Pages

Monday, April 21, 2025

N.046 - மாணிக்க வாசகர் துதி - சுட்ட நீறணி

2017-06-10

N.046 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2017

----------------

(ஷட்பதி அமைப்பு -

மா விளம் மா விளம்

மா விளம் மா விளம்

மா விளம் மா விளம் மா விளங்காய்)


சுட்ட நீறணி சொக்கன் மதுரையில்

பிட்டை உண்டருள் பித்தன் மலரடி

பட்ட உச்சியர் பரமன் மெச்சிய பாக்கள் பாடவலார்

கட்டு வல்வினைக் கயிற றுத்திடும்

மட்டு வார்திரு வாத வூரர்சொல்

இட்ட மாய்நிதம் எண்ணி அவர்கழல் இணையை ஏத்திடுவோம்.


சுட்ட நீறு அணி சொக்கன் - திருநீற்றைப் பூசிய அழகன்;

மதுரையில் பிட்டை உண்டு அருள் பித்தன் - வந்திக்குக் கூலியாளாக வந்து அவள் தந்த பிட்டைக் கூலியாகப் பெற்று உண்ட பேரருளாளன்; (பித்தன் - பேரன்பு உடையவன்);

மலரடி பட்ட உச்சியர் - அச்சிவபெருமானது மலர் போன்ற திருவடிகளைத் தம் தலைமீது சூட்டப்பெற்றவர்; (உச்சி - தலை);

பரமன் மெச்சிய பாக்கள் பாடவலார் - சிவபெருமான் விரும்பிக் கேட்ட பாடல்களைப் பாடியருளியவர்; (தில்லையில் ஒரு மறையவர் வடிவில் ஈசன் வந்து மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாட அதனைத் தன் கையால் எழுதிய வரலாற்றையும் காண்க);

கட்டு-வல்வினைக் கயிறு அறுத்திடும் மட்டு வார் திருவாதவூரர் சொல் - உயிர்களைக் கட்டியிருக்கும் வலிய வினை என்ற கயிற்றை அறுக்க வல்லதான, மாணிக்கவாசகர் அருளிய, தேன் சொரியும் திருவாசகம்; (மட்டு - தேன்); (வார்தல் - சொரிதல்; ஒழுகுதல்);

இட்டமாய் நிதம் எண்ணி - அந்தத் திருவாசகத்தைத் தினந்தோறும் பக்தியோடு எண்ணி;

அவர் கழல் இணையை ஏத்திடுவோம் - மாணிக்கவாசகர் திருவடியைப் போற்றுவோம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment