Pages

Thursday, May 14, 2020

03.05.054 – சிரபுரம் (காழி) - எழுதரு பிறவிகள் - (வண்ணம்)

03.05.054 – சிரபுரம் (காழி) - எழுதரு பிறவிகள் - (வண்ணம்)

2007-09-21

3.5.54) எழுதரு பிறவிகள் - (சிரபுரம் - சீகாழி)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன .. தனதான )

(நிறைமதி முகமெனு மொளியாலே - திருப்புகழ் - சுவாமிமலை)


எழுதரு பிறவிகள் .. தொறுநாளும்

.. எனதுளம் உனதடி .. மறவாமல்

பழுதறு தமிழ்கொடு .. புனைமாலை

.. பலபல இடுநினை .. வருளாயே

தொழுதெழும் இமையவர் .. துயர்தீரச்

.. சுடுகணை கொடுபுரம் .. எரிவீரா

செழுமலர் மதியணி .. சடையானே

.. சிரபுர நகருறை .. பெருமானே.


எழுதரு பிறவிகள்தொறும் நாளும் எனது உளம் உனது அடி மறவாமல் - எழுகின்ற பிறவிகளிலெல்லாம் தினமும் என் உள்ளம் உன் திருவடியை மறத்தல் இன்றி;

பழுது அறு தமிழ்கொடு புனை மாலை பலபல இடு நினைவு அருளாயே - குற்றமற்ற தமிழால் தொடுத்த பாமாலைகள் பல இட்டு வணங்கும் எண்ணத்தை அருள்வாயாக;

தொழுதெழும் இமையவர் துயர் தீரச் சுடு கணைகொடு புரம் எரி வீரா - தொழுது இறைஞ்சிய தேவர்களது துன்பங்கள் தீருமாறு எரிக்கின்ற ஓர் அம்பால் முப்புரங்களை எரித்த வீரனே;

செழுமலர் மதிணி சடையானே - செழுமையான மலர்களையும் சந்திரனையும் சடையில் அணிந்தவனே;

சிரபுர நகர் உறை பெருமானே - சிரபுரம் என்ற பெயரும் உடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

2 comments: