2018-04-06
T.209 - வக்கரை - இட்டமும் வினைகளும்
---------------------------------
(வண்ணவிருத்தம்;
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன .. தனதான)
(கைத்தல நிறைகனி - திருப்புகழ் - விநாயகர் துதி)
இட்டமும் வினைகளு(ம்) நித்தலும் இடர்தர
.. .. இத்தரை மிசைமிக .. அயராதே
.. இக்கன தமிழவை பொற்கழல் இணைதனில்
.. .. இட்டிடும் அறிவினை .. அருளாயே
நட்டம திடவொரு நற்சபை எனநரி
.. .. நச்சிய சுடலையை .. உடையானே
.. நற்றவ அரிவையர் இற்பலி கொளவுழல்
.. .. நக்கரை உருவின .. மணிமார்பா
கட்டிய சிலையென வெற்பது கொடுமிகு
.. .. கட்டரண் எரிபர .. பலதேவர்
.. கத்தலை திகழ்கடல் மத்திடு பொழுதெழு
.. .. கைப்புடை விடமுணும் .. அருளாளா
மட்டலர் குழலணி உத்தமி தனையிடம்
.. .. வைத்தொரு நதிசடை .. அணிவோனே
.. மட்புதை மரமவை கற்றிரள் உருவடை
.. .. வக்கரை தனிலுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
இட்டமும் வினைகளு(ம்) நித்தலும் இடர் தர
.. .. இத்-தரைமிசை மிக .. அயராதே,
.. இக்கு அன தமிழ்அவை பொற்கழல் இணைதனில்
.. .. இட்டிடும் அறிவினை .. அருளாயே;
நட்டமது இட ஒரு நற்சபை என நரி
.. .. நச்சிய சுடலையை .. உடையானே;
.. நற்றவ அரிவையர் இற்-பலி கொள உழல்
.. .. நக்கரை உருவின; .. மணி-மார்பா;
கட்டிய சிலை என வெற்பது கொடு மிகு
.. .. கட்டு-அரண் எரி பர; .. பல தேவர்
.. கத்து-அலை திகழ் கடல் மத்திடு பொழுது எழு
.. .. கைப்புடை விடம் உணும் .. அருளாளா;
மட்டு-அலர் குழல் அணி உத்தமிதனை இடம்
.. .. வைத்து, ஒரு நதி சடை .. அணிவோனே;
.. மட்புதை மரம்-அவை கற்றிரள் உரு-அடை
.. .. வக்கரைதனில் உறை .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
இட்டமும் வினைகளும் நித்தலும் இடர் தர, இத்-தரைமிசை மிக அயராதே - ஆசைகளும் வினைகளும் தினமும் துன்பத்தைத் தர, அதனால் இப்புவிமேல் மிகவும் வருத்தமுறும் நிலையை அடையாமல்; (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (நித்தலும் - எந்நாளும்); (இடர் - துன்பம்);
இக்கு அன தமிழ்அவை பொற்கழல் இணைதனில் இட்டிடும் அறிவினை அருளாயே - கரும்பு போன்ற இனிய தமிழ்ப்பாமாலைகளை (= தேவாரம் திருவாசகம் முதலியவற்றை) உன் இரு-திருவடிகளில் சூட்டும் அறிவை எனக்குத் தந்து அருள்வாயாக; (இக்கு - இக்ஷு - கரும்பு);
நட்டம்அது இட ஒரு நற்சபை என, நரி நச்சிய சுடலையை உடையானே - நரிகள் விரும்பும் (= உலவும்) சுடுகாடே அரங்கம் என்று அங்குத் திருநடம் செய்பவனே; (நட்டம் - நடனம்; அது - பகுதிப்பொருள்விகுதி); (நச்சுதல் - விரும்புதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.19.1 - "நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்");
நற்றவ அரிவையர் இற்பலி கொள உழல் நக்கரை உருவின - நல்ல தவவடிவினனே; பெண்களின் வீடுகளில் பிச்சை ஏற்கத் திரியும் திகம்பரனே; (நற்றவ அரிவையர் - "நல்ல தவமுடைய பெண்கள்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (இல்+பலி = இற்பலி = இல்லங்களில் பிச்சை); (நக்கரை உருவினன் - ஆடை அணியாதவன்; நக்கரை - நக்க அரை என்பதன் மரூஉ. நக்கம் - நக்நம் ஆடையின்மை; அரை - இடுப்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.76.1 - "மடவார் இற்பலி கொளப் புகுதும் எந்தை"); (அப்பர் தேவாரம் - 4.66.9 - "மாதரை மையல் செய்யும் நக்கரை உருவர்");
மணி-மார்பா - அழகிய பவளம் போன்ற மார்பை உடையவனே; (மணி - அழகு; பவளம்);
கட்டிய சிலை என வெற்புஅதுகொடு மிகு கட்டு-அரண் எரி பர - கட்டப்பட்ட வில்லாக ஏந்திய மேருமலையால் மிகுந்த காவலுடைய மூன்று கோட்டைகளை எரித்த பரனே; (சிலை - வில்); (கட்டு - காவல்); (சம்பந்தர் தேவாரம்- 3.18.7 - "எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன் திரிபுரம் எரிசெய்த செல்வர்");
பல தேவர் கத்து-அலை திகழ் கடல் மத்திடு பொழுது எழு கைப்பு-உடை விடம் உணும் அருளாளா - வானோர் பலரும் கூடி ஒலிக்கின்ற அலை திகழும் பாற்கடலைக் கடைந்தபொழுது எழுந்த கசப்பு உடைய ஆலகாலத்தை உண்ட அருளாளனே; (மத்திடுதல் - கடைதல்); (கைப்பு - கசப்பு);
மட்டு-அலர் குழல் அணி உத்தமிதனை இடம் வைத்து, ஒரு நதி சடை அணிவோனே - வாசமலர்களைக் கூந்தலில் அணிந்த உத்தமியான உமையை இடப்பக்கம் ஒரு கூறாகக் கொண்டு, சடையில் கங்கையை அணிந்தவனே; (மட்டு - வாசனை); (அலர் - பூ);
மட்புதை மரம்அவை கல்திரள் உரு அடை வக்கரைதனில் உறை பெருமானே - மண்ணில் புதைந்த மரங்கள் கல்லின் திரண்ட வடிவத்தை அடைந்த திருவக்கரையில் உறைகின்ற பெருமானே;
(The National Fossil Wood Park, Tiruvakkarai contains petrified wood fossils). (மட்புதை - மண்+புதை - மண்ணில் புதைந்த); (கற்றிரள் - கல்+திரள் - கல்லினது திரள்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment