Pages

Saturday, November 11, 2017

03.05.015 – பொது - மடமயில் அனையர்க் கன்பும் - (வண்ணம்)

03.05.015 – பொது - மடமயில் அனையர்க் கன்பும் - (வண்ணம்)


2006-10-21

3.5.15) அன்பன் ஆகிடு சிந்தை தாராய் (பொது)

------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனனத் தந்த தானன

தனதன தனனத் தந்த தானன

தனதன தனனத் தந்த தானன .. தந்ததான)

(அலகில வுணரைக் கொன்ற தோளென - திருப்புகழ் - மதுரை)


மடமயில் அனையர்க் கன்பும் நானெனும்

.. .. மமதையும் நிதியிற் கொண்ட ஆசையும்

.. .. மனமது நிறையக் கொண்டு வாழ்வினில் .. வஞ்சவீணர்

.. மதியிலர் அவர்நட் பென்று பேணிட

.. .. மயலென தறிவைக் கொன்ற தாலினி

.. .. வருவதன் நினைவற் றின்ப மேயென .. எந்தநாளும்


இடர்தரு வழியிற் சென்ற தால்வரும்

.. .. இருள்தரு வினையுற் றஞ்சி னேனுன

.. .. திணையடி மலருக் கன்ப னாகிடு .. சிந்தைதாராய்;

.. இலைமலர் இடுநற் றொண்டர் பாலடை

.. .. இயமனும் வெருவித் துஞ்சு மாறுதை

.. .. இறையவ அடியர்க் கன்ப கானது .. மன்றமாக


நடமிடு கருணைக் குன்ற மேஒரு

.. .. நரைவிடை கொடியிற் கொண்ட நாயக

.. .. நகமது வளைவித் தன்று மூவெயில் .. வென்றவீரா

.. நரகுகள் அடைவிக் கின்ற தீவினை

.. .. நரர்களும் உயவைக் கின்ற ஓர்பெயர்

.. .. நலமுற நவிலக் கண்டு வானருள் .. அங்கணாவோர்


படமுடை அரவைத் திங்க ளோடணி

.. .. படர்சடை முடியிற் றங்கு மாறணி

.. .. பரிசின பொடியைச் சந்து போலணி .. உம்பர்கோனே

.. படுவிடம் அதனைக் கண்டு வாடிய

.. .. பலசுரர் பரவக் கண்ட மோர்மணி

.. .. படமிகு பரிவுற் றுண்டு வாழ்வருள் .. எம்பிரானே.


மடமயில் அனையர்க்கு அன்பும், நான் எனும் மமதையும், நிதியில் கொண்ட ஆசையும், மனம் அது நிறையக் கொண்டு - இளமயில் போன்ற பெண்களுக்கு அன்பும், நான் என்ற செருக்கும், பொருளாசையும் மனத்தில் நிறைந்திருக்க;

வாழ்வினில் வஞ்ச வீணர்தியிலர் அவர் நட்பு என்று பேணிட - வாழ்வில் பொய்யர்களையும் அறிவிலிகளையும் நண்பர்களாகக் கருதி;

மயல் எது அறிவைக் கொன்றதால் இனி வருவதன் நினைவற்று - அறியாமை என் அறிவை அழித்ததால் விளைவுகளை எண்ணாமல்; (மயல் - அறியாமை);

ன்பமேன எந்த நாளும் - இன்பம் என்று எண்ணித் தினமும்;


இடர்தரு வழியில் சென்றதால் வரும் இருள் தரு வினை உற்று அஞ்சினேன் - துன்பமே தரும் வழியில் சென்று, அதனால் வந்தடைந்த, பேரிருளில் ஆழ்த்தும் தீவினைகள் மிகுந்து அஞ்சுகின்றேன்; (இருடரு = இருள் + தரு); (இருள் - பிறப்பு ; மயக்கம்; துன்பம்; அஞ்ஞானம்); (உறுதல் - மிகுதல்; அடைதல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.92.4 - "இருடரு துன்பப் படல மறைப்ப");

உனது இணையடி மலருக்கு அன்பன் ஆகிடு சிந்தை தாராய் - அத்தகைய எனக்கும், உன் திருவடித்தாமரைக்குப் பக்தன் ஆகின்ற எண்ணத்தைத் தந்தருள்வாயாக;

இலை மலர் இடு நற்றொண்டர்பால் அடை இயமனும் வெருவித் துஞ்சுமாறுதை இறையவ - வில்வம் வன்னி முதலிய இலைகளையும் பல மலர்களையும் தூவி வழிபட்ட நல்ல தொண்டரான மார்க்கண்டேயரிடம் அடைந்த கொடிய காலனும் அஞ்சி இறக்குமாறு காலனை உதைத்த இறைவனே;

அடியர்க்கு அன்ப - அன்பர்க்கு அன்பனே;


கானது மன்றமாக - சுடுகாடே அரங்காக;

நடமிடு கருணைக் குன்றமே - கூத்தாடுகின்ற கருணைமலையே;

ஒரு நரைவிடை கொடியிற் கொண்ட நாயக, நகம்அது வளைவித்து அன்று மூ எயில் வென்ற வீரா - ஒரு வெள்ளை இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய நாயகனே; ( நரை - வெண்மை);

நகம்அது வளைவித்து அன்று மூ எயில் வென்ற வீரா - முன்பு மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை வென்ற வீரனே; (நகம் - மலை; அது - பகுதிப்பொருள்விகுதி); (எயில் - கோட்டை);


நரகுகள் அடைவிக்கின்ற தீவினை நரர்களும் உயவைக்கின்ற ஓர் பெயர் நலமுற நவிலக் கண்டு வான் அருள் அங்கணா - நரகத்தில் செலுத்துகின்ற பாவம் செய்தவர்களும் உய்யவைக்கும் ஒப்பற்ற திருநாமத்தை ஓதினால் அவர்களுக்கும் வானுலகை அருள்கின்ற அங்கணனே; (நரர் - மனிதர்); (உய - உய்ய - இடைக்குறை); (நவில்தல் - சொல்லுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.49.7 - நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் உரைசெய்வாயினராயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால் வரதன் நாமம் நமச்சிவாயவே.)


ர் படமுடை அரவைத் திங்களோடு அணி படர்சடை முடியில் தங்குமாறு அணி பரிசின – படத்தை உடைய நாகப்பாம்பைச் சந்திரனோடு அழகிய படர்ந்த சடை திகழும் திருமுடிமேல் தங்கும்படி அணிந்த பெருமை உடையவனே; (அணி - அழகு); (அணிதல் - சூடுதல்); (பரிசு - தன்மை; பெருமை);

பொடியைச் சந்து போல் அணி உம்பர் கோனே - திருநீற்றைச் சந்தனம்போல் அணியும் தேவர் தலைவனே; (சந்து - சந்தனம்);

படுவிடம் அதனைக் கண்டு வாடிய பல சுரர் பரவக் கண்டம் ஓர் மணி பட மிகு பரிவுற்றுண்டு வாழ்வருள் எம்பிரானே - கொடிய ஆலகால விடத்தைக் கண்டு வருந்திய தேவர்கள் துதிக்கக் கண்டத்தில் ஒப்பற்ற மணி தோன்றுமாறு, மிகுந்த இரக்கம்கொண்டு அதனை உண்டு அவர்களுக்கு உய்வை அருளிய எம்பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment