Pages

Saturday, April 30, 2016

03.01-81 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
81)
ஒளிரும் சடையான்; உமைசேர் இடத்தான்;
களிற்றுரி போர்த்தான்; கழலைத் துளியும்
கருதா திருந்தேன் கருத்தில் புகுந்தான்
அருண மலையான் அவன்.

ஒளிரும் சடையான்; உமைசேர் இடத்தான்;
களிற்று உரி போர்த்தான்; கழலைத் துளியும்
கருதாது இருந்தேன் கருத்தில் புகுந்தான்
அருண மலையான் அவன்.

(ஒளிர்தல் - ஒளிவீசுதல்; பிரகாசித்தல்;
உமை சேர் இடத்தான் - உமை அம்மையை இடப்பாகத்தில் உடையவன்;
களிற்று உரி - யானைத் தோல்;
துளியும் - சிறிதளவும்;
கழலைத் துளியும் கருதாது இருந்தேன் கருத்தில் புகுந்தான் - அவன் திருவடியைச் சிறிதும் எண்ணாது இருந்த என் மனத்தில் புகுந்தவன்;
அருண மலையான் - அண்ணாமலையான்;)

82)
அவனை மறந்திருவர் "யான்பரம்" என்ன,
அவரிடையே பேரொளி ஆன சிவனை
அடியேன் மறப்பேனோ? அந்த இடபக்
கொடியோன் அடியே குறி.

அவனை மறந்து இருவர் "யான் பரம்" என்ன,
அவரிடையே பேரொளி ஆன சிவனை
அடியேன் மறப்பேனோ? அந்த இடபக்
கொடியோன் அடியே குறி.

(யான் பரம் - நானே மேலான தெய்வம்;
இடபம் - எருது;
இடபக் கொடியோன் - இடபச் சின்னம் பொறித்த கொடியை உடைய சிவன்;
குறி - குறிக்கோள்; நோக்கம்;)

83)
குறித்தநாள் வந்ததும் கொண்டுசெல்வான் காலன்;
அறிவார்ஆர் அந்நாளை? "ஐயா, வெறிகமழ்
கொன்றைசூண்ணா மலையாய்,காஎன்றுநெஞ்சே 
இன்றே இறைஞ்சிட எண்ணு.

குறித்த நாள் வந்ததும் கொண்டு செல்வான் காலன்;
அறிவார் ஆர் அந்நாளை? "ஐயா, வெறி கமழ்
கொன்றை சூடு அண்ணாமலையாய், காஎன்று, நெஞ்சே
இன்றே இறைஞ்சிட எண்ணு.

(ஆர் - யார்;
வெறி - மணம்; வாசனை;
வெறி கமழ் கொன்றை சூடு அண்ணா மலையாய் - மணம் கமழும் கொன்றைமலரை அணிந்த அண்ணாமலையானே;
கா - காத்தருள்க;)

(சம்பந்தர் தேவாரம் - 2.41.3 -
நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய், ஆரறிவார்
சாநாளும் வாழ்நாளும்; சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளும் தலைசுமப்பப், புகழ்நாமம் செவிகேட்ப,
நாநாளும் நவின்றேத்தப், பெறலாமே நல்வினையே.
--- நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள்?)

84)
எண்ணும் எழுத்தும், இறைவனே நீஆனாய்;
விண்ணும் நிலனும் மிகுந்துநின்றாய்; பெண்ணாண்
எனஆனாய்; உன்னுருவை எப்படிச் சொல்வேன்?
எனைஆள் பிரானே, இயம்பு.

எண்ணும் எழுத்தும், இறைவனே நீ ஆனாய்;
விண்ணும் நிலனும் மிகுந்து நின்றாய்; பெண் ஆண்
என ஆனாய்; உன்ருவை எப்படிச் சொல்வேன்?
எனை ஆள் பிரானே, இயம்பு.

விண்ணும் நிலனும் மிகுந்து நின்றாய் - மண்ணையும் ஆகாயத்தையும் கடந்து உயர்ந்தவனே;
பெண் ஆண் என ஆனாய் - ஆணும் பெண்ணும் ஆனவனே;
எனை ஆள் பிரானே - என்னை ஆளும் தலைவனே;

(அப்பர் தேவாரம் - 6.55.7 - "பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி .... எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி...");
(காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி - 11.4.61 -
"அன்றும் திருஉருவம் காணாதே ஆட்பட்டேன்!
இன்றும் திருஉருவம் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்,
எவ்வுருவோ நின்னுருவம் ஏது")

85)
இயம்பும் எழுத்தஞ்சை என்நா; தலைமேல்
உயரும் எனதுகைகள்; உன்னை நயந்துருகும்
என்நெஞ்சு; மால்அயனுக் கெட்டா முழுமுதலே!
வன்னஞ்சுண் டோனே!கா வாய்.

இயம்பும் எழுத்து அஞ்சை என் நா; தலைமேல்
உயரும் எனது கைகள்; உன்னை நயந்து உருகும்
என் நெஞ்சு; மால்அயனுக்கு எட்டா முழுமுதலே!
வன்னஞ்சு உண்டோனே! காவாய்.

(இயம்புதல் - சொல்லுதல்;
எழுத்து அஞ்சு - நமசிவாய என்ற திருவைந்தெழுத்து;
நயத்தல் - விரும்புதல்;
வன்னஞ்சு - கொடிய நஞ்சு;
காவாய் - காப்பாயாக;)

86)
காவாய் கருணைக் கடலே! பிறவாத
மூவாத முக்கண் முதல்வனே! தேவா!
மறைபாடும் அண்ணா மலையானே! வந்து
குறைபாடு தீர்த்தெனைஆட் கொள்.

காவாய் கருணைக் கடலே! பிறவாத,
மூவாத, முக்கண் முதல்வனே! தேவா!
மறை பாடும் அண்ணாமலையானே! வந்து,
குறைபாடு தீர்த்து, எனை ஆட்கொள்.

(காவாய் கருணைக் கடலே - தயாசாகரமே! என்னைக் காத்தருள்வாயாக;
பிறவாத, மூவாத, முக்கண் முதல்வனே - பிறப்பும் மூப்பும் இல்லாத ஆதி மூர்த்தியே; முக்கண்ணனே;
மறை பாடும் அண்ணாமலையானே - வேதங்கள் பாடும் அண்ணாமலையானே; (மறை - வேதம்);
குறைபாடு - குறை; குற்றம்; மனக்குறை; )

87)
ஆட்கொள்ள வாராய் அரனே!உன் மேல்தீரா
வேட்கை உடையேன் வினைதீர்ப்பாய்! வாட்கண்
மடவார்கள் மையலில் வாடும் எனைக்கா!
சடையாய்!நின் தாளே சரண்!

ஆட்கொள்ள வாராய் அரனே! உன் மேல் தீரா
வேட்கை உடையேன் வினை தீர்ப்பாய்! வாள்-கண்
மடவார்கள் மையலில் வாடும் எனைக் கா!
சடையாய்! நின் தாளே சரண்!

(வேட்கை - விருப்பம்;
வாட்கண் - வாள் கண் - ஒளி பொருந்திய கண்;
மடவார்கள் - பெண்கள்;
சடையாய் - சடை உடையவனே;
சரண் - புகல்; அபயம்;)

88)
சரணடைந்த வானோர் தமைக்காக்க, எங்கும்
பரவிய நஞ்சுண்டீர்; பாடிப் பரவும்
அடியேனை ஏற்ருள்வீர் அண்ணா மலையீர்!
அடிகேள்! அடைந்தேன் அடி.

சரண் அடைந்த வானோர் தமைக் காக்க, எங்கும்
பரவிய நஞ்சுண்டீர்; பாடிப் பரவும்
அடியேனை ஏற்றுஅருள்வீர் அண்ணாமலையீர்!
அடிகேள்! அடைந்தேன் அடி.

சரண் அடைந்த வானோர்தமைக் காக்க, எங்கும் பரவிய நஞ்சுண்டீர் - அடைக்கலம் அடைந்த தேவர்களைக் காப்பதற்காக, எங்கும் பரவிய விடத்தை உண்டவரே;
பாடிப் பரவும் அடியேனை ஏற்றுஅருள்வீர் அண்ணாமலையீர் - அண்ணாமலையாரே! உம்மைப் பாடிப் போற்றும் அடியேனை ஏற்று அருள்புரிவீராக;
அடிகேள்! அடைந்தேன் அடி - சுவாமீ, உம் திருவடியில் சரண் புகுந்தேன்;
(பரவுதல் - விரிந்து பெருகுதல்; போற்றித் துதித்தல்;
அடிகேள் - அடிகளே - இறைவனே)

89)
அடியார் குழாத்தை அணுகேன்;நின் தாளில்
கடியார் மலர்தூவேன்; கங்கை முடிமேல்
அணிஅரனே! அண்ணா மலையானே! என்றன்
பணியா மனம்சீர்ப் படுத்து.

அடியார் குழாத்தை அணுகேன்; நின் தாளில்
கடிர் மலர் தூவேன்; கங்கை முடிமேல்
அணி அரனே! அண்ணாமலையானே! என்ன்
பணியா மனம் சீர்ப்படுத்து.

(அடியார் குழாத்தை அணுகேன் - அடியவர் திருக்கூட்டத்தை அணுகமாட்டேன்;
நின் தாளில் கடி ஆர் மலர் தூவேன் - உன் திருவடியில் வாசனை பொருந்திய பூக்களைத் தூவ மாட்டேன்;
கங்கை முடிமேல் அணி அரனே! - கங்காதரனே;
அண்ணாமலையானே! - அண்ணாமலையானே;
என்ன் பணியா மனம் சீர்ப்படுத்து - வழிபாடு செய்ய நினையாத, அடங்காத என்னுடைய மனத்தைச் சரிப்படுத்துவாயாக;)

90)
படுத்தும் மனத்தைப் படியவைப்பாய், அன்று
கடுத்துப் பெருகிய கங்கை தடுத்தவனே!
என்னகந்தைக் காரிருள் இல்லாமல் போய்விட
உன்னடியே காட்டும் ஒளி.

படுத்தும் மனத்தைப் படியவைப்பாய், - எனக்குத் துன்பம் செய்யும் மனத்தை அடங்கவைப்பாயாக;
அன்று கடுத்துப் பெருகிய கங்கை தடுத்தவனே! - முன்பு, மிக விரைந்து பாய்ந்த கங்கையைச் சடையில் தடுத்தவனே; (கடுத்தல் - விரைதல்;
என்கந்தைக் காரிருள் இல்லாமல் போய்விட, உன்டியே காட்டும் ஒளி. - என் ஆணவம் என்ற பேரிருள் நீங்க, உன் திருவடியே ஒளி காட்டும்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2 comments:

  1. மலையாய்! வந்து (86,89) தளை தட்டல்.

    ReplyDelete
  2. Thank you for highlighting the thaLai issue in those 2 places - in songs 86 & 89. I have corrected them now.

    ReplyDelete