதிரிப் புலியூரைத் தேன்மலர்கொடு போற்றில் தீவினை அடையாவே - அப்பெருமான் உறையும் திருப்பாதிரிப் புலியூரை வாசமலர்களால் வழிபட்டால் நம்மைத் தீவினை அடையமாட்டா;


10)

மடவுரை பலசொல்லும் மசடரை மதியேன்மின்

தடவரை உறைநாதன் தமிழிசை மகிழ்காதன்

படவர வரைநாணன் பாதிரிப் புலியூரிற்

கடவுளின் அடிவாழ்த்தில் கவலைகள் தொடராவே.


மட உரை - அறியாமை மிக்க பேச்சு;

மசடர் - குணங்கெட்டவர்; (திருப்புகழ் - சிதம்பரம் - “அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை”);

தடவரை - தடம்+வரை - கயிலைமலை;

பட அரவு அரைநாணன் - நாகத்தை அரைநாணாகக் கட்டியவன்;


11)

கனிவொடு தமிழ்பாடிக் கைகொடு மலர்தூவித்

தனிவிடை உடையானைத் தண்மதி இளநாகம்

பனிபுனை சடையானைப் பாதிரிப் புலியூரில்

இனிதுறை பெருமானை ஏத்திடில் வருமின்பே.


கனிவொடு தமிழ் பாடிக் கைகொடு மலர் தூவித் - மனம் கனிந்து அன்போடு தமிழ்ப்பாமாலைகளைப் பாடிக் கையால் பூக்களைத் தூவி;

தனி விடை உடையானைத் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவனை;

தண்மதி இளநாகம் பனி புனை சடையானைப் - குளிர்ந்த திங்கள், இளம் பாம்பு, கங்கை இவற்றை அணிந்த சடையானை; (பனி - புனல் - கங்கை);

பாதிரிப் புலியூரில் இனிது உறை பெருமானை ஏத்திடில் வரும் இன்பே - திருப்பாதிரிப் புலியூரில் விரும்பி உறையும் சிவபெருமானைத் துதித்தால் இன்பமே நம்மை வந்தடையும்;



வி. சுப்பிரமணியன்

------- ---------