Pages

Tuesday, August 2, 2022

06.02.155 – நெய்த்தானம் - தேவினைத் தேறி - (வண்ணம்)

06.02.155 – நெய்த்தானம் (திருநெய்த்தானம்) - தேவினைத் தேறி - (வண்ணம்)

2011-09-01

06.02.155 - தேவினைத் தேறி - (நெய்த்தானம் (திருநெய்த்தானம்))

(இக்கால வழக்கில் "தில்லைஸ்தானம்" - திருவையாறு அருகே உள்ள தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தானனத் தானத் .. தனதான )


தேவினைத் தேறித் .. தெளியாத

.. தீயரைப் பாடிப் .. பணநாடி

ஆவியைப் பாழுக் .. கிறையாமல்

.. ஆரணத் தாயைப் .. பணிவேனே

தீவினைப் போரைக் .. களைவோனே

.. தேய்மதிக் காரப் .. பரிவோனே

தேவியைப் பாகத் .. தமர்வோனே

.. சீர்கொணெய்த் தானப் .. பெருமானே.


பதம் பிரித்து:

தேவினைத் தேறித் தெளியாத

.. தீயரைப் பாடிப் பணம் நாடி

ஆவியைப் பாழுக்கு இறையாமல்,

.. ஆரணத்தாயைப் பணிவேனே;

தீவினைப் போரைக் களைவோனே;

.. தேய்மதிக்கு ஆரப் பரிவோனே;

தேவியைப் பாகத்து அமர்வோனே;

.. சீர்கொள் நெய்த்தானப் .. பெருமானே.


தேவினைத் தேறித் தெளியாத தீயரைப் பாடிப் பணம் நாடி, ஆவியைப் பாழுக்கு இறையாமல் - தெய்வத்தை ஆராய்ந்து தெளியாத தீயவர்களைப் புகழ்ந்து பணத்திற்காக ஆவியை வீணாக்காமல்; (தே / தேவு - கடவுள்); (தேறித்தெளிதல் - ஆராய்ந்து தெளிதல்); (பணம் + நாடி = பணநாடி); (திருப்புகழ் - பேரவா அறா (பொதுப்பாடல்) - "ஆவி சாவி யாகாமல் நீசற்றருள்வாயே");

ஆரணத்தாயைப் பணிவேனே - வேதநாயகனான உன்னைத் தொழுவேன்; (ஆரணம் - வேதம்; ஆரணத்தாயை - வேதத்தானாகிய உன்னை); (6.65.1 - "நால்வேதத்தான்காண்"); (திருவிசைப்பா - 9.1.5 - "நற்றவத்தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே");

தீவினைப் போரைக் களைவோனே - பக்தர்களின் பாவக் குவியலை அழிப்பவனே; தீவினையின் தாக்குதலைத் தீர்ப்பவனே; (போர் - 1. குவியல்; 2. யுத்தம்); (களைதல் - அழித்தல்);

தேய்மதிக்கு ஆரப் பரிவோனே - தேய்ந்துவந்த சந்திரனுக்கு மிகவும் இரங்கி அருள்செய்தவனே; (ஆர - மிகவும்); (பரிதல் - இரங்குதல்);

தேவியைப் பாகத்து அமர்வோனே - உமையம்மையை ஒரு பாகமாக விரும்புவனே; (அமர்தல் - விரும்புதல்);

சீர்கொள் நெய்த்தானப் பெருமானே - அழகிய திருநெய்த்தானத்தில் உறையும் சிவபெருமானே. (சீர் கொள் - அழகிய; சிறப்புமிக்க); (சீர்கொள் + நெய்த்தான = சீர்கொணெய்த்தான);


(இலக்கணக் குறிப்புகள்: ஆறுமுக நாவலர் - இலக்கணச் சுருக்கம்:

ள் + மெல்லினம்:

154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும். 155. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.

ம் + மெல்லினம்:

146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment