Pages

Thursday, December 22, 2022

06.04.031 – திருநாவுக்கரசர் துதி - மழுவாளி மலரடியில்

06.04.031 – திருநாவுக்கரசர் துதி - மழுவாளி மலரடியில்

2015-05-07

06.04.031 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2015

----------------------------------

(2 பாடல்கள்)


1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----

மழுவாளி மலரடியில் வண்டமிழ்கள் பலசாத்தித்

தொழுவாரம் மலிநெஞ்சர் தூநீற்று மேனியராய்

உழவாரப் படையேந்தி ஓயாமற் பணிசெய்து

வழுவாரா வழிகாட்டு வாகீசர் தாள்போற்றி.


மழுவாளி - மழுவாள் ஏந்திய சிவபெருமான்;

வண்டமிழ்கள் - வண் தமிழ்கள் - தேவாரம்;

வாரம் மலி நெஞ்சர் - அன்பு மிகுந்த மனத்தை உடையவர்;

வழு வாரா வழி காட்டு வாகீசர் - குற்றங்கள் அடையாத நெறியை நமக்குக் காட்டும் திருநாவுக்கரசர்;


2) ------ அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு -----

பண்ணார் தமிழால் பரமனையே .. பாடிப் பணிந்தார் அரன்பாதம்

நண்ணாச் சமணர் ஒளித்திட்ட .. நம்பன் தளியைக் கண்டுதொழா

துண்ணேன் என்று பழையாறை .. ஊரில் தவம்செய் ததுமீட்டு

மண்ணோர் போற்றத் தந்தருள்செய் .. வாக்கின் மன்னர் பதம்போற்றி.


பதம் பிரித்து:

பண் ஆர் தமிழால் பரமனையே பாடிப் பணிந்தார்; "அரன் பாதம்

நண்ணாச் சமணர் ஒளித்திட்ட நம்பன் தளியைக் கண்டுதொழாது

உண்ணேன்" என்று பழையாறை ஊரில் தவம்செய்து அது மீட்டு,

(மீட்டும்) மண்ணோர் போற்றத் தந்து அருள்செய் வாக்கின் மன்னர் பதம் போற்றி.


நண்ணுதல் - சார்தல்;

நம்பன் - சிவபெருமான்;

தளி - கோயில்;

உண்ணேன் - உண்ணமாட்டேன்;

மீட்டுமண்ணோர் - 1. மீட்டு மண்ணோர்; 2. மீட்டும் மண்ணோர்;

அது மீட்டு மண்ணோர் - அதனை மீட்டு, மீட்டும் மண்ணோர்; ("மீட்டு" என்பது இடைநிலைத் தீவகமாக இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளுமாறு நின்றது);

மீள்தல் - மீட்டல் - திரும்பக்கொணர்தல் (To bring back, recover;)

மீட்டும் - திரும்பவும் (Again);

மண்ணோர் - உலக மக்கள்;


* பழையாறை வடதளித் திருக்கோயிலுள் இருக்கும் இறைவரை ஒளித்துச் சமணர் தம் பாழியாகக் கொண்டிருந்தனர். திருநாவுக்கரசர் அங்குச் சென்றபோது மீண்டும் அக்கோயிலுள் சிவபிரானைத் தரிசித்தாலன்றி உண்பதில்லை என விரதங்கொண்டதும், அரசன் கனவில் இறைவன் தோன்றி மீண்டும் கோயில் எடுக்கச் செய்ததும், சமணர்களை அழிக்கச் செய்ததும் வரலாறு. இதனைப் பெரியபுராணத்திற் காண்க.


(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.58.1

தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்

நிலையினால் மறைத்தால் மறைக்கொண்ணுமே

அலையினார்பொழில் ஆறை வடதளி

நிலையினானடியே நினைந்துய்ம்மினே.)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment