Pages

Sunday, April 20, 2025

T.200 - பழனம் - விரியும் ஆசைகள்

2017-05-02

T.200 - பழனம் - விரியும் ஆசைகள்

(திருவையாறு அருகே உள்ள தலம்)

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தானன தனன தானன

தனன தானன .. தனதான)

(இருளும் ஓர்கதிர் - திருப்புகழ் - சிதம்பரம்)


விரியும் ஆசைகள் தினமு மேவிட

.. .. வினைக ளேமிக .. உழல்வேனும்

.. வெளிய நீறணி விமல னேஉனை

.. .. விரவி வாழ்வுற .. அருளாயே

வரிய ராவினை அரையில் நாணென

.. .. மகிழும் ஆரிய .. கயிலாய

.. மலையின் மீதுறை பரம மாவிட(ம்)

.. .. மணிய தாகிய .. மிடறோனே

பெரிய நாயகி கணவ மாலொடு

.. .. பிரமன் நேடிய .. உயர்சோதீ

.. பிளிறு வாரண உரிவை மூடிய

.. .. பெருமை யாய்இள .. மதிசூடீ

பரிவி லாநமன் அழிய வீசிய

.. .. பதுமம் ஆர்கழல் .. மறவாது

.. பரவு வாரவர் துணைவன் ஆகிய

.. .. பழன(ம்) மேவிய .. பெருமானே.


பதம் பிரித்து:

விரியும் ஆசைகள் தினமும் ஏவிட

.. .. வினைகளே மிக .. உழல்வேனும்,

.. வெளிய நீறு அணி விமலனே, உனை

.. .. விரவி வாழ்வுற .. அருளாயே;

வரி-அராவினை அரையில் நாண் என

.. .. மகிழும் ஆரிய; .. கயிலாய

.. மலையின் மீது உறை பரம; மா-விட(ம்)

.. .. மணியது ஆகிய .. மிடறோனே;

பெரிய நாயகி கணவ; மாலொடு

.. .. பிரமன் நேடிய .. உயர்-சோதீ;

.. பிளிறு வாரண உரிவை மூடிய

.. .. பெருமையாய்; இள .. மதி-சூடீ;

பரிவு-இலா நமன் அழிய வீசிய

.. .. பதுமம் ஆர்-கழல் .. மறவாது

.. பரவுவார்-அவர் துணைவன் ஆகிய,

.. .. பழன(ம்) மேவிய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

விரியும் ஆசைகள் தினமும் ஏவிட (/மேவிட), வினைகளே மிக உழல்வேனும் - விரிகின்ற ஆசைகள் தினமும் என்னைத் தூண்டிவிடத், தீவினைகளே மிகும்படி நடந்து வருந்துகின்ற நானும்; (தினமுமேவிட - 1. தினமும் ஏவிட; 2. தினமும் மேவிட); (மேவுதல் - அடைதல்; பொருந்துதல்); (ஏவுதல் - கட்டளையிடுதல்; தூண்டிவிடுதல்; செலுத்துதல்);

வெளிய நீறு அணி விமலனே, உனை விரவி வாழ்வு உற அருளாயே - வெண்மையான திருநீற்றைப் பூசிய தூயனே, உன்னை அடைந்து நற்கதி பெற அருள்வாயாக; (வெளிய - வெண்மையான); (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.4 - "வெளியநீ றாடும் மேனி வேதியன்");

வரி-அராவினை அரையில் நாண் என மகிழும் ஆரிய - வரியுடைய பாம்பை அரைநாணாகக் கட்டிய பெரியோனே; (சம்பந்தர் தேவாரம் - 3.30.9 - "வரியரா என்பணி மார்பினர்"); (ஆரியன் - பெரியோன்; ஆசாரியன்); (திருவாசகம் - சிவபுராணம் - "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே");

கயிலாய மலையின் மீது உறை பரம - கயிலைமலைமேல் உறைகின்ற பரமனே;

மா-விடம் மணிஅது ஆகிய மிடறோனே - பெருநஞ்சு நீலமணி ஆகிய கண்டத்தை உடையவனே; (மிடறு - கண்டம்);

பெரிய நாயகி கணவ - பெரியநாயகி என்ற திருநாமம் உடைய உமைக்குக் கணவனே; (* பெரியநாயகி - திருப்பழனத்தில் இறைவி திருநாமம்);

மாலொடு பிரமன் நேடிய உயர் சோதீ - திருமாலும் பிரமனும் தேடிய உயர்ந்த ஜோதியே; (நேடுதல் - தேடுதல்);

பிளிறு வாரண உரிவை மூடிய பெருமையாய் - பிளிறிய யானையின் தோலை மார்பு சூழப் போர்த்த பெருமையை உடையவனே; (வாரணம் - யானை); (உரிவை - தோல்);

இளமதி சூடீ - இளம்பிறையை அணிந்தவனே;

பரிவு இலா நமன் அழிய வீசிய பதுமம் ஆர் கழல் மறவாது பரவுவார் அவர் துணைவன் ஆகிய - இரக்கமற்ற கூற்றுவன் அழியும்படி அவனை உதைத்த, தாமரை போன்ற திருவடியை எப்போதும் நினைந்து துதிக்கின்றவர்கள் துணைவன் ஆன; (பதுமம் - பத்மம் - தாமரை); (ஆர்தல் - ஒத்தல்); (* பரவுவார்-அவர் துணைவன் - "ஆபத்சகாயர்" - திருப்பழனத்தில் இறைவன் திருநாமம்);

பழன(ம்) மேவிய பெருமானே - திருப்பழனத்தில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment