Pages

Saturday, June 29, 2019

04.70 – அன்னியூர் - (பொன்னூர்)


04.70 – அன்னியூர் - (பொன்னூர்)



2014-06-22
அன்னியூர் (இக்காலத்தில் 'பொன்னூர்'. மயிலாடுதுறை அருகே உள்ளது)
---------------------------------------------------------------
(அறுசீர் விருத்தம் - 'தான தான தானனா' என்ற சந்தம் உள்ள அரையடி அமைப்பு ;
தான என்பது தனன என்றும் ஒரோவழி வரலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை");
(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன் றென்று நின்ற விச்சையால்");



1)
ஏற மர்ந்த எம்மிறை .. ஏல ஓதி மாதுமை
கூற மர்ந்த அன்பினான் .. கூர்ம ழுப்ப டைக்கரன்
நீற ணிந்த மேனியான் .. நெற்றி மேலொர் கண்ணினான்
ஆற ணிந்த சென்னியான் .. அன்னி யூரில் அண்ணலே.



ஏறு அமர்ந்த எம் இறை - இடபவாகனன் எம் இறைவன்; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);
ஏல ஓதி மாதுமை கூறு அமர்ந்த அன்பினான் - வாசக் குழலினளான உமையம்மையை ஒரு பாகமாக உடைய அன்பன்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (ஓதி - கூந்தல்);
கூர் மழுப்படைக் கரன் - கூரிய மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவன்;
நீறு அணிந்த மேனியான் - திருமேனியில் திருநீற்றைப் பூசியவன்;
நெற்றிமேல் ஒர் கண்ணினான் - னெற்றிக்கண்ணன்; (ஓர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);
ஆறு அணிந்த சென்னியான் - கங்காதரன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்; (அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்; கடவுள்);



2)
இரவில் மாந டஞ்செயும் .. இன்பன் அன்பர் ஏத்திடும்
கரவி லாத கையினான் .. கைகள் கூப்பி வானவர்
பரவ நின்ற பண்பினான் .. பால்ம திக்குப் பக்கமோர்
அரவ ணிந்த சென்னியான் .. அன்னி யூரில் அண்ணலே.



இரவில் மா நடம் செயும் இன்பன் - நள்ளிரவில் பெரும் திருக்கூத்து ஆடுகின்றவன், இன்பவடிவினன்;
அன்பர் ஏத்திடும் கரவு இலாத கையினான் - பக்தர்கள் போற்றுகின்ற வள்ளல்; (கரவு இலாத கையினான் - வஞ்சம் இன்றிக் கொடுப்பவன்);
கைகள் கூப்பி வானவர் பரவ நின்ற பண்பினான் - தேவர்கள் கைகூப்பிப் போற்றுகின்ற ஈசன்;
பால்மதிக்குப் பக்கம் ஓர் அரவு அணிந்த சென்னியான் - பால் போன்ற வெண்திங்களுக்கு அருகே ஒரு பாம்பைத் தலைமேல் அணிந்தவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



3)
மும்ம லங்கள் அற்றவன் .. மூப்பி றப்பி லாதவன்
அம்ம லர்ச்ச ரத்தனை .. அட்ட நெற்றி நேத்திரன்
நம்மை ஈன்ற தாயவன் .. நாடி னார்க்கு நல்லவன்
அம்மை பாகம் ஆயினான் .. அன்னி யூரில் அண்ணலே.



மும்மலங்கள் அற்றவன் - தூயவன்;
மூப்பு இறப்பு இலாதவன் - முதுமையும் மரணமும் இல்லாதவன்;
அம் மலர்ச் சரத்தனை அட்ட நெற்றி நேத்திரன் - அழகிய மலரை அம்பாக உடைய மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (அப்பர் தேவாரம் - 4.84.10 - “... கைம்மா வரிசிலைக் காமனை அட்ட கடவுள்முக்கண் எம்மான் ...”);
நம்மை ஈன்ற தாய் அவன் - நம்மைப் பெற்ற தாய் அவன்;
நாடினார்க்கு நல்லவன் - சரணடைந்தவர்களுக்கு நன்மை செய்பவன்;
அம்மை பாகம் ஆயினான் .- உமையொரு பங்கன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



4)
மினலங் காட்டும் நுண்ணிடை .. வெற்பன் பாவை பங்கினான்
கனலங் கொக்கும் வார்சடை .. காட்டு கின்ற சென்னிமேல்
புனலம் போது போழ்மதி .. புற்ற ராப்பு னைந்தவன்
அனலங் கையில் ஏந்தினான் .. அன்னி யூரில் அண்ணலே.



மின் நலம் காட்டும் நுண்ணிடை வெற்பன் பாவை பங்கினான் - மின்னல் போன்ற நுண்ணிடை உடையவளும் மலையான் மகளுமான உமையம்மையை ஒரு பங்காக உடையவன் ; (மினலம் - மின் + நலம்); (மின் - மின்னல்); (நலம் - அழகு; குணம்);
(இலக்கணக் குறிப்பு : மின்+நலம் = மின்னலம். மினலம் என்றது தொகுத்தல் விகாரம்);
கனல் அங்கு ஒக்கும் வார்சடை காட்டுகின்ற சென்னிமேல் - தீப்போன்ற நீள்சடை திகழும் திருமுடிமேல்; (அங்கு - அசைச்சொல்);
புனல் அம் போது போழ்மதி புற்று அராப் புனைந்தவன் - கங்கை, அழகிய மலர், பிளவுபட்ட சந்திரன், புற்றில் வாழும் தன்மையையுடைய பாம்பு ஆகியவற்றை அணிந்தவன்;
அனல் அங்கையில் ஏந்தினான் - கையில் தீயை ஏந்தியவன்; (அனலங் கையில் = அனலம் + கையில் / அனல் + அங்கையில்); (அனலம் / அனல் - நெருப்பு); (அங்கை - உள்ளங்கை; அம் கை - அழகிய கை);
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



5)
பொங்கு நஞ்சு கண்டுவான் .. போற்ற உண்டு கார்மணி
தங்கு மாமி டற்றினான் .. தக்கன் வேள்வி சாடினான்
எங்கும் நாகம் பூண்டவன் .. ஏழை பங்கன் நான்மறை
அங்கம் ஆறும் ஓதினான் .. அன்னி யூரில் அண்ணலே.



பொங்கு நஞ்சு கண்டு வான் போற்ற உண்டு கார்மணி தங்கு மா மிடற்றினான் - பொங்கிய ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சித் தேவர்கள் இறைஞ்ச அவ்விடத்தை உண்டு நீலமணி திகழும் அழ்கிய கண்டத்தை உடையவன்; (கார் - கருமை; கரிய); (மா - அழகு); (மிடறு - கண்டம்);
தக்கன் வேள்வி சாடினான் - தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்;
எங்கும் நாகம் பூண்டவன் - நாகாபரணன்;
ஏழை பங்கன் - உமைபங்கன்; (ஏழை - பெண்);
நான்மறை அங்கம் ஆறும் ஓதினான் - நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பாடியருளியவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



6)
கருணை யற்ற காலனைக் .. காலி னாலு தைத்தவன்
மரணம் அற்ற வாழ்வினை .. மாணி யார்க்கு நல்கினான்
சரணம் என்று சார்ந்தவர் .. தம்மைக் காக்கும் தன்மையான்
அரணம் மூன்றை அட்டவன் .. அன்னி யூரில் அண்ணலே.



மரணம் அற்ற வாழ்வினை மாணியார்க்கு நல்கினான் - மார்க்கண்டேயர்க்கு இறப்பின்மையை அருள்புரிந்தவன்;
சரணம் என்று சார்ந்தவர் தம்மைக் காக்கும் தன்மையான் - சரண் புகுந்தவர்களைக் காப்பவன்;
அரணம் மூன்றை அட்டவன் - மும்மதில்களை எரித்தவன்;



7)
பல்லில் ஓட்டில் உண்பலி .. பாவை மாரி டம்பெறச்
செல்லும் செல்வன் வாலுடைச் .. சேவ தேறும் சேவகன்
வில்லில் அம்பைக் கோத்தெயில் .. வேவு மாறு நக்கவன்
அல்லில் நட்டம் ஆடுவான் .. அன்னி யூரில் அண்ணலே.



பல் இல் ஓட்டில் உண்பலி பாவைமாரிடம் பெறச் செல்லும் செல்வன் - பல் இல்லாத மண்டையோட்டினில் பிச்சையைப் பெண்களிடம் பெறுவதற்காகப் போகின்ற செல்வன்; ("பல் இல் – பல வீடுகளில்” என்றும் பொருள் கொள்ளல் ஆம்);
வாலுடைச் சேஅது ஏறும் சேவகன் - வெள்ளை எருதை வாகனமாக உடைய வீரன்; (வால் - வெண்மை); (சே - எருது); (சேவகன் - வீரன்); (அப்பர் தேவாரம் - 4.63.9 - “.... வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே.” - வாலுடை விடை - வெள்விடை);
வில்லில் அம்பைக் கோத்து எயில் வேவுமாறு நக்கவன் - மேருவில்லில் ஒரு கணையைக் கோத்து முப்புரங்களும் எரியும்படி சிரித்தவன்; (எயில் - கோட்டை);
அல்லில் நட்டம் ஆடுவான் - இருளில் திருநடம் செய்பவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



8)
வரையி டந்த தூர்த்தனை .. வாட ஊன்று தாளினான்
கரையி லாத அன்பினான் .. காதிற் றோட ணிந்தவன்
உரையி றந்த சீரினான் .. உம்பர் நாதன் நாணென
அரையில் நாகம் ஆர்த்தவன் .. அன்னி யூரில் அண்ணலே.



வரை இடந்த தூர்த்தனை - கயிலை மலையைப் பெயர்த்த கொடியவனான இராவணனை;
வாட ஊன்று தாளினான் - வாடி வருந்துமாறு விரலை ஊன்றிய திருப்பாதன்;
கரை இலாத அன்பினான் - அளவற்ற அன்பு உடையவன்; (கரையில்லாத கருணைக்கடல்);
காதிற்றோடணிந்தவன் - காதில் தோடு அணிந்தவன்; (உமைபங்கன்);
உரை இறந்த சீரினான் - சொல்லற்கு அரிய புகழ் உடையவன்;
உம்பர் நாதன் - தேவர்கள் தலைவன்;
நாண் என அரையில் நாகம் ஆர்த்தவன் - அரையில் நாணாகப் பாம்பைக் கட்டியவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



9)
சுழலி லங்கு வானதி .. தூய திங்கள் சூடினான்
தழலை ஏந்திக் கானிடைத் .. தாண்ட வஞ்செய் தத்துவன்
கழலும் மேலும் மாலயன் .. காணொ ணாத வண்ணமோர்
அழல தாக ஓங்கினான் .. அன்னி யூரில் அண்ணலே.



சுழல் இலங்கு வானதி தூய திங்கள் சூடினான் - சுழல்கள் இருக்கும் கங்கையையும் வெண்பிறைச் சந்திரனையும் சூடியவன்; (வானதி - வான் நதி - கங்கை);
தழலை ஏந்திக் கானிடைத் தாண்டவம் செய் தத்துவன் - நெருப்பை ஏந்திச் சுடுகாட்டில் கூத்தாடும் மெய்ப்பொருள்;
கழலும் மேலும் மால் அயன் காணொணாத வண்ணம் ஓர் அழல் அது ஆக ஓங்கினான் - தன் அடியையும் முடியையும் திருமாலும் பிரமனும்; காண இயலாதவாறு ஓர் எல்லையற்ற சோதியாக உயர்ந்தவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



10)
பொக்கம் மிக்க நெஞ்சினர் .. பொய்த்த வத்தைப் பேசுவார்
துக்கம் நல்கும் அம்மொழி .. துச்சம் என்று தள்ளுமின்
செக்கர் வான்நி றத்தினான் .. சீலர் சேரும் செந்நெறி
அக்கின் ஆரம் பூண்டவன் .. அன்னி யூரில் அண்ணலே.



பொக்கம் மிக்க நெஞ்சினர் பொய்த்தவத்தைப் பேசுவார் - வஞ்சம் நிறைந்த நெஞ்சை உடையவர்கள் பொய்யான தவத்தைப் பேசுவார்கள்; (பொய்த்தவத்தைப் பேசுவார் = பொய்த்து அவத்தைப் பேசுவார்" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளல் ஆம்); (பொய்த்தல் - பொய்யாகப் பேசுதல்; வஞ்சித்தல்); (அவம் - பயனின்மை; கேடு);
துக்கம் நல்கும் அம்மொழி துச்சம் என்று தள்ளுமின் - துன்பத்தைத் தரும் அவர் வார்த்தைகளைத் துச்சம் என்று தள்ளுங்கள்; மதிக்கவேண்டா; (துச்சம் - இழிவு; பொய்);
செக்கர்வான் நிறத்தினான் - செவ்வானம் போன்ற நிறத்தை உடையவன்;
சீலர் சேரும் செந்நெறி - சீலம் உடையவர்கள் சேர்கின்ற நன்மார்க்கமாகத் திகழ்பவன் ; (செந்நெறி - செவ்விய வழி; சன்மார்க்கம்);
அக்கின் ஆரம் பூண்டவன் - உருத்திராக்க மாலை, எலும்பு மாலை இவற்றை அணிந்தவன்; (அக்கு - ருத்ராக்ஷம்; எலும்பு );
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



11)
மலர்கள் எய்த மன்மதன் .. மாய நோக்கிக் காதலி
வலவ எம்பி ரானென .. வாட்டம் தீர்த்த அங்கணன்
உலக நாதன் உம்பரான் .. உன்னும் நெஞ்சில் உள்ளவன்
அலகி லாத சோதியான் .. அன்னி யூரில் அண்ணலே.



* இத்தலத்தில் இரதி வழிபட்டதைத் தலபுராணத்திற் காண்க.


மலர்கள் எய்த மன்மதன் மாய நோக்கிக் - மலர்க்கணையை எய்த மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்து ;
காதலி வலவ எம்பிரான் என வாட்டம் தீர்த்த அங்கணன் - பின் அவன் மனைவியான இரதி, "வல்லவனே, எம்பெருமானே" என்று இறைஞ்சவும் அவளது வாட்டத்தைத் தீர்த்த அருட்கண் உடைய பெருமான்; (காதலி - மனைவி); (வலவ - வலவனே என்ற விளி; வலவன் - சமர்த்தன்; வெற்றியாளன்);
உலக நாதன் உம்பரான் - அகில உலகங்களுக்கும் தலைவன், சிவலோகன்; (அப்பர் தேவாரம் - 5.62.7 - "உம்ப ரானை யுருத்திர மூர்த்தியை");
உன்னும் நெஞ்சில் உள்ளவன் - தியானிக்கும் பக்தர்கள் நெஞ்சில் உறைகின்றவன்;
அலகு இலாத சோதியான் - அளவற்ற சோதி வடிவினன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) அன்னியூர் - (பொன்னூர்) - ஆபத்சகாயேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=217
-------------------

No comments:

Post a Comment