Friday, January 29, 2021

05.04 – விரிஞ்சிபுரம்

05.04 – விரிஞ்சிபுரம்


2014-11-27

விரிஞ்சிபுரம் ( வேலூர் அருகே உள்ள தலம்)

------------------

(எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் மா' - அரையடி வாய்பாடு)

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 1.76.1 - "மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு");

(சுந்தரர் தேவாரம் - 7.58.1 - "சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்")

(திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.1 - "போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே")


1)

பாண்டிய நாட்டினில் நரிபரி ஆக்கும்

.. பரிவினன் அகம்நிறை அன்பொடு குளத்தைத்

தோண்டிய தண்டியின் கண்களில் பார்வை

.. தோன்றிடச் செய்தவன் விளக்கினில் திரியைத்

தூண்டிய எலிதனக் கின்னருள் செய்த

.. தூமறைக் காட்டினன் தொழுதுரு கடியார்

வேண்டிய தீபவன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


* வழித்துணைநாதர் - விரிஞ்சிபுரத்து ஈசன் திருநாமம்;


* நரியைப் பரி ஆக்கியதைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க.

* தண்டியடிகள் நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.

* திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) விளக்குத் திரியை ஓர் எலி தற்செயலாகத் தூண்டிய புண்ணியத்திற்கு அதனை மஹாபலியாகப் பிறப்பித்ததைத் தேவாரத்திற் காண்க.

(அப்பர் தேவாரம் - 4.49.8 -

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்

கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட

நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாம்

குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.)


பரிவு - அன்பு; கருணை;

தொழுது உருகு அடியார் வேண்டியது ஈபவன் - (அப்பர் தேவாரம் - 6.23.1 - "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்")

(உருகடியார் - வினைத்தொகை - உருகு + அடியார்; இதனை ஒத்த ஒரு பிரயோகம்:

"விரும்படியார் = விரும்பு + அடியார்".

திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 9 - "கடலமுதே கரும்பே விரும்படியார் எண்ணகத்தாய்");


2)

சூள்பிழை சுந்தரர் கண்மறைப் பித்துச்

.. சொற்றமிழ் மாலைகள் கேட்டருள் செய்தான்

ஆள்பர மாவென அடியிணை போற்றும்

.. அடியவர் இடர்களை அகற்றிடும் அண்ணல்

நீள்கயி லைக்கிறை நெற்றியிற் கண்ணன்

.. நின்மலன் விரைமலர்க் கணைதனை எய்த

வேள்பட விழித்தவன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


சூள் பிழை சுந்தரர் கண் மறைப்பித்துச், சொல்தமிழ் மாலைகள் கேட்டு அருள்செய்தான் - சங்கிலியார்க்குச் செய்த சபதத்தை மீறியதால் சுந்தரர் இருகண்களிலும் பார்வை இழந்து, பல பதிகங்கள் பாடி மீண்டும் பார்வை பெற்றதைச் சுட்டியது. (சுந்தரர் தேவாரம் - 7.89.1 - “பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம்என்கண் மறைப்பித்தாய்”);

விரைமலர்க்கணைதனை எய்த வேள் பட விழித்தவன் - வாசமலர் அம்பை எய்த மன்மதன் அழிய அவனை நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;


3)

ஆணியை ஆரழல் போற்றிகழ் மேனி

.. அண்ணலைப் போற்றிய அன்பும னத்து

மாணியைக் கொன்றிட வந்தடை கூற்றைக்

.. குரைகழல் கொண்டுதை செய்துயிர் காத்தான்

கோணிய வான்பிறை கொக்கிற கரவம்

.. கூவிளம் குரவொடு கொன்றையும் ஏறும்

வேணியில் ஆற்றினன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


ஆணி - பொன்னின் மாற்று அறிதற்கு வைத்திருக்கும் மாற்றுயர்ந்த பொன்; தனக்கு உவமையில்லாதான் என்னும் கருத்தில் இறைவனுக்குப் பெயராயிற்று;

ஆர் அழல் போல் திகழ் மேனி அண்ணல் - தீப்போன்ற செம்மேனி உடையவன்;

மாணி - பிரமசாரி - மார்க்கண்டேயர்;

கோணிய வான் பிறை கொக்கிறகு அரவம் - வளைந்த அழகிய பிறைச்சந்திரன், கொக்கின் இறகு, பாம்பு ; (கொக்கிறகு - கொக்கு வடிவுடைய குரண்டாசுரன் என்றவனை அழித்ததன் அடையாளம்);

கூவிளம் - வில்வம்;

குரவு - குரா மலர்;

வேணியில் ஆற்றினன் - சடையில் கங்கையை உடையவன்;


4)

புள்ளதன் மிசையமர் கரியவன் வயல்கள்

.. புடையணி மிழலையில் ஆழியை வேண்டிக்

கள்வடி தாமரை ஆயிரம் இட்டுக்

.. கைதொழக் கண்டது நல்கிய ஈசன்

கள்வர்கள் ஐவர்செய் கலக்கம ழித்துக்

.. கழலிணை தொழுபவர்க் காத்தருள் அண்ணல்

வெள்விடை ஊர்தியன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


புள்ளதன்மிசை அமர் கரியவன் - கருடவாகனம் உடைய கரிய திருமால்; (புள் - பறவை);

ஆழி - சக்கரம்;

வேண்டுதல் - விரும்புதல்;

கள் வடி தாமரை - தேன் ஒழுகும் தாமரை;

கைதொழக் கண்டு அது நல்கிய ஈசன் - வழிபாடு செய்யக் கண்டு இரங்கி அதனை ஈந்த ஈசன்;

கள்வர்கள் ஐவர் செய் கலக்கம் அழித்துக் கழலிணை தொழுபவர்க் காத்து அருள் அண்ணல் - ஐந்து புலன்கள் செய்யும் கலக்கத்தை அழித்து அடியவர்களைக் காத்து அருள்கின்ற பெருமான்;


இலக்கணக் குறிப்பு : . கி. பரந்தாமனாரின் "நல்ல தமிழ் எழுதவேண்டுமா" என்ற நூலிற் காணும் ஒரு குறிப்பு : பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு.

அதனால், "தொழுபவர்க் காத்தருள் அண்ணல்" என்று இவ்விடத்தில் இரண்டாம் வேற்றுமைத்தொகையில் "க்" என்ற வல்லொற்று மிக்கது;


5)

நண்ணலர் முப்புரம் நொடியினில் வேவ

.. நக்கவன் நரைவிடை ஊர்தியன் ஒருபால்

பெண்ணமர் மேனியன் பேசுதற் கரிய

.. பெருமையன் ஆயிரம் பேருடைப் பெருமான்

மண்ணவர் வானவர் மாமலர் தூவி

.. மலரடி வாழ்த்திட வரமருள் வள்ளல்

விண்ணுயர் திண்மதில் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


நண்ணலர் - பகைவர்;

நக்கவன் - சிரித்தவன்;

நரைவிடை ஊர்தியன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

விண்ணுயர் திண்மதில் விரிபொழில் சூழ்ந்த - வானில் உயரும் திண்ணிய மதிலும் விரிந்த சோலைகளும் சூழ்ந்த;


6)

கானமி சைத்தடி வாழ்த்திடு வார்க்குக்

.. காசினி மீதினிப் பிறவிகள் தீர்த்து

வானம ளித்திக வாழ்விலும் இன்பம்

.. வாரிவ ழங்கிடும் மாமணி கண்டன்

ஏனம ருப்பணி மார்பினில் நூலன்

.. ஈரிரு வர்க்கறம் விரிதிரி சூலன்

மீனய னிக்கிறை விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


பதம் பிரித்து:

கானம் இசைத்து அடி வாழ்த்திடுவார்க்குக்

.. காசினி மீது இனிப் பிறவிகள் தீர்த்து,

வானம் அளித்து, இகவாழ்விலும் இன்பம்

.. வாரி வழங்கிடும் மாமணிகண்டன்;

ஏன மருப்பு அணி மார்பினில் நூலன்;

.. ஈரிருவர்க்கு அறம் விரி திரிசூலன்;

மீன் நயனிக்கு இறை; விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபுரத்து உறை வழித்துணை தானே.


காசினி - பூமி;

ஏன மருப்பு - பன்றிக்கொம்பு;

ஈரிருவர்க்கு அறம் விரி திரிசூலன் - சனகாதியர் நால்வர்க்கு மறைப்பொருளை விளக்கிய சூலபாணி; (விரித்தல் - விளக்கியுரைத்தல்);;

மீன் நயனி - மீன் போன்ற கண்ணை உடையவள் - உமையம்மை; (அப்பர் தேவாரம் - 6.42.1 - "மைத்தான நீள்நயனி பங்கன்");

இறை - கணவன்;


7)

சூலம ழுப்படை தாங்கிய கையன்

.. தோளிரு நான்கினன் சூரனைச் செற்ற

வேலனைப் பயந்தவன் கண்ணுதல் அண்ணல்

.. வெல்விடைக் கொடியினன் வேயன தோளி

சேலன கண்ணுமை பங்கமர் செல்வன்

.. சிலையினை வில்லென ஏந்திய வீரன்

மேலவர் தம்மிறை விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


சூலமழுப்படை - சூலம் மழுப்படை - சூலமும் மழுவாயுதமும்;

தோள் இருநான்கினன் - எட்டுப் புஜங்கள் உடையவன்;

சூரனைச் செற்ற வேலனைப் பயந்தவன் - சூரபதுமனை அழித்த முருகனைப் பெற்றவன்; (பயத்தல் - பெறுதல்; கொடுத்தல்);

கண்ணுதல் அண்ணல் - நெற்றிக்கண்ணன்;

வேய் அன தோளி சேல் அன கண் உமை பங்கு அமர் செல்வன் - மூங்கில் போன்ற புஜமும் சேல்மீன் போன்ற கண்ணும் உடைய உமையம்மையை ஒரு பங்காக விரும்பியவன்;

சிலையினை வில்லென ஏந்திய வீரன் - மேருமலையை வில்லாக ஏந்திய வீரன்;

மேலவர்தம் இறை - வானவர்கோன் - தேவர்கள் தலைவன்;


8)

கேள்வியர் நாள்தொறும் வினைகெடப் போற்றும்

.. கேடிலி மன்றினில் ஆடிய பாதன்

தோள்வலி யால்மலை தூக்கிய வன்றன்

.. சுடர்முடி பத்தையும் நெரித்திசை கேட்டான்

தாள்பணி யாதவன் னெஞ்சின னாகித்

.. தருக்கிய தக்கனின் தலையைய ரிந்து

வேள்விய ழித்தவன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


கேள்வியர் - வேதம் கற்றவர்; கேள்வி ஞானம் மிக்கவர்;

கேடிலி - அழிவற்றவன்;

தோள்வலியால் மலை தூக்கியவன்றன் சுடர்முடி பத்தையும் நெரித்து இசை கேட்டான் - புஜபலத்தால் கயிலையைத் தூக்கிய இராவணனது மணிமுடி அணிந்த தலைகள் பத்தையும் நசுக்கிப் பின் அவன் பாடிய இசையைக் கேட்டு அருளியவன்;

தாள் பணியாத வன்னெஞ்சினன் ஆகித் தருக்கிய தக்கனின் தலையை அரிந்து வேள்வி அழித்தவன் - ஆணவத்தால் ஈசனுக்கு அவி கொடாமல் வேள்விசெய்த கல்மனம் உடைய தக்கனது தலையை அறுத்து, அவன் செய்த வேள்வியை அழித்தவன்;


9)

சந்திர சேகரன் சதுர்மறை நாவன்

.. தருக்கொடு நான்பரம் நான்பரம் என்று

முந்தயன் மாலிவர் வாதிடுங் கால்தன்

.. முடியடி நேடிட மூளெரி யானான்

சந்ததம் நறுமலர் பலகொடு போற்றித்

.. தாள்தொழும் அடியவர் தமக்கருள் செய்து

வெந்துயர் தீர்ப்பவன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


தருக்கு - ஆணவம்;

நான் பரம் - யானே பரம்பொருள்;

முந்து அயன் மால் இவர் வாதிடுங்கால் தன் - முன்னர்ப் பிரமனும் திருமாலும் வாதிட்ட சமயத்தில் தன்னுடைய;

முடியடி நேடிட மூள் எரி ஆனான் - அடியையும் முடியையும் அவர்கள் தேடும்படி மூண்ட சோதி வடிவினன்;

சந்ததம் நறுமலர் பலகொடு போற்றித் தாள் தொழும் அடியவர் தமக்கு அருள் செய்து வெந்துயர் தீர்ப்பவன் - எப்பொழுதும் வாசமலர்கள் பலவற்றால் திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிந்து அவர்களுடைய கொடிய துயரங்களை நீக்குபவன்;


10)

எவ்வழி நல்வழி என்றறி யாமல்

.. இடர்மிகு புன்னெறி உழல்பவர் சொல்லும்

அவ்வழி அல்வழி அஃதடை யேன்மின்

.. அருவமும் உருவமும் ஆயவன் அன்பால்

கொவ்வைநி கர்த்தசெவ் வாயுமை யாளைக்

.. கூறும கிழ்ந்தவன் கும்பிடு வார்தம்

வெவ்வினை தீர்ப்பவன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


புன்னெறி - புன்மையான மார்க்கம்;

அவ் வழி அல் வழி = அந்த நெறியல்லாத நெறி = அந்தத் தீநெறி; (அல்வழி - தகாத வழி; நெறியல்லாத நெறி);

அஃது அடையேன்மின் - அதனை அடையவேண்டா; (மின் - முன்னிலைப் பன்மை விகுதி);

கொவ்வை நிகர்த்த செவ்வாய் உமையாளைக் கூறு மகிழ்ந்தவன் - கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயை உடைய உமையம்மையை ஒரு பாகமாக விரும்பியவன்;

வெவ்வினை - கொடிய வினை;


11)

மடமணி மங்கையை வாமம கிழ்ந்து

.. வளர்சடை மேலலை வானதி வைத்தான்

வடமணி போலிள நாகம ணிந்து

.. மழவிடை ஏறியுண் பலிக்குழல் செல்வன்

நடமணி அரங்கெனச் சுடலைய தாக

.. நள்ளிருள் ஆடிறை வானவர் வாழ

விடமணி மிடறினன் விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபு ரத்துறை வழித்துணை தானே.


பதம் பிரித்து:

மட மணி மங்கையை வாமம் மகிழ்ந்து,

.. வளர்சடைமேல் அலை- வான்நதி வைத்தான்;

வடம் அணி போல் இள நாகம் அணிந்து,

.. மழவிடை ஏறி உண்பலிக்கு உழல் செல்வன்;

நட மணி அரங்கு எனச் சுடலையது ஆக,

.. நள்ளிருள் ஆடு இறை; வானவர் வாழ

விடமணி மிடறினன்; விரிபொழில் சூழ்ந்த

.. விரிஞ்சிபுரத்து உறை வழித்துணை தானே.


* மரகதாம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்;

மட மணிமங்கை - அழகிய மரகதாம்பிகை; (மணி - நவரத்தினம் - இங்கே மரகதம்); "மடம் அணி மங்கை" - அழகிய உமையம்மை; (மடம் - அழகு; மென்மை);

வாமம் - இடப்பக்கம்;

அலை-வானதி - அலை வான் நதி - அலைக்கின்ற (/ அலையுடைய) கங்கை;

வடம் அணி போல் - மாலையும் ஆபரணமும் போல; (அணிவடம் போல் என்று மாற்றிக்கொண்டால் - அணிகின்ற மாலைபோல, அழகிய மாலைபோல; மணிவடம் போல் என்று மாற்றிக்கொண்டால் - மணிகளால் ஆன மாலை போல) (வடம் - chains of a necklace; சரம்; String of jewels; மணிவடம்);

மழவிடை ஏறி உண்பலிக்கு உழல் செல்வன் - இளைய எருதின்மேல் ஏறிப் பிச்சைக்குத் திரியும் செல்வன்; (மழ விடை - இளைய இடபம்); (உண்பலி - பிச்சை);

நட மணி அரங்கு எனச் சுடலையது ஆக - சுடுகாடே நாட்டியம் ஆடும் அழகிய அரங்கு என்று ஆக;

விடமணி மிடறினன் - விடம் அணி / விட மணி - விடத்தை அணிந்த கண்டம் உடையவன்; விடமே மணியாகத் திகழும் கண்டத்தை உடையவன்;

மிடறினன் - மிடற்றினன் என்பது ஓசை கருதி மிடறினன் என்று வந்தது; (இப்பிரயோகத்தைத் திருமுறைகளிற் காணலாம்);


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1) விரிஞ்சிபுரம் - மார்க்கபந்தீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=828

-------------- --------------


Tuesday, January 19, 2021

05.03 – கண்டியூர்

05.03 – கண்டியூர்


2014-11-25

கண்டியூர் (திருவையாறு அருகே உள்ள தலம்)

–---------------------------------------------------------------

(அறுசீர்ச்சந்தவிருத்தம் - 'தான தான தானனா தான தான தானனா' என்ற சந்தம்;

தான என்பது தனன என்றும் ஒரோவழி வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.52.1 - "வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல்");

(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன் றென்று நின்ற விச்சையால்");


1)

மண்டு கின்ற காதலால் வாழ்த்தி நின்று நாள்தொறும்

தொண்டு செய்யும் அன்பரைத் தூய வானி ருத்துவான்

அண்ட ருக்கி ரங்கியே ஆல காலம் ஆர்ந்ததால்

கண்டம் நீலம் ஆனவன் கண்டி யூர்க்க பாலியே.


மண்டுகின்ற காதலால் வாழ்த்திநின்று நாள்தொறும் தொண்டு செய்யும் அன்பரைத் தூய வான் இருத்துவான் - மிகுகின்ற அன்பால் வாழ்த்தித் தினமும் தொண்டு செய்யும் பக்தர்களைச் சிவலோகத்தில் வாழவைப்பவன்; (மண்டுதல் - அதிகமாதல்; மிகுதல்);

அண்டருக்கு இரங்கியே ஆலகாலம் ஆர்ந்ததால் கண்டம் நீலம் ஆனவன் - தேவர்களுக்கு இரங்கி ஆலகால விடத்தை உண்டதால் நீலகண்டம் உடையவன்; (அண்டர் - தேவர்); (ஆர்தல் - உண்ணுதல்);

கண்டியூர்க் கபாலியே - பிரம கபாலத்தை ஏந்தியவனும் திருக்கண்டியூரில் உறைபவனுமான சிவபெருமான்; (கபாலி - கபாலத்தை ஏந்தியவன்);


2)

சந்தம் ஆர்ந்த தண்டமிழ் சாத்து கின்ற பத்தரின்

சிந்தை சேர்ந்து நிற்பவன் சேவ தேறு சேவகன்

அந்தம் ஆதி ஆனவன் அந்தி வான்நி றத்தினன்

கந்தம் நாறு சோலைசூழ் கண்டி யூர்க்க பாலியே.


சந்தம் ஆர்ந்த தண் தமிழ் சாத்துகின்ற பத்தரின் சிந்தை சேர்ந்து நிற்பவன் - சந்தங்கள் மிகுந்த குளிர்ந்த தமிழான தேவாரம் முதலிய பாமலைகளைத் திருவடியில் சூட்டுகின்ற பக்தர்களது மனத்தில் என்றும் இருப்பவன்; (சாத்துதல் - அணிதல்);

சேவது ஏறு சேவகன் - இடப வாகனம் உடைய வீரன்;

அந்தம் ஆதி ஆனவன் - அனைத்திற்கும் முதலும் முடிவும் ஆனவன்;

அந்தி வான் நிறத்தினன் - மாலைநேரத்து வானம் போல் செம்மேனியன்;

கந்தம் நாறு சோலை சூழ் கண்டியூர்க் கபாலியே - வாசம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரம கபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


3)

நீல மாமி டற்றினன் நீறு சாந்த மாகிடும்

கோல மார்பில் நூலினன் கோதை பாகம் ஆயினான்

சூல பாணி யைத்தொழு தொண்டர் ஆவி காத்தருள்

கால காலன் நீர்மலி கண்டி யூர்க்க பாலியே.


நீல மா மிடற்றினன் - அழகிய நீலகண்டம் உடையவன்; ("நீலம் ஆம் மிடற்றினன்" என்றும் பிரிக்கல் ஆம்);

நீறு சாந்தம் ஆகிடும் கோல மார்பில் நூலினன் - திருநீறே சந்தனம்போல் திகழும் அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்; (சாந்தம் - சந்தனம்); (கோலம் - அழகு);

கோதை பாகம் ஆயினான் - உமைபங்கன்; (கோதை - பெண் - பார்வதி);

சூலபாணியைத் தொழு தொண்டர் ஆவி காத்தருள் காலகாலன் - சூலபாணியான தன்னைத் தொழுத மார்க்கண்டேயரது உயிரைக் காத்துக் காலனை உதைத்து அழித்தவன்;

நீர் மலி கண்டியூர்க் கபாலியே - நீர் வளம் மிக்க திருக்கண்டியூரில் உறைகின்ற, பிரம கபாலத்தை ஏந்திய சிவபெருமான்;


4)

சாம வேத நாவினன் தாயின் நல்ல சங்கரன்

தாம மாக மாசுணம் தாங்கு கின்ற மார்பினன்

நாமம் நூறு பத்தினன் நாரி பங்க மர்ந்தவன்

காம கோபன் நீர்மலி கண்டி யூர்க்க பாலியே.


தாமம் ஆக மாசுணம் தாங்கு கின்ற மார்பினன் - மாலையாகப் பாம்பை மார்பில் அணிந்தவன்;

நாமம் நூறு பத்தினன் - ஆயிரம் பெயர்கள் உடையவன்;

நாரி பங்கு அமர்ந்தவன் - உமையை ஒரு பாகமாக விரும்பியவன்;

காமகோபன் - காமனைக் காய்ந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.68.6 - "கற்ப கத்தினைக் கனகமால் வரையைக் காம கோபனைக்...");


5)

திங்க ளோடு நாகமும் சேர்ந்தி லங்கு சென்னியாய்

எங்க ளுக்கி ரங்கிடாய் என்றி றைஞ்சு நாவராய்த்

தங்க ரங்கு வித்தவர் சங்க டங்கள் தீர்ப்பவன்

கங்கை யைக்க ரந்தவன் கண்டி யூர்க்க பாலியே.


திங்களோடு நாகமும் சேர்ந்து இலங்கு சென்னியாய் - சந்திரனும் பாம்பும் சேர்ந்திருக்கும் திருமுடியை உடையவனே;

எங்களுக்கு இரங்கிடாய் என்று இறைஞ்சு நாவராய்த் - எங்களுக்கு இருங்குவாயாக என்று இறைஞ்சுகின்ற நாவை உடையவர்கள் ஆகி;

ம் கரம் குவித்தவர் சங்கடங்கள் தீர்ப்பவன் - தம் கைகளைக் குவித்த பக்தர்களது கஷ்டங்களைத் தீர்ப்பவன்; (சங்கடங்கடீர்ப்பவன் = சங்கடங்கள் தீர்ப்பவன்);

கங்கையைக் கரந்தவன் - கங்கையைச் சடையில் ஒளித்தவன்;


6)

சுருதி சொல்லும் மெய்ப்பொருள் தோடி லங்கு காதினன்

குருதி யாறு பாயவே கூற்று தைத்த காலினன்

எருது கந்த எம்மிறை ஏத்து கின்ற வண்ணமே

கருது வார்க்க ருள்பவன் கண்டி யூர்க்க பாலியே.


சுருதி சொல்லும் மெய்ப்பொருள் - வேதங்களால் சொல்லப்படும் மெய்ப்பொருள் ஆனவன்; (சுருதி - வேதம்);

தோடு இலங்கு காதினன் - ஒரு காதில் தோடு அணிந்தவன்;

குருதி று பாயவே கூற்று தைத்த காலினன் - இரத்தவெள்ளம் பாயும்படி காலனைக் காலால் உதைத்தவன்;

எருது கந்த எம்றை - இடபத்தை வாகனமாக விரும்பிய எம் இறைவன்;

ஏத்துகின்ற வண்ணமே கருதுவார்க்கு அருள்பவன் - பக்தர்கள் வணங்கும் வடிவில் அருள்பவன்; (கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்);

(சேரமான் பெருமாள் நாயனர் அருளிய திருக்கயிலாய ஞான உலா - 11.8 -

"....எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்

அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்

தானேயாய் நின்றளிப்பான்....."

--- எவர் ஒருவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடையறாது தியானிக்கின்றார்களோ அவருக்கு அந்த உருவமாய்த் தோன்றியே அதன்வழி அருளற்பாலதாய அருளைச் சிவபெருமானே அருளுவான்.);


7)

பண்பு னைந்த செந்தமிழ் பாடி னார்க்க ருத்தியால்

நண்பன் என்று தந்தவன் நட்ட மாடு சுந்தரன்

விண்ப ணிந்து போற்றவும் மேரு வில்லை ஏந்தினான்

கண்பு னைந்த நெற்றியான் கண்டி யூர்க்க பாலியே.


பண் புனைந்த செந்தமிழ் பாடினார்க்கு அருத்தியால் நண்பன் என்று தந்தவன் - தேவாரம் பாடிய சுந்தரருக்கு அன்பால் தன்னைத் தோழன் என்று தந்தவன்; (அருத்தி - அன்பு; விருப்பம்);

நட்டம் ஆடு சுந்தரன் - திருநடம் செய்யும் அழகன்;

விண் பணிந்து போற்றவும் மேருவில்லை ஏந்தினான் - தேவர்கள் வணங்கி இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி மேருமலையை வில்லாக ஏந்தியவன்;

கண் புனைந்த நெற்றியான் - நெற்றிக்கண்ணன்;


8)

கத்தி வெற்பி டந்தவற் கானம் ஓத ஊன்றினான்

பித்தன் என்ற பேரினன் பெற்றம் ஏறு பெற்றியன்

மத்தம் நாகம் ஒண்பிறை வன்னி துன்று சென்னியான்

கைத்த நஞ்சை உண்டவன் கண்டி யூர்க்க பாலியே.


கத்தி வெற்பு இடந்தவன் கானம் ஓத ஊன்றினான் - கயிலைமலையைப் பெயர்த்தவனான இராவணனைப் பாட்டுப் பாடி இறைஞ்சுமாறு திருப்பாத விரலை ஊன்றி அவனை நசுக்கியவன்;

இலக்கணக் குறிப்பு: இடந்தவற் கானம் ஓத - "இடந்தவனைக் கானம் ஓத" எண்ற பொருளில்; இரண்டாம் வேற்றுமைத் தொகையில் உயர்திணையில் பொருள் தெளிவு கருதி வல்லொற்று மிகுதலும், னகர ஓற்று றகர ஒற்றாகத் திரிதலும் உண்டு;

பித்தன் என்ற பேரினன் - பித்தன் (பேரருளாளன்) என்ற நாமமும் உடையவன்;

பெற்றம் ஏறு பெற்றியன் - இடப வாகனம் உடைய பெருமை உடையவன்; (பெற்றம் - எருது);

மத்தம் நாகம் ஒண்பிறை வன்னி துன்று சென்னியான் - ஊமத்தமலர், பாம்பு, ஒளியுடைய பிறைச்சந்திரன், வன்னியிலை இவையெல்லாம் நெருங்கியிருக்கும் திருமுடியை உடையவன்; (மத்தம் - ஊமத்தமலர்); (துன்றுதல் - செறிதல்; பொருந்துதல்);

கைத்த நஞ்சை உண்டவன் - கசப்பு உடைய விடத்தை உண்டவன்;


9)

விண்ணில் அன்ன மாய்உயர் வேத னோடு கேழலாய்

மண்ண கழ்ந்து நேடுமால் வாடி வாழ்த்த நின்றவன்

பெண்ணி லங்கு மேனியான் பேணு வார்ம னத்தினான்

கண்ணி லங்கு நெற்றியான் கண்டி யூர்க்க பாலியே.


வேதன் - பிரமன்;

கேழல் - பன்றி;

நேடு மால் - தேடிய திருமால்; (நேடுதல் - தேடுதல்);

பெண்லங்கு மேனியான் - உமைபங்கன்;

பேணுவார் மனத்தினான் - போற்றும் அன்பர் மனத்தில் உறைபவன்;

கண்லங்கு நெற்றியான் - நெற்றிக்கண்ணன்;


10)

ஈனம் மிக்க கொள்கையர் எத்து வார்த்தை நீங்குமின்

ஞான மூர்த்தி நல்லறம் நால்வ ருக்கு ரைத்தவன்

வானி லாவை வார்சடை வாழ வைத்த மாண்பினன்

கானில் ஆடு கண்ணுதல் கண்டி யூர்க்க பாலியே.


ஈனம் மிக்க கொள்கையர் - இழிந்த கொள்கைகளையுடையவர்கள்; (ஈனம் - குற்றம்);

எத்து வார்த்தை நீங்குமின் - சொல்லும் வஞ்சகச் சொற்களை (ஏமாற்றுப்பேச்சை) மதியாமல் நீங்குங்கள்;

ஞான மூர்த்தி, நல்லறம் நால்வருக்கு ரைத்தவன் - ஞானவடிவினன்; சனகாதியர்களுக்கு மறைப்பொருளை உபதேசித்தவன்;

வானிலாவை வார்சடை வாழ வைத்த மாண்பினன் - வெண்பிறையை நீள்சடையில் வாழும்பாறு சூடிய பெருமையுடையவன்; (வானிலா - வான் நிலா / வால் நிலா); (வான் - ஆகாயம்; அழகு); (வால் - வெண்மை; இளமை);

கானில் ஆடு கண்ணுதல் - சுடுகாட்டில் ஆடுகின்ற நெற்றிக்கண்ணன்; (கான் - காடு - சுடுகாடு); (கண்ணுதல் = கண் + நுதல் = நெற்றிக்கண்ணன்);


11)

ஏட்டில் இன்ற மிழ்த்தொடை ஈந்து பாண பத்திரர்

வாட்டம் நீக்கும் ஆலவாய் வள்ளல் நங்கை மாரிடம்

ஓட்டில் ஐயம் ஏற்பவன் ஓர்ம ழுப்ப டைக்கரன்

காட்டில் ஆடு கண்ணுதல் கண்டி யூர்க்க பாலியே.


ஏட்டில் இன்-தமிழ்த்தொடை ஈந்து பாணபத்திரர் வாட்டம் நீக்கும் ஆலவாய் வள்ளல் - பாணபத்திரர்க்குத் திருமுகப்பாசுரம் அளித்ததைச் சுட்டியது. (11.1 - "மதிமலி புரிசை மாடக் கூடல்" என்று தொடங்கும் திருமுகப்பாசுரத்தைப் பாணபத்திரர்க்கு அளித்ததைப் பெரியபுராணத்தில் சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றிற் காண்க);

நங்கைமாரிடம் ஓட்டில் ஐயம் ஏற்பவன் - பெண்களிடம் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவன்; (ஐயம் - பிச்சை);

ஓர் மழுப்படைக்கரன் - ஒப்பற்ற மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவன்;

காட்டில் ஆடு கண்ணுதல் - சுடுகாட்டில் ஆடுகின்ற நெற்றிக்கண்ணன்;


அன்போடு,

வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :

1) திருக்கண்டியூர்: அட்டவீரட்டானத் தலங்களுள் ஒன்று கண்டியூர். பிரமனின் சிரத்தைக் கொய்த தலம் இது.

2) திருவையாறு உள்ளிட்ட சப்தஸ்தானத் தலங்கள்:

  • திருவையாறு ஐயாறப்பர் கோயில்

  • திருப்பழனம்

  • திருச்சோற்றுத்துறை

  • திருவேதிகுடி

  • திருக்கண்டியூர்

  • திருப்பூந்துருத்தி

  • திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)

3) திருக்கண்டியூர் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=885

-------------------



Tags: கண்டியூர், அறுசீர்ச் சந்தவிருத்தம், மா மா கூவிளம், தான தான தானனா,


05.02 – கருவூர் - (கரூர்)

05.02 – கருவூர் - (கரூர்)


2014-11-16

கருவூர் - (கரூர்)

--------------------------------------

(கலித்துறை - 'மா மா கூவிளம் மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 1.97.1 - "எய்யா வென்றித் தானவ ரூர்மூன் றெரிசெய்த");


1)

நண்ணும் அன்பர் தம்மிடர் தீர்த்து நலம்நல்கும்

அண்ணல் அரிய நஞ்சினை ஆர்ந்த அருளாளன்

எண்ணில் நாமம் ஏற்றவெம் மீசன் இடமென்பர்

கண்ணுக் கினிய கார்வயல் சூழ்ந்த கருவூரே.


நண்ணும் அன்பர்தம்டர் தீர்த்து நலம் நல்கும் அண்ணல் - அடைந்த பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து நலம் அளிக்கின்ற தலைவன்;

அரிய நஞ்சினை ஆர்ந்த அருளாளன் - ஆலகால விடத்தை உண்ட அருளாளன்; (ஆர்தல் - உண்ணுதல்);

எண்ல் நாமம் ஏற்றம் சன் இடம் என்பர் - எண்ணற்ற திருப்பெயர்கள் உடைய எம் ஈசன் உறையும் தலம்;

கண்ணுக்கு இனிய கார்வயல் சூழ்ந்த கருவூரே - கண்ணுக்கு இனிமை தரும், நீர்வளம் மிக்குப் பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்); (கார் - மேகம், மழை, நீர்; பசுமை; அழகு); ('மிக்க' என்றது இசையெச்சம் - Omission, from a sentence, of words needed to complete the sense; ellipsis for the sake of brevity or elegance;).

(சுந்தரர் தேவாரம் - 7.84.1 - "கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே");


குறிப்பு : கரூர் பெரிய ஊராகிவிட்டதால், வயல்களை ஊரின் புறப்பகுதிகளிலேயே காண இயலும்.


2)

போற்றிப் பாடும் அன்புடை யார்க்குப் புகலானான்

ஆற்றை ஏற்ற அஞ்சடை அப்பன் அயில்வேலன்

ஏற்றுக் கொடியன் ஏந்திழை கூறன் இடமென்பர்

காற்றில் அசையும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.


புகல் - அடைக்கலம்;

அஞ்சடை - அம் சடை - அழகிய சடை;

அயில்வேலன் - கூர்மையுடைய சூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை); (வேல் - இங்கே மூவிலை வேல் - சூலத்தைச் சுட்டியது);

ஏற்றுக் கொடியன் - இடபச் சின்னம் பொறித்த கொடியை உடையவன்;

ஏந்திழை கூறன் - உமையை ஒரு கூறாக உடையவன்;

காற்றில் அசையும் கார்வயல் - நெற்பயிர் காற்று வீசும்போது அசைந்தாடுகின்ற, நீர்வளம் மிக்குப் பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல்; (வயல் என்றதால், காற்றில் அசைவது நெற்பயிர் என்று குறிப்பால் உணர்த்தப்பெற்றது);


3)

அரவார் சடையன் அம்புலி சூடி அடிநாளும்

பரவாப் பணியும் பத்தருக் கன்பன் பலிநாடி

இரவா உழலும் எம்பெரு மான்றன் இடமென்பர்

கரவா தளிக்கும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.


அரவு ஆர் சடையன், அம்புலி சூடி - நாகம் பொருந்திய சடையினன், பிறையைச் சூடியவன்;

அடி நாளும் பரவாப் பணியும் பத்தருக்கு அன்பன் - திருவடியைத் தினமும் துதித்துப் பணியும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்; (பரவுதல் - புகழ்தல்);

பலி நாடி இரவா உழலும் எம்பெருமான்தன் இடம் என்பர் - பிச்சை விரும்பி இரந்து உழல்கின்ற எம்பெருமான் உறையும் இடம் ஆவது;

கரவாது அளிக்கும் கார்வயல் சூழ்ந்த கருவூரே - வஞ்சமின்றி கொடுக்கின்ற, நீர்வளம் மிக்குப் பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்) ஆகும்;

இலக்கணக் குறிப்பு - பரவா, இரவா - பரவி, இரந்து; ( செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம்);


4)

அயில்கொள் சூலன் ஆர்கழல் பணியும் அடியார்தம்

மயல்கள் தீர்த்து வானம ளிக்கும் மணிகண்டன்

எயில்கள் மூன்றை எய்தவன் உறையும் இடமென்பர்

கயல்கள் உகளும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.


அயில்கொள் சூலன் - கூர்மையுடைய சூலத்தை ஏந்தியவன்;

ஆர்கழல் பணியும் அடியார்தம் மயல்கள் தீர்த்து வானம் அளிக்கும் மணிகண்டன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியை வணங்கும் அடியவர்களது மயக்கங்களைத் தீர்த்துச் சிவலோகம் அளிக்கின்ற நீலகண்டன்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (கழல் - திருவடி); (மயல்கள் - மயக்கங்கள்);

எயில்கள் மூன்றை எய்தவன் உறையும் இடம் என்பர் - முப்புரங்களை ஓர் அம்பால் எய்தவன் உறையும் தலம்;

கயல்கள் உகளும் கார்வயல் சூழ்ந்த கருவூரே - கயல் மீன்கள் பாயும், வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்) ஆகும்;;


5)

தவறா தென்றும் தண்டமிழ் பாடித் தனையேத்தும்

அவர்வா னுலகம் ஆள்வதற் கருளும் அழல்வண்ணன்

இவரான் ஏறும் எம்பெரு மான்றன் இடமென்பர்

கவினார் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே.


தவறாது என்றும் தண்மிழ் பாடித் தனைத்தும் அவர் வானுலகம் ஆள்வதற்கு அருளும் அழல்வண்ணன் - மறவாமல் எந்நாளும் குளிர்ந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடித் தன்னைப் போற்றும் பக்தர்கள் சிவலோகம் ஆள அருள்கின்ற தீவண்ணன்; (தண்டமிழ் - தண்+தமிழ் - குளிர்ந்த தமிழ் - தேவாரம், திருவாசகம் முதலியன); (அழல் - தீ);

இவர்ஆன் ஏறும் எம்பெருமான்ன் இடம் என்பர் - இடப்வாகனம் உடைய எம்பெருமானது தலம்; (இவர்தல் - ஏறிச்செலுத்துதல்); (ஆன் - பசு/இடபம்);

கவின் ஆர் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே - அழகிய பொழிலும் பசிய வயலும் சூழ்ந்த கருவூர் (கரூர்); (கவின் - அழகு);


6)

முதலும் முடிவும் ஆகிய மூர்த்தி முடிவில்லான்

நுதலிற் கண்ணன் கையினில் மூன்று நுனைவேலன்

எதிரில் லாத எம்பெரு மான்றன் இடமென்பர்

கதலி தென்னை கார்வயல் சூழ்ந்த கருவூரே.


நுதலில் கண்ணன் - நெற்றிக்கண்ணன்;

மூன்று நுனை வேலன் - மூன்று முனைகளை உடைய வேலை ஏந்தியவன் - திரிசூலன்;

எதிர் இல்லாத - ஒப்பற்ற; (எதிர் - ஒப்பு);

கதலி - வாழை;


7)

வாணி லாவை வார்சடை மீது மகிழ்பெம்மான்

பேணி வாழ்த்தும் அன்பரைப் பேணிப் பெருவான்சேர்

ஏணி ஆன எந்தையி ருக்கும் இடமென்பர்

காணற் கினிய கார்வயல் சூழ்ந்த கருவூரே.


வாணிலாவை வார் சடைமீது மகிழ் பெம்மான் - ஒளி வீசும் சந்திரனை நீள்சடையின்மேல் விரும்பிச் சூடிய பெருமான்; (வாணிலா - வாள் நிலா - ஒளி திகழும் சந்திரன்); (வார்தல் - நீள்தல்); (மகிழ்தல் - விரும்புதல்);

பேணி வாழ்த்தும் அன்பரைப் பேணிப் பெரு வான் சேர் ஏணி ஆன எந்தை - போற்றித் துதிக்கும் பக்தர்களைக் காத்துச் சிவலோகத்தில் சேர்க்கின்ற ஏணி ஆன எம் தந்தை; (பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்; பாதுகாத்தல்); (பெருவான்சேர் - பெரிய வானுலகத்தில் சேர்க்கின்ற);


8)

முனிவால் மலையைப் பேர்த்தவன் அலற முடிபத்தைத்

தனியோர் விரலை ஊன்றிய டர்த்துத் தயைசெய்தார்

இனியார் கைத்த நஞ்சணி கண்டர் இடமென்பர்

கனியார் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே.


முனிவால் மலையைப் பேர்த்தவன் அலற முடி பத்தைத் தனிர் விரலை ஊன்றிடர்த்துத் தயைசெய்தார் - சினத்தால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அலறும்படி அவனது பத்துத் தலைகளையும் ஒரே ஒரு விரலை ஊன்றி நசுக்கி அருள்செய்தவர்; (முனிவு - கோபம்; சினம்); (அடர்த்தல் - நசுக்குதல்); (தயைசெய்தல் - அருள்செய்தல்);

இனியார் - இனியவர்;

கைத்த நஞ்சு அணி கண்டர் இடம் என்பர் - கசப்புடைய ஆலகால விடத்தை அணிந்த கண்டத்தை உடையவர் உறையும் தலம்; (கைத்தல் - கசத்தல்);

கனிர் சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே - கனிகள் நிறைந்த சோலைகளும் வளம் மிக்க வயலும் சூழ்ந்த கருவூர் (கரூர்);


9)

பெரிய தேவன் பேணிடு வாரைப் பிரியாதான்

அரியும் அயனும் அன்றடி முடியை அடையாத

எரியின் உருவன் ஏறமர் ஈசன் இடமென்பர்

கரிய சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே.


பெரிய தேவன் - மகாதேவன்;

பேணிடுவாரைப் பிரியாதான் - பக்தர்களை நீங்காமல் துணைநிற்பவன்;

எரியின் உருவன் ஏறு அமர் ஈசன் இடம் என்பர் - சோதி வடிவினன், இடபவாகனம் உடைய ஈசன் உறையும் தலம்;

கரிய சோலை கார்வயல் சூழ்ந்த கருவூரே - அடர்ந்த சோலைகளும் வளம் மிக்க வயலும் சூழ்ந்த கருவூர் (கரூர்);


10)

துரும்பைத் தோணி என்றுரை துரிசர் சொலைநீங்கும்;

விரும்பு பத்தர் வெவ்வினை தீர்க்கும் விடையேறி

இரும்பு வெள்ளி பொன்னெயில் எய்த இறைவன்னூர்

கரும்பார் கின்ற கார்வயல் சூழ்ந்த கருவூரே.


துரும்பைத் தோணி என்றுரை துரிசர் சொலை நீங்கும் - பிறவிக் கடலைக் கடப்பிக்கும் தோணி என்று ஒரு துரும்பினைப் புகழ்ந்து பேசும் குற்றமுடையவர்கள்தம் சொல்லை மதியாமல் நீங்குங்கள்;

விரும்பு பத்தர் வெவ்வினை தீர்க்கும் விடையேறி - விரும்பி வழிபடும் பக்தர்களது கொடிய வினையைத் தீர்க்கும் இடபவாகனன்; (வெவ்வினை - கொடிய வினை); (விடையேறி - இடபவாகனன்);

இரும்பு வெள்ளி பொன்யில் எய்த இறைவன்னூர் - முறையே இரும்பு, வெள்ளி, பொன் இவற்றால் செய்யப்பெற்ற கோட்டைகளான முப்புரங்களை ஒரு கணையால் எய்த இறைவன் உறையும் தலம்; (இறைவன்னூர் - இறைவன் ஊர் - னகர ஒற்று விரித்தல் விகாரம்);

கரும்பு ஆர்கின்ற கார்வயல் சூழ்ந்த கருவூரே - கரும்புகள் நிறைந்த வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்);


11)

மின்னற் சடையன் வெண்திரு நீறு மிளிர்மார்பன்

பன்னி நாளும் பாதமி ரண்டைப் பணிவார்தம்

இன்னல் களையும் எம்பெரு மான்றன் இடமென்பர்

கன்னல் விளையும் கார்வயல் சூழ்ந்த கருவூரே.


மின்னல் சடையன் - மின்னல் போல் ஒளி திகழும் சடையை உடையவன்;

வெண் திருநீறு மிளிர் மார்பன் - வெண்மை திகழும் திருநீறு ஒளிவீசும் மார்பை உடையவன்;

பன்னி நாளும் பாதம் இரண்டைப் பணிவார்தம் இன்னல் களையும் எம்பெருமான்ன் இடம் என்பர் - புகழ்ந்து பாடி இரு திருவடிகளை வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கும் எம்பெருமானது தலம்; (பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்);

கன்னல் விளையும் கார்வயல் சூழ்ந்த கருவூரே - கரும்பு விளையும் வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவூர் (கரூர்); (கன்னல் - கரும்பு );


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

----------------- ----------------