Sunday, February 3, 2019

04.60 – முதுகுன்றம் (விருத்தாசலம்)

04.60 முதுகுன்றம் (விருத்தாசலம்)

2014-04-28
முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)
----------------------------------
(அறுசீர் விருத்தம் - "x x மா" என்ற அரையடி அமைப்பு )
(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்);
(அப்பர் தேவாரம் - 4.4.1 - பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்)



1)
மத்தமும் திங்களும் சூடி .. மழவெள் விடைமிசை ஏறி
கத்தும் கடலுமிழ் நஞ்சைக் .. கரந்தருள் செய்த மிடற்றன்
புத்தம் புதிய மலரால் .. பொன்னடி போற்றிசெய் கின்ற
பத்தர் பவமறுத் தாளும் .. பழமலை நின்ற பரனே.



சூடி - சூடியவன்; ஏறி - ஏறியவன்;
கரத்தல் - ஒளித்தல்;
மிடற்றன் - கண்டன்; (மிடறு - கண்டம்);
பவம் - பிறவி; துன்பம்;
ஆளும் = ஆள்கின்றவன்; ஆள்பவன்; (செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);
பழமலை - முதுகுன்றம்;



2)
மேவலர் முப்புரம் வேவ .. மேருவில் ஏந்திய வீரன்
நாவல ஊரர் தமிழை .. நச்சியம் பொன்தரு நம்பன்
காவல னேயருள் என்று .. கடிமலர் தூவும் அடியார்
பாவம் அறுத்தும்பர் நல்கும் .. பழமலை நின்ற பரனே.



மேவலர் - பகைவர்;
நாவல ஊரர் - ('நாவல' என்றதில் வந்த அகரம் சாரியை) - நாவலூராளி - சுந்தரர்;
நச்சி - விரும்பி; (நச்சுதல் - விரும்புதல்);
அம் பொன் தரு - சிறந்த பொன்னைத் தரும்;
நம்பன் - சிவன்;
கடிமலர் தூவும் அடியார் பாவம் அறுத்து உம்பர் நல்கும் - வாசமலர்களைத் தூவி வழிபடும் பக்தர்களது பாவங்களைத் தீர்த்து வானுலகம் அளிப்பான்; (உம்பர் - வானுலகம்);
* 2-ஆம் அடி சிவபெருமான் திருமுதுகுன்றத்தில் சுந்தரருக்குப் பன்னீராயிரம் பொன் தந்ததைச் சுட்டியது. (7.25.1 - "பொன்செய்த மேனியினீர் " என்று தொடங்கும் பதிகத்தின் வரலாற்றினைக் காண்க).



3)
சடையினில் தண்புனல் தாங்கி .. சாம்பலை மெய்யினிற் பூசி
நடையிற் பிடியை நிகர்த்த .. நாரியைப் பாகம் நயந்தான்
விடையின் மிசைவரும் ஐயன் .. வேட்டுவக் கோலத்திற் சென்று
படையினைப் பார்த்தற் கருளும் .. பழமலை நின்ற பரனே.



தாங்கி, பூசி - தாங்கியவன், பூசியவன்;
பிடி - பெண்யானை;
வேட்டுவக் கோலத்திற் சென்று - வேடன் வடிவத்தில் போய்;
படை - ஆயுதம் - இங்கே பாசுபதாஸ்திரம்;
பார்த்தற்கு - பார்த்தன்+கு = அருச்சுனனுக்கு;



4)
கானையம் பெய்ம்மதன் ஆகம் .. கண்ணுத லாற்பொடி செய்தான்
மானை ஒருகரம் ஏந்தி .. மழுவொடு சூலமும் தாங்கி
ஆனை உரிவையைப் போர்த்த .. அழகன் அரிவையொர் பங்கன்
பானெய் தயிருகந் தாடி .. பழமலை நின்ற பரனே.



பதம் பிரித்து:
கான் ஐ அம்பு எய்ம் மதன் ஆகம் கண்ணுதலால் பொடி செய்தான்;
மானை ஒரு கரம் ஏந்தி; மழுவொடு சூலமும் தாங்கி;
ஆனை உரிவையைப் போர்த்த அழகன்; அரிவை ஒர் பங்கன்;
பால் நெய் தயிர் உகந்து ஆடி; பழமலை நின்ற பரனே.


கான் ஐ அம்பு எய்ம் மதன் ஆகம் - வாசனையுடைய ஐந்து கணைகளை ஏவும் காமன் உடலை; (கான் - வாசனை); (எய்தல் - செலுத்துதல்);
கண்ணுதலால் பொடி செய்தான் - நெற்றிக்கண்ணால் சாம்பால் ஆக்கியவன்;
மானை ஒரு கரம் ஏந்தி; - மானை ஒரு கையில் ஏந்தியவன்;
மழுவொடு சூலமும் தாங்கி - மழுவையும் சூலத்தையும் ஏந்தியவன்;
ஆனை உரிவையைப் போர்த்த அழகன் - யானைத்தோலைப் போர்த்தவன்; (உரிவை - தோல்);
அரிவை ஒர் பங்கன் - உமைபங்கன்;
பால் நெய் தயிர் உகந்து ஆடி - பால் நெய் தயிர் அபிஷேகப் பிரியன்;


இலக்கணக் குறிப்பு:
எய்+மதன் - 'எய்ம்மதன்' என்று 'ம்' மிக்குப் புணரும்.
ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்திலிருந்து:
94. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும். உதாரணம். செய் + நன்றி - செய்ந்நன்றி.



5)
எண்டிசை எங்கும் பரவி .. எரித்த கடல்விடம் தன்னை
உண்டிருள் கண்டத் தொருவன் .. ஒண்மழு வாளினன் தாளை
மண்டிய அன்பொடு வாழ்த்து .. மார்க்கண்டர் இன்னுயிர் காத்துப்
பண்டடற் கூற்றை உதைத்தான் .. பழமலை நின்ற பரனே.



எண்டிசை - எண் திசை;
இருள் கண்டத்து ஒருவன் - நீலகண்டத்தை உடைய ஒப்பற்றவன்;
ஒண்மழு வாளினன் தாளை - ஒளியுடைய மழுவை ஏந்தியவனது பாதத்தை;
மண்டிய அன்பொடு வாழ்த்து மார்க்கண்டர் இன் உயிர் காத்து - பெருகிய அன்பினால் வாழ்த்திய மார்க்கண்டேயரது இனிய உயிரைக் காத்து அருளி;
பண்டு அடற்கூற்றை உதைத்தான் - முன்பு வலிமை பொருந்திய கூற்றுவனை உதைத்தவன்;



6)
செந்தழல் போல்திரு மேனிச் .. செல்வனைச் சிந்தையில் வைத்து
வெந்தவெண் ணீற்றினைப் பூசி .. வெறிகமழ் மாலைகள் பாடி
கந்த மலர்களைத் தூவிக் .. கழலிணை கைதொழு வார்தம்
பந்தம் அறுத்தருள் செய்யும் .. பழமலை நின்ற பரனே.



வெந்த வெண்ணீற்றினைப் பூசி - நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து; (சம்பந்தர் தேவாரம் - 1.107.1 - “வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல”);
வெறி கமழ் மாலைகள் பாடி - மணம் கமழும் (சொல் மலர்களால் ஆன) பாமாலைகளைப் பாடி; (வெறி - வாசனை); (சுந்தரர் தேவாரம் - 7.83.10 - “... நாவலர் கோன்ஊரன் பன்னெடுஞ் சொன்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார் ...”);
கந்த மலர் - வாசமலர்;



7)
ஆரிடர் தீர்ந்திட வேண்டி .. அனுதினம் தாள்தொழு வார்கள்
கோரிடும் யாவையும் நல்கும் .. கொள்கையன் வெண்டலை ஏந்தி
ஊரிடும் உண்பலிக் காக .. உழலும் ஒருவன் இரவிற்
பாரிடம் சூழ நடிக்கும் .. பழமலை நின்ற பரனே.



ஆர் இடர் - அரும் துன்பம்;
யாவையும் - யாவும் - எல்லாம்;
கொள்கை - இயல்பு (Quality, nature); (சம்பந்தர் தேவாரம் - 3.81.6 - “பற்றலர்த முப்புரமெ ரித்தடிப ணிந்தவர்கண் மேலைக் குற்றமதொ ழித்தருளு கொள்கையினன்” - தம் திருவடிகளைப் பணிந்து வணங்குபவர்களின் குற்றங்களை ஒழித்துத் திருவருள் புரியும் கொள்கையினையுடையவர்);
வெண்டலை - வெண் தலை - பிரமன் மண்டையோடு;
ஏந்தி - ஏந்தியவன்; ஏந்திக்கொண்டு;
ஊர் இடும் உண்பலிக்காக உழலும் ஒருவன் - ஊரார் இடுகின்ற பிச்சைக்காகத் திரிகின்ற ஒப்பற்றவன்; (உண்பலி - பிச்சை); (ஒருவன் - ஒப்பற்றவன்);
இரவில் பாரிடம் சூழ நடிக்கும் - நள்ளிரவில் பூதங்கள் சூழ ஆடுபவன்; (பாரிடம் - பூதம்);



8)
மாலத னால்மலை பேர்த்த .. வல்லரக் கன்தனை அன்று
காலதன் ஓர்விரல் இட்டுக் .. கன்றிட வைத்திசை கேட்டான்
சேலன கண்ணி மணாளன் .. செய்யவன் ஒண்மழு வாளன்
பாலன நீறணி மார்பன் .. பழமலை நின்ற பரனே.



மால் - அறியாமை; மயக்கம்;
கன்றுதல் - வருந்துதல்; நோதல்; வாடுதல்;
சேல் அன கண்ணி மணாளன் - சேல்மீன் போன்ற கண்ணையுடையை உமைக்குக் கணவன்;
செய்யவன் - செம்மேனியன்; (செய் - சிவப்பு);
ஒண் மழுவாளன் - ஒளி வீசும் மழுவாளை ஏந்தியவன்;
பால் அன நீறு அணி மார்பன் - பால் போன்ற திருநீற்றை அணியும் மார்பை உடையவன்;



9)
முன்னயன் மாலிவர் நேட .. முடிவில் சுடருருக் கொண்டான்
வன்னியும் மத்தமும் கீற்று .. மதியும் அரவும் திகழும்
சென்னியன் தோடொர் செவியன் .. திருப்புகழ் தன்னைத் தினமும்
பன்னிடும் அன்பர் அகத்தன் .. பழமலை நின்ற பரனே.



அயன் மால் இவர் - பிரமனும் திருமாலும்;
நேட - தேட;
முடிவு இல் சுடர் உருக் கொண்டான் - எல்லையில்லாத சோதி வடிவாகியவன்;
வன்னி - வன்னி இலை;
மத்தம் - ஊமத்த மலர்;
தோடு ஒர் செவியன் - ஒரு காதில் தோடு அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;
திருப்புகழ் தன்னை - ஈசனது புகழை;
பன்னுதல் - பாடுதல்;



10)
வேம்பை இனிய கரும்பு .. விரைந்துவந் துண்ணுமின் என்னும்
தீம்பர்தம் சொல்மதி யேன்மின் .. தினந்தொறும் அஞ்செழுத் தோதி
ஓம்பும் அடியவர்க் கன்பன் .. உறுதுயர் தீர்க்கும் துணைவன்
பாம்பும் மதியும் புனைந்து .. பழமலை நின்ற பரனே.



வேம்பை "இனிய கரும்பு விரைந்துவந்து உண்ணுமின்" என்னும் - வேப்பங்காயை "இனிக்கும் கரும்பு இது; சீக்கிரம் வந்து உண்ணுங்கள்" என்று சொல்கின்ற; (வேம்பு - வேப்பங்காய்); (உண்ணுமின் - உண்ணுங்கள்);
தீம்பர்தம் சொல் மதியேன்மின் - துஷ்டர்களது பேச்சை மதிக்கவேண்டா; (தீம்பர் - துஷ்டர்கள்; கீழோர்); (மதியேன்மின் - நீங்கள் மதிக்க வேண்டா);
தினந்தொறும் அஞ்செழுத்து ஓதி ஓம்பும் அடியவர்க்கு அன்பன் - தினமும் நமச்சிவாய மந்திரத்தை ஓதி வணங்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்;
உறுதுயர் தீர்க்கும் துணைவன் - அவர்களது துன்பங்களையெல்லாம் தீர்த்து அருளும் துணைவன்;
பாம்பும் மதியும் புனைந்து பழமலை நின்ற பரனே - பாம்பையும் சந்திரனையும் முடிமேல் அணிந்து திருமுதுகுன்றத்தில் நீங்காமல் உறைகின்ற பரமன்;



11)
அணியென வெண்திரு நீறும் .. அக்கும் புனைந்தர னுக்கே
பணிசெயும் பண்புடை யார்தம் .. பண்டை வினைகளைத் தீர்ப்பான்
மணியணி கண்டன் மதியம் .. மணங்கமழ் கூவிளம் கொன்றை
பணிமணி நீரணி சென்னிப் .. பழமலை நின்ற பரனே.



அணி என வெண் திருநீறும் அக்கும் புனைந்து - திருநீற்றையும் ருத்திராக்ஷத்தையுமே ஆபரணமாக அணிந்து; (அக்கு - உருத்திராக்கம்; ருத்ராட்சம்); (சம்பந்தர் தேவாரம் - 3.49.3 - “நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்து அக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்");
அரனுக்கே பணிசெயும் பண்பு உடையார்தம் பண்டை வினைகளைத் தீர்ப்பான் - சிவனுக்கு தொண்டு செய்யும் பக்தர்களது பழவினையைத் தீர்ப்பவன்;
மணி அணி கண்டன் - நீலகண்டன்;
மதியம் மணம் கமழ் கூவிளம் கொன்றை பணி மணிநீர் அணி சென்னிப் - ஊமத்தமலர், மணம் வீசும் வில்வம், கொன்றைமலர், நாகம், கங்கை இவற்றையெல்லாம் திருமுடியில் அணிந்த; (கூவிளம் - வில்வம்); (பணி - நாகப்பாம்பு); (மணி நீர் - தெளிந்த நீர் - கங்கை);
பழமலை நின்ற பரனே - திருமுதுகுன்றத்தில் நீங்காமல் உறைகின்ற பரமன்;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
அறுசீர் விருத்தம் - "x x மா" என்ற அரையடி அமைப்பு.
x = மா / விளம் / மாங்காய்.
அரையடியுள் வெண்டளை பயிலும்.
அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.)



(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.4.1 -
பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்
கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே.);



(சுந்தரர் தேவாரம் - 7.73.1 - "கரையுங் கடலும் மலையுங்" என்ற பதிகமும் இதை ஒத்த அமைப்பு. அப்பதிகத்தில் முதல் பத்துப் பாடல்களில் 4-ஆம் அடிகளில் மட்டும் அரையடிகளிடையே 'அவர்' என்று தனிச்சொல்லும் இடம்பெற்றுள்ளது. "அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்");



2) முதுகுன்றம் (விருத்தாசலம்) - விருத்தகிரீஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=493
முதுகுன்றம் (விருத்தாசலம்) - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=236
----------- --------------

04.59 – ஆலவாய் - (மதுரை)


04.59 – ஆலவாய் - (மதுரை)



2014-04-20
திருஆலவாய் (மதுரை)
--------------------------------------------
(எழுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் மா விளம் விளம்' என்ற வாய்பாடு )
(சுந்தரர் தேவாரம் - 7.34.1 - "தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ் சார்கி னுந்தொண்டர் தருகிலாப்");



1)
காலை மாலையும் கழலி ணைக்குளம் கசிந்து நீலமி டற்றனே
கால காலனே காம கோபனே காதல் மாதொரு பாதியாய்
சூல னேபுலித் தோல னேகுளிர் துண்ட வெண்மதி சூடிய
கோல னேயென ஞால மேதரும் கூடல் ஆலவாய் அண்ணலே.



காலை மாலையும் கழலிணைக்கு உளம் கசிந்து, - காலையும் மாலையும் இருதிருவடிகளை நினைந்து மனம் உருகி;
நீல மிடற்றனே, கால காலனே, காம கோபனே - நீலகண்டனே, காலனுக்கே காலன் ஆனவனே, காமனைக் கோபித்து எரித்தவனே;
காதல் மாது ஒரு பாதியாய் - அன்புடைய உமையை ஒரு கூறாக உடையவனே;
சூலனே புலித் தோலனே குளிர் துண்ட வெண்மதி சூடிய கோலனே என- சூலபாணியே, புலித்தோலை ஆடையாக அணிந்தவனே, குளிர்ந்த வெண் பிறைச்சந்திரனைச் சூடிய கோலம் உடையவனே, என்று போற்றி வழிபட்டால்;
ஞாலமே தரும் கூடல் ஆலவாய் அண்ணலே - அப்படித் தொழும் பக்தர்களுக்கு எல்லா வரங்களையும் அருள்வான் மதுரையில் உள்ள திரு ஆலவாய் என்ற கோயிலில் உறையும் சிவபெருமான்; (கூடல் = மதுரை);; (ஞாலம் - உலகம்); (தரும் - தருவான்; - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);
(அப்பர் தேவாரம் - 5.60.7 - ".. .. செய்ய பாதம் இரண்டும் நினையவே வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே.")
(இலக்கணக் குறிப்பு: 'செய்யும்' என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் உள்ள 'உம்' விகுதி நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தும். படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின் பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.)



2)
வெஞ்சொல் நீங்கிய தூய நெஞ்சராய் மேலை வல்வினை தீர்ந்திடச்
செஞ்சொல் மாலைகள் செப்பி நாள்தொறும் சேவ தேறிய செல்வனே
அஞ்சொல் மாதொரு பாக னேவிட அரவும் மதியமும் ஆர்ந்திடும்
குஞ்சி யாயென அஞ்சல் என்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.



வெஞ்சொல் நீங்கிய தூய நெஞ்சராய் - கடுஞ்சொற்களைத் தவிர்ந்து மனத்தூய்மையோடு;
மேலை வல்வினை தீர்ந்திடச் செஞ்சொல் மாலைகள் செப்பி நாள்தொறும் - பழவினைகள் எல்ளாம் தீரும்படித் தேவரம் திருவாசகம் முதலிய பாமலைகளைத் தினமும் சொல்லி;
சேஅது ஏறிய செல்வனே - இடபவாகனனே; (சே - எருது);
அஞ்சொல் மாது ஒரு பாகனே - இன்மொழி பேசும் உமையையை ஒரு பாகமாக உடையவனே; (அஞ்சொல் - அம் சொல் - இனிய மொழி);
விட அரவும் மதியமும் ஆர்ந்திடும் குஞ்சியாய் என – நாகமும் சந்திரனும் பொருந்தும் திருமுடியை உடையவனே என்று போற்றி வழிபட்டால்;
அஞ்சல் என்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே - அபயம் அளிப்பான் மதுரையில் உள்ள திரு ஆலவாய் என்ற கோயிலில் உறையும் சிவபெருமான்; (ஆர்தல் - பொருந்துதல்); (குஞ்சி - தலை);



3)
படியு றப்பணிந் துருகு நெஞ்சராய்ப் பரசு பாணியே பரமனே
கடிய ரண்களைப் பொடிசெய் வீரனே கறையி லங்கிய கண்டனே
கொடிய னாளொரு கூற னேமிளிர் கொன்றை சூடியே வெள்விடைக்
கொடியி னாயென மிடிய றுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.



பதம் பிரித்து:
படி உறப் பணிந்து உருகு நெஞ்சராய்ப் "பரசு பாணியே; பரமனே;
கடி அரண்களைப் பொடிசெய் வீரனே; கறை இலங்கிய கண்டனே;
கொடி அனாள் ஒரு கூறனே; மிளிர் கொன்றை சூடியே; வெள்விடைக்
கொடியினாய்" என மிடி அறுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


படி - நிலம்;
பரசு பாணி - மழுவை ஏந்தியவன்;
கடி அரண்கள் - காவல் மிக்க முப்புரங்கள்;
கொடி அனாள் - கொடி அன்னாள் - பூங்கொடி போன்ற உமை;
வெள்விடைக் கொடியினாய் - வெள்ளை இடபம் திகழும் கொடி;
மிடி அறுப்பவன் - துன்பத்தைத் தீர்ப்பவன்;



4)
பூத்தொ டுத்தடி போற்றிப் புண்ணியா பூத நாயகா ஓர்கணை
கோத்து முப்புரம் எய்த மைந்தனே கொக்கின் இறகணி பிஞ்ஞகா
நேத்தி ரந்திகழ் நெற்றி யாய்திரு நீற தாடிய அம்பலக்
கூத்த னேயெனக் காத்த ருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.



பூத் தொடுத்து அடி போற்றிப் - பூக்களைத் தொடுத்துத் திருவடியைப் போற்றி;
புண்ணியா பூத நாயகா - புண்ணியனே, பூதங்களுக்குத் தலைவனே;
ஓர் கணை கோத்து முப்புரம் எய்த மைந்தனே - ஓர் அம்பை வில்லில் கோத்து முப்புரங்களை எய்த விரனே; (மைந்தன் - வீரன்);
கொக்கின் இறகு அணி பிஞ்ஞகா - கொக்கிறகைச் சூடிய சிவபெருமானே; (கொக்கிறகு - கொக்குருவம் கொண்ட அசுரனை அழித்து, அதன் அடையாளமாகச் சிவபெருமான் தன் தலையில் அணிந்தது. இவ்வசுரனைக், 'குரண்டாசுரன்’ எனக் குறிப்பிட்டு, இவ் வரலாற்றைக் கந்த புராணம் கூறுதல் காண்க); (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.20 - “குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள் நலம்பாடி...”);
நேத்திரம் திகழ் நெற்றியாய் - நெற்றிக்கண்ணனே;
திருநீறுஅது ஆடிய அம்பலக் கூத்தனே எனக் - திருநீற்றைப் பூசியவனே, சபையில் ஆடும் நடராஜனே, என்று துதித்து வழிபட்டால்; (ஆடுதல் - பூசுதல்); (அம்பலம் - சபை; தில்லையில் சிற்றம்பலம்; மதுரையில் வெள்ளியம்பலம்);
காத்து அருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே - அத்தகைய பக்தர்களைக் காப்பவன் மதுரையில் உள்ள திரு ஆலவாய் என்ற கோயிலில் உறையும் சிவபெருமான்;


* கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் - 3. மகேந்திர காண்டம் - 9. சயந்தன் புலம்புறு படலம் - # 64 -
ஏங்கி அமரர் இரிந்தோட வேதுரந்த
ஓங்கு குரண்டத் துருக்கொண்ட தானவனைத்
தீங்கு பெறத்தடிந்து சின்னமா ஓர்சிறையை
வாங்கி அணிந்தஅருள் இங்கென்பால் வைத்திலையே.)



5)
இன்ற மிழ்த்தொடை நாவ ராய்மனம் இளகி ஏறமர் ஈசனே
மன்றில் ஆடிடும் மன்ன னேஅயன் மண்டை யோட்டினை ஏந்தினாய்
அன்றி னார்புரம் அட்ட ஐயனே ஆறு பாய்தரு சென்னிமேல்
கொன்றை யாயென வென்றி யேதரும் கூடல் ஆலவாய் அண்ணலே.



இன்றமிழ்த்தொடை - இன் தமிழ்த்தொடை - இனிய தமிழ்ப்பாடலான தேவாரம், திருவாசகம்;
ஏறு அமர் ஈசனே - இடப வாகனனே;
மன்றில் ஆடிடும் மன்னனே - நடராஜனே;
அயன் மண்டையோட்டினை ஏந்தினாய் - பிரமகபாலத்தில் பிச்சை எடுப்பவனே;
அன்றினார் புரம் அட்ட ஐயனே - பகைவர்களது முப்புரங்களை அழித்த தலைவனே; (அன்றினார் - பகைவர்); (அடுதல் - அழித்தல்);
ஆறு பாய்தரு சென்னிமேல் கொன்றையாய் - கங்கை பாய்கின்ற திருமுடியின்மேல் கொன்றைமலரைச் சூடியவனே; (தருதல் - ஒரு துணைவினைச்சொல்);
வென்றி - வெற்றி;



6)
பொய்த விர்ந்தடி போற்றிப் புனிதனே புற்ற ராவணி வேணியாய்
மைத யங்கிய மணிமி டற்றினாய் வன்னி தாங்கிய கையினாய்
எய்தி அம்பினை எய்த காமனை எரிசெய் தாய்பிர மன்சிரம்
கொய்த கோனெனக் கைகொ டுப்பவன் கூடல் ஆலவாய் ஆண்ணலே.



பதம் பிரித்து:
பொய் தவிர்ந்து, அடி போற்றிப், "புனிதனே; புற்றுஅரா அணி வேணியாய்;
மை தயங்கிய மணிமிடற்றினாய்; வன்னி தாங்கிய கையினாய்;
எய்தி அம்பினை எய்த காமனை எரிசெய்தாய்; பிரமன் சிரம்
கொய்த கோன்" எனக், கைகொடுப்பவன் கூடல் ஆலவாய் ஆண்ணலே.


பொய் தவிர்ந்து - பொய்யை நீங்கி;
வேணியாய் - சடையானே;
மை தயங்கிய மணி மிடற்றினாய் - கருமை திகழும் அழகிய நீலகண்டனே; (தயங்குதல் - ஒளிவிடுதல்); (மணி - அழகு; நீலமணி);
வன்னி - நெருப்பு;
எய்தி - அடைந்து; அணுகி; (எய்துதல் - அடைதல்);
எய்த - செலுத்திய; ஏவிய; (எய்தல் - ஏவுதல்);
காமனை எரிசெய்தாய் - மன்மதனை எரித்தவனே;
பிரமன் சிரம் கொய்த கோன் - பிரமனின் தலை ஒன்றைக் கிள்ளிய தலைவனே; (கோன் - அண்மைவிளியாக வந்தது - கோனே);
கைகொடுத்தல் - உதவுதல்; வினைக்கடலில் ஆழாதவண்ணம் கைகொடுத்துக் காப்பவன்;



7)
ஏற தேறிய ஏந்த லேகடி இலங்கு கூவிளம் மல்லிகை
சீற ராநதி செஞ்ச டைப்புனை தேவ தேவனே சுடலைவெண்
நீற தேறிய மேனி யாய்மணி நீல கண்டனே மங்கையோர்
கூற னேயெனப் பேற ருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.



பதம் பிரித்து:
"ஏறது ஏறிய ஏந்தலே; கடி இலங்கு கூவிளம் மல்லிகை
சீறு அரா நதி செஞ்சடைப் புனை தேவ தேவனே; சுடலை வெண்
நீறது ஏறிய மேனியாய்; மணி நீல கண்டனே; உமை மங்கை ஓர்
கூறனே" எனப் பேறு அருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


கடி இலங்கு கூவிளம் மல்லிகை - வாசனை கமழும் வில்வம் மல்லிகை;
சீறு அரா நதி செஞ்சடைப் புனை தேவ தேவனே - சீறுகின்ற பாம்பையும் கங்கையையும் செஞ்சடையில் அணிந்த பெருமானே;
(குறிப்பு: ஈசன் மல்லிகை சூடுவது சுட்டப்பெறும் தேவாரப் பாடல்களுள் ஒன்று- அப்பர் தேவாரம் - 5.11.4 - "நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்")



8)
தரையி றங்கிய தேர்க டாவிடத் தசமு கன்மலை பேர்க்கவும்
வரையின் கீழவன் வாட ஓர்விரல் வைத்து வாளருள் வள்ளலே
அரவ நாணசை அரைய னேபுலி அதள னேவட வாலமர்
குரவ னேயென வரம ளிப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.



பதம் பிரித்து:
"தரை இறங்கிய தேர் கடாவிடத் தசமுகன் மலை பேர்க்கவும்,
வரையின் கீழ் அவன் வாட ஓர் விரல் வைத்து, வாள் அருள் வள்ளலே;
அரவ நாண் அசை அரையனே; புலி அதளனே; வடவால் அமர்
குரவனே" என வரம் அளிப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


தரை இறங்கிய தேர் கடாவிடத் தசமுகன் மலை பேர்க்கவும் - கயிலையின்மேல் பறக்க இயலாமல் தன் தேர் தரையில் இறங்கியது கண்டு, மிகச் சினந்து கயிலையைப் பெயர்க்க இராவணன் முயன்றபொழுது; (தேர் கடாவுதல் - தேரைச் செலுத்துதல்);
வரையின் கீழ் அவன் வாட ஓர் விரல் வைத்து, வாள் அருள் வள்ளலே - கயிலைமலையின்கீழ் அவன் வருந்தும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கிப், பின் அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளை அருளிய வள்ளலே; (வரை - மலை);
அரவ நாண் அசை அரையனே - பாம்பை அரைநாணாகக் கட்டிய அரசனே; (அசைத்தல் - கட்டுதல்); (அரையன் - அரசன்);
புலி அதளனே - புலித்தோலை ஆடையாக அணிந்தவனே; (அதள் - தோல்);
வடவால் அமர் குரவனே - கல்லாலின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியே; (வடவால் - கல்லால மரம்); (குரவன் - குரு); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - “ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று”);



9)
மழையி னேர்வணன் மலரி னானிவர் வாழ்த்த மாலெரி ஆயினாய்
குழையி லங்கிய காதி னாய்எதிர் குஞ்ச ரத்துரி மூடினாய்
உழையி லங்கிய கையி னாய்சிரம் ஒன்றில் உண்பலி தேர்ந்துழல்
குழக னேயெனப் பிழைபொ றுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.



பதம் பிரித்து:
"மழையின் நேர் வணன், மலரினான் இவர் வாழ்த்த மால் எரி ஆயினாய்;
குழை இலங்கிய காதினாய்; எதிர் குஞ்சரத்து உரி மூடினாய்;
உழை இலங்கிய கையினாய்; சிரம் ஒன்றில் உண்பலி தேர்ந்து உழல்
குழகனே" எனப் பிழை பொறுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


மழையின் நேர் வணன் - முகில்வண்ணன் - திருமால்; (மழை - மேகம்); (நேர்தல் - ஒத்தல்); (வணன் - வண்ணன் - இடைக்குறையாக வந்தது);
மலரினான் - பிரமன்; (சம்பந்தர் தேவாரம் - 1.47.9 - “மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது”);
வாழ்த்துதல் - துதித்தல்;
மால் எரி - பெரிய சோதி;
எதிர் குஞ்சரத்து உரி மூடினாய் - எதிர்த்த யானையின் தோலைப் போர்த்தவனே;
(அப்பர் தேவாரம் - 4.60.5 - "ஓடைசேர் நெற்றி யானை யுரிவையை மூடி னானை" - நெற்றிப்பட்டம் அணிந்த யானைத் தோலைப் போர்த்தவனை);
உழை - மான்;
குழகன் - அழகன்;
பிழை பொறுப்பவன் - அடியார்களது குற்றங்களையெல்லாம் மன்னிப்பவன்; (“குற்றம் பொறுத்த நாதர்” - திருக்கருப்பறியலூரில் ஈசன் திருநாமம்); (அப்பர் தேவாரம் - 6.47.7 - “உழையுரித்த மானுரிதோ லாடை யானே ... உன்பா லன்பர் பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடனன்றே..”);



10)
குற்ற நெஞ்சினர் வெற்று வாதினர் கூறு பொய்ம்மொழி கருதிடேல்
முற்றி லாமதி சூடி னாய்அரண் மூன்று தீப்புக வில்லினில்
ஒற்றை அம்பினைக் கோத்த வீரனே உரகத் தாரனே எம்மையாள்
கொற்ற வாவெனப் பற்றி ஏற்றுவான் கூடல் ஆலவாய் அண்ணலே.



குற்ற நெஞ்சினர் வெற்று வாதினர் - நெஞ்சில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு, பொருளற்ற தர்க்கம் செய்கின்றவர்;
கூறு பொய்ம்மொழி கருதிடேல் - அவர்கள் சொல்லும் பொய்களை மதிக்கவேண்டா; (கருதுதல் - மதித்தல்; விரும்புதல்);
முற்றிலாமதி சூடினாய் - இளம்பிறையைச் சூடியவனே; (அப்பர் தேவாரம் - 5.14.11 - “முற்றி லாமதி சூடும் முதல்வனார்”);
அரண் மூன்று தீப்புக வில்லினில் ஒற்றை அம்பினைக் கோத்த வீரனே - மூன்று கோட்டைகளும் தீப்பற்றி அழியும்படி மேருமலை என்ற வில்லில் ஓர் அம்பைக் கோத்த வீரனே;
உரகத் தாரனே - பாம்பை மாலையாக அணிந்தவனே;
எம்மை ஆள் கொற்றவா எனப் பற்றி ஏற்றுவான் - எம்மை ஆளும் அரசனே என்று போற்றி வழிபடும் பக்தர்கள் வினைக்கடலில் ஆழாதவண்ணம் அவர்கள் கையைப் பற்றி மேலே தூக்குவான்;



11)
தொண்ட ராய்மலர் தூவி நாடொறும் தூய னேசடை மேற்பிறை
இண்டை யாவணி எந்தை யேசுரர் ஏத்த நஞ்சினை உண்டிருள்
கண்ட னேகரி காட னேகயற் கண்ணி யாளையோர் பங்கெனக்
கொண்ட கோனென விண்ட ரும்பரன் கூடல் ஆலவாய் அண்ணலே.



பதம் பிரித்து:
தொண்டராய் மலர் தூவி நாள்தொறும் "தூயனே; சடைமேற் பிறை
இண்டையா அணி எந்தையே; சுரர் ஏத்த நஞ்சினை உண்டு இருள்
கண்டனே; கரிகாடனே; கயற்கண்ணியாளை ஓர் பங்கு எனக்
கொண்ட கோன்" என விண் தரும் பரன், கூடல் ஆலவாய் அண்ணலே.


தொண்டராய் மலர் தூவி - 1) தொண்டர் ஆகி, மலர் தூவி - சிவனுக்குப் பக்தர்கள் ஆகி மலர்களைத் தூவி; 2) தொண்டர் ஆய் மலர் தூவி - பக்தர்கள் ஆய்ந்தெடுத்த சிறந்த பூக்களைத் தூவி;
இண்டையா - இண்டையாக; (இண்டை - தலையில் அணியும் ஒருவகை மாலை);
சுரர் ஏத்த நஞ்சினை உண்டு இருள் கண்டனே - தேவர்கள் துதிக்க அவர்களுக்கு இரங்கி விடத்தை உண்டு கறுத்த கண்டத்தை உடையவனே; (இருள்தல் - கறுப்பாதல்);
கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்;
கயற்கண்ணி - அங்கயற்கண்ணி - ஆலவாயில் அம்மை திருநாமம்;
விண்டரும்பரன் - விண் தரும் பரன் - விண்ணுலகை அளிக்கும் பரமன்; (சம்பந்தர் தேவாரம் - 2.43.8 - "பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் ....")
கோன் - அண்மைவிளியாக வந்தது - கோனே;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :
எழுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் மா விளம் விளம்' என்ற வாய்பாடு.
பாடல்தோறும் ஈற்றடியில் 1-3 சீர்களிடை எதுகை அமைந்த பாடல்கள்
இவ்வமைப்பைப் பெரிதளவும் ஒத்த தேவாரப் பதிகங்களைக் கீழ்க்காண்க :
2) “தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தத்தில் சம்பந்தர், சுந்தரர் பதிகங்கள் உள்ளன.
சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - “மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்”;
சுந்தரர் தேவாரம் - 7.34.8 - "எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும் ஈக்கும் ஈகில னாகிலும்";
-------------- --------------