2018-05-06
N.048 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2018
----------------
(பத்துப் பாடல்கள்)
(வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்.)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")
1)
குணமில் சமணர் பழிசொல்லிப்
பிணைகல் அலையார் கடல்மீது
புணையாய்க் கரைசேர் புகழாளர்
மணமார் மலர்மென் கழல்போற்றி.
நற்குணம் இல்லாத சமணர்கள் பொய்யாகப் பழிசுமத்தித் திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் தள்ளியபோது, அரன் அருளால் அக்கல்லே ஒரு தெப்பமாகி மிதந்து கரையை அடைந்த புகழை உடையவர்; அவரது வாசமிக்க மென்மலர்ப்-பாதங்களுக்கு வணக்கம்.
(அப்பர் தேவாரம் - 4.11.1 – "சொற்றுணை வேதியன்");
(அப்பர் தேவாரம் - 5.72.7 - "கல்லினோடெனைப் பூட்டி அமண்-கையர் ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக்குடி-அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனன்றே");
2)
விடையான் அடியார் உழவாரப்
படையார் தமிழின் தொடைநாவர்
உடையார் பரிவே எவருக்கும்
இடையார் அவர்தாள் இணைபோற்றி.
விடையான் அடியார் - இடபவாகனனான சிவனுக்கு அடியவர்;
உழவாரப்-படையார் - உழவாரப்படையை ஏந்தித் திருத்தொண்டு செய்தவர்;
தமிழ் இன்-தொடை நாவர் - இனிய தமிழ்ப் பாமாலைகள் பாடும் நாவினை உடையவர்;
உடையார் பரிவே எவருக்கும் - எல்லார்க்கும் அன்பு உடையவர்;
எவருக்கும் இடையார் - யாருக்கும் அஞ்சாதவர்; ("எவருக்கும்" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு, "உடையார் பரிவே எவருக்கும்", "எவருக்கும் இடையார்" என்று இருபுறமும் இயைக்க); (இடைதல் - பின்வாங்குதல்); (அப்பர் தேவாரம் - 6.98.5 - "என்றும்நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்");
அவர் தாள்இணை போற்றி - அவரது இருதிருவடிகளுக்கு வணக்கம்.
3)
துணிவின் சிகரம் மெனநின்றார்
பணிவின் வடிவாம் மொழிவேந்தர்
பணிமா லையினான் திருநாமம்
அணிநா வுடையார் அடிபோற்றி.
மொழிவேந்தர் - வாக்கின் மன்னர் - திருநாவுக்கரசர்;
துணிவின் சிகரம் என நின்றார் - மிகுந்த தைரியம் உடையவர்; (அப்பர் தேவாரம் - - 6.98.1 - "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்")
பணி-மாலையினான் திருநாமம் அணி நா உடையார் அடிபோற்றி - நாகப்பாம்பை மாலையாக அணிந்த சிவபெருமான் திருநாமத்தை நாக்கில் அணிந்தவர் திருவடிகளுக்கு வணக்கம்; (அப்பர் தேவாரம் - 4.11.2 - "நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே");
4)
நதியைச் சடையிற் சிறைசெய்த
அதிகைப் பெருமான் அருளாலே
பதிகத் தமிழால் அமணாதர்
சதிவென் றவர்தாள் மலர்போற்றி.
நதியைச் சடையில் சிறைசெய்த அதிகைப் பெருமான் அருளாலே - திருவதிகையில் எழுந்தருளியிருக்கும் கங்காதரனது அருளால்; (சிறைசெய்தல் - நீரை அணை கட்டி நிறுத்துதல்);
பதிகத் தமிழால் அமண் ஆதர் சதி வென்றவர் தாள்மலர் போற்றி - அறிவற்ற சமணர்களது சதியைத் தமிழ்ப் பதிகங்கள் பாடி வென்றவரான திருநாவுக்கரசரது திருவடித்தாமரைக்கு வணக்கம்;
5)
மடமென் முலையாள் உமைபங்கா
உடையாய் இடபம் திரிசூலம்
உடல்மேற் பொறியாய் எனவேண்டி
அடைநற் றவர்தாள் மலர்போற்றி.
மட-மென்-முலையாள் உமைபங்கா - அழகிய இள-மென்-முலைகளையுடைய உமையைப் பங்கில் உடையவனே;
உடையாய் - சுவாமியே; ("உமை பங்கா உடையாய்" - உமையைப் பங்காக உடையவனே - என்று சேர்த்து ஒரு சொற்றொடராகவே பொருள்கொள்ளலும் கூடும்);
"இடபம் திரிசூலம் உடல்மேல் பொறியாய்" என வேண்டி அடை - "இடபச்-சின்னத்தையும் சூலச்-சின்னத்தையும் என் உடம்பின்மேல் பொறித்து அருள்வாயாக" என்று வேண்டி அவ்வாறே அவை பொறிக்கப்பெற்ற;
நற்றவர் தாள்மலர் போற்றி - நல்ல தவவடிவினரன திருநாவுக்கரசரது திருவடித்தாமரைக்கு வணக்கம்;
* திருநாவுக்கரசர் தம் உடம்பின்மேல் விடை-இலச்சினையையும் சூல-இலச்சினையையும் வேண்டிப் பெற்றார். இது பெண்ணாகடத்தில் நடந்த நிகழ்ச்சி. பெரியபுராணத்தில் காண்க;
(அப்பர் தேவாரம் - 4.109.1 - "பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் ... மூவிலைச் சூலம் என்மேற் பொறி");
(அப்பர் தேவாரம் - 4.109.10 - "இடவம் பொறித்தென்னை ஏன்றுகொள்ளாய்");
6)
துடியார் கரனின் னருளாலே
அடியார் உணவிற் குயர்காசைப்
படியா மிழலைப் பெறவல்லார்
கடியார் மலர்மென் கழல்போற்றி.
துடி ஆர் கரன் இன்னருளாலே - உடுக்கையைக் கையில் ஏந்திய சிவபெருமானது இனிய அருளால்;
அடியார் உணவிற்கு உயர்-காசைப் படியா மிழலைப் பெற வல்லார் - அடியவர்களுக்கு உணவிடுவதற்காக உயர்ந்த பொற்காசைப் படிக்காசாகத் திருவீழிமிழலையில் பெற்றவர்; (இவ்வரலாற்றைப் பெரியபுராணத்தில் சம்பந்தர் வரலாற்றில் காண்க); (சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர் மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே");
கடி ஆர் மலர் மென்கழல் போற்றி - வாசம் மிக்க மலர் போன்ற மென்மையான திருவடிகளுக்கு வணக்கம்;
* திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருக்குச் சிறந்த பொற்காசையும் சம்பந்தருக்குச் சற்றுத் தரம் குறைந்த காசையும் இறைவர் அருளினார். சம்பந்தர் பதிகம் பாடி வேண்டியபின் அவருக்கும் நல்ல பொற்காசை அருளினார்.
7)
மறைகாப் பிடுமாக் கதவத்தை
இறைவா அருளென் றுள(ம்)நெக்கு
நறையார் தமிழால் பிரியச்செய்
மறையாப் புகழார் அடிபோற்றி.
மறை காப்பு இடு மாக்-கதவத்தை - வேதங்கள் பூசித்துத் தாழிட்ட பெரிய கதவை;
"இறைவா அருள்" என்று உளம் நெக்கு நறை ஆர் தமிழால் பிரியச் செய் - "இறைவனே; அருளாய்" என்று உள்ளம் உருகி மணம் மிக்க தமிழ்ப் பாமாலைகள் பாடித் திறக்கச் செய்த;
மறையாப் புகழார் அடி போற்றி - அழியாத புகழ் உடையவரான திருநாவுக்கரசரது திருவடிக்கு வணக்கம்;
* வேதாரண்யத்தில் கதவு திறக்கப் பாடியருளினார் திருநாவுக்கரசர்.
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.10.1 - "பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ .… கதவினைத் திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே");
8)
கயிலைக் கிறைவன் திருவெற்பில்
மயிலாள் அவளோ டுறைகாட்சி
புயலார் பொழில்சூ ழுமையாற்றில்
இயல்மா தவர்தாள் இணைபோற்றி.
கயிலைக்கு இறைவன் திருவெற்பில் மயிலாள் அவளோடு உறை காட்சி - கயிலைநாதன் மயில் போன்ற சாயலை உடைய உமையுடன் கயிலைமலையில் உறைகின்ற திருக்காட்சியை;
புயல் ஆர் பொழில் சூழும் ஐயாற்றில் இயல் மாதவர் தாள்இணை போற்றி - மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த திருவையாற்றில் காணப்பெற்ற சிறந்த தவமுடையவரான திருநாவுக்கரசரது இரு-திருவடிகளுக்கு வணக்கம்; (புயல் - மேகம்); (இயல்தல் - கூடியதாதல்; நேர்தல்);
* திருநாவுக்கரசர் திருவையாற்றில் கயிலைக்-காட்சியைக் கண்ட வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க.
9)
உமையாள் தருபால் தனையுண்ட
தமிழா கரர்தம் சிவிகைக்கீழ்த்
தமரோ டதுதாங் கியஅப்பர்
கமழ்செங் கமலக் கழல்போற்றி.
உமையாள் தரு பால்தனை உண்ட தமிழ்-ஆகரர்தம் சிவிகைக்கீழ்த் - உமாதேவியார் தந்த ஞானப்பாலை உண்டவரும் தமிழின் உறைவிடமுமான திருஞான சம்பந்தரது பல்லக்கின் கீழே; (ஆகரம் - இருப்பிடம்);
தமரோடு அது தாங்கிய அப்பர் - மற்ற அடியவர்களோடு சேர்ந்து அதனைச் சுமந்த அப்பரது;
கமழ் செங்கமலக் கழல் போற்றி - மணக்கின்ற செந்தாமரை போன்ற திருவடிகளுக்கு வணக்கம்.
* சம்பந்தரது சிவிகையை அப்பர் தாங்கியது திருப்பூந்துருத்தி நிகழ்ச்சி.
(பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 8.21.396 - "திருஞான மாமுனிவர் அரசிருந்த பூந்துருத்திக் கருகாக எழுந்தருளி எங்குற்றார் அப்பர்என உருகாநின்று உம்அடியேன் உம்அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு வந்தெய்தப்பெற்று இங்குற்றேன் என்றார்");
10)
மலைபேர்த் தவன்வாய் ஒருபத்தும்
அலறச் சிறிதே விரலூன்றும்
தலைவன் புகலூர் இறைதாட்கீழ்
நிலைபெற் றவர்தாள் மலர்போற்றி.
மலை பேர்த்தவன் வாய் ஒரு பத்தும் அலறச் சிறிதே விரல் ஊன்றும் தலைவன் - கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனது பத்து-வாய்களும் அலறும்படி ஒரு விரலைச் சிறிதளவு ஊன்றிய தலைவன்;
புகலூர் இறை தாட்கீழ் நிலைபெற்றவர் தாள்மலர் போற்றி - புகலூரில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருவடிக்கீழ் நிலையாகத் தங்கிய திருநாவுக்கரசரது திருவடித்தாமரைக்கு வணக்கம்;
* திருநாவுக்கரசரது பதிகங்களில் பத்தாம் பாடலில் இராவணன் கயிலைக்கீழ் நசுக்குண்ட வரலாற்றுக் குறிப்பு இருக்கும்.
* திருநாவுக்கரசர் திருப்புகலூரில் ஈசன் திருவடிநிழலைச் சேர்ந்தார்;
(பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.428 - "நண்ணரிய சிவானந்த ஞானவடிவே ஆகி அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டஅரசு அமர்ந்திருந்தார்");
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment