Saturday, April 8, 2017

03.04.034 - சிவன் - வேம்பு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-19

3.4.34 - சிவன் - வேம்பு - சிலேடை

-------------------------------------------------------------

அம்மைக்கு நல்ல துணையாம் அருநோய்கள் (**1, **2)

தம்மைத் தடுக்கும் மருந்தாகும் வெம்மையே

மண்டவடி வந்தடைந்தார்க் கின்பம் வழங்கிடும்

வெண்டிரையார் வேணியன் வேம்பு.


சொற்பொருள்:

அம்மை - 1. அம்மை என்ற நோய்; (Smallpox, chicken-pox, measles); / 2. பார்வதி; மறுபிறவி;

அம்மைக்கு நல்ல – 1. அம்மைக்கு நல்ல; / 2. அம்மைக்கும் நல்ல; (இங்கே புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்);

துணை - உதவி; காப்பு; கணவன்;

அருநோய் - கொடிய நோய்;

மருந்து - ஔஷதம்; / அமிர்தம்;

வெம்மை - வெப்பம்; / விருப்பம்; கொடுந்துன்பம்;

மண்டுதல் - அதிகமாதல்;

அடி - 1. கீழ்; / 2. பாதம்;

அடைதல் - 1. சேர்தல்; / 2. சரண்புகுதல்;

திரை - அலை; நதி;

ஆர்தல் - பொருந்துதல்;

வேணி - சடை;

வேம்பு - வேப்பமரம்;


வேம்பு:

அம்மைக்கு நல்ல துணை ஆம் - அம்மைநோய் தாக்கியவர்களுக்கு (வேம்பின் இலை) உதவும்.

அருநோய்கள் தம்மைத் தடுக்கும் மருந்து ஆகும் - கொடிய நோய்களைத் தடுக்கும் மருந்து ஆகும்.

வெம்மையே மண்ட, அடி வந்தடைந்தார்க்கு இன்பம் வழங்கிடும் - (வெயிலின்) வெப்பமே மிக, (வாடி) மரத்தடியில் வந்து சேர்ந்தவர்களுக்கு (அதன் நிழல்) இன்பம் தரும்.

வேம்பு - வேப்பமரம்;


சிவன்:

அம்மைக்கும் நல்ல துணை ஆம் - இப்பிறவியிலும் அதனைத் தொடர்ந்து வரும் நிலைக்கும் நல்ல துணை ஆவான்; (அம்மைக்கும் என்றதில் "உம்" - எச்சவும்மை; இம்மைக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்தியது); ("அம்மைக்கு நல்ல துணை ஆம்" - என்று "உம்" இன்றிப் பொருள்கொள்ளவும் கூடும். அப்படிக் கொண்டால், "பார்வதி மணாளன் ஆவான்"); (அப்பர் தேவாரம் - 5.43.4 - "உமைக்கு நல்லவன் தான் உறையும் பதி" - உமாதேவிக்கு நல்லவனாகிய இறைவன் உறைகின்ற தலம்);

அருநோய்கள் தம்மைத் தடுக்கும் மருந்து ஆகும் - பிறவிப்பிணியையும் பிற நோய்களையும் தடுக்கும் மருந்து ஆவான்.

வெம்மையே மண்ட, அடி வந்தடைந்தார்க்கு இன்பம் வழங்கிடும் - கொடுந்துன்பம் மிகுந்ததால் (வாடித்) திருவடியைச் சரண்புகுந்தவர்களுக்கு இன்பம் அருள்வான்;

வெண்-திரை ஆர் வேணியன் - வெண்ணிற அலைகள் நிறைந்த கங்கையைச் சடையில் அணிந்த சிவபெருமான்;


(**1 சம்பந்தர் தேவாரம் - பஞ்சாக்கரப் பதிகம் - திருமுறை 3.22.6 -

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்

அம்மையினும் துணை அஞ்செழுத்துமே


**2 அப்பர் தேவாரம் - திருமுறை 6.95.6 -

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்

.. தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்

ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்

.. உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்

அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்

.. அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்

பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்

.. பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின் றாரே.

)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------