Pages

Thursday, August 27, 2015

02.06 – பரங்குன்றம் - (திருப்பரங்குன்றம்)

02.06 – பரங்குன்றம் - (திருப்பரங்குன்றம்)



2010-11-19
திருப்பரங்குன்றம்
---------------------------
(அறுசீர் விருத்தம் - 'விளம் கூவிளம் தேமா' என்ற அரையடி அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 2.69.1 - 'பெண்ணமர் மேனியி னாரும்')



1)
விரிசடை மேற்பிறை யானும்
.. வெள்விடை மேல்வரு வானும்
கரியுரி போர்த்துகந் தானும்
.. காமனைக் காய்ந்தகண் ணானும்
வரிசிலை ஒன்றினை ஏந்தி
.. மாலினை அம்பெனப் பூட்டித்
திரிபுரம் மூன்றெரித் தானும்
.. திருப்பரங் குன்றமர்ந் தானே.



வெள்விடை - வெண்ணிற இடபம்;
கரியுரி - யானைத்தோல்;
காமனைக் காய்ந்த கண்ணான் - மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்;
வரிதல் - கட்டுதல் (To bind, tie, fasten);
சிலை - வில்;
வரிசிலை - வினைத்தொகை - கட்டு அமைந்த வில்;
மால் - திருமால்;
திரிபுரம் - வினைத்தொகை - திரிந்த புரங்கள்;



2)
விரைமலர்க் கொன்றையி னானும்
.. வெண்திரு நீறணி வானும்
அரவரைக் கச்சணி வானும்
.. அணியுமை கூறுடை யானும்
புரையறு சீருடை யானும்
.. புலியதள் ஆடையி னானும்
திரைமலி செஞ்சடை யானும்
.. திருப்பரங் குன்றமர்ந் தானே.



விரைமலர்க் கொன்றை - மணம் கமழும் கொன்றை மலர்;
அரவு அரைக் கச்சு - பாம்பு அரைநாண்;
அணி உமை கூறு உடையான் - அழகிய பார்வதியை ஒரு பாகமாகக் கொண்டவன்;
புரை அறு சீர் - குற்றமற்ற புகழ்;
புலி அதள் - புலித்தோல்;
திரைமலி - அலைமிகுந்த;



3)
எழுகதிர் போல்நிறத் தானும்
.. இமையவர் தம்பெரு மானும்
மழுவொரு கையுடை யானும்
.. மாதொரு பாலுடை யானும்
அழுதடி போற்றிசெய் வாரின்
.. அருவினை தீர்த்தருள் வானும்
செழுமலர்க் கொன்றையி னானும்
.. திருப்பரங் குன்றமர்ந் தானே.



எழுகதிர் போல் நிறத்தான் - உதிக்கும் சூரியனைப் போல் செந்நிறம் உடையவன்;
இமையவர் தம் - தேவர்களின்;
மாது ஒரு பால் உடையான் - பார்வதியை ஒரு பக்கத்தில் உடையவன்;



4)
நீறணி மேனியி னானும்
.. நெற்றியிற் கண்ணுடை யானும்
ஏறமர் பெற்றியி னானும்
.. ஏந்திழை பங்குடை யானும்
ஆறணி செஞ்சடை மேலே
.. அழகிய வெண்பிறை யோடு
சீறர வம்புனை வானும்
.. திருப்பரங் குன்றமர்ந் தானே.



நீறு அணி மேனி - திருநீறு பூசிய உடம்பு;
ஏறு அமர் பெற்றி - இடபத்தை வாகனமாக விரும்பும் தன்மை/பெருமை;
ஏந்திழை - பார்வதி;
சீறு அரவம் புனைவான் - சீறும் பாம்பைச் சூடுபவன்;



5)
அல்லல றுத்தெமை ஆளாய்
.. ஐயவென் பார்களுக் கென்றும்
இல்லையென் னாதளிப் பானும்
.. இடுபலி ஏற்றுகப் பானும்
எல்லையில் சீருடை யானும்
.. எங்கு[ம்]நி றைந்திருப் பானும்
தில்லையில் ஆடலி னானும்
.. திருப்பரங் குன்றமர்ந் தானே.



பதம் பிரித்து:
"அல்லல் அறுத்து எமை ஆளாய்
.. ஐய" என்பார்களுக்கு என்றும்
இல்லை என்னாது அளிப்பானும்,
.. இடு பலி ஏற்று உகப்பானும்,
எல்லை இல் சீர் உடையானும்,
.. எங்கும் நிறைந்து இருப்பானும்,
தில்லையில் ஆடலினானும்,
.. திருப்பரங் குன்று அமர்ந்தானே.


ஆளாய் ஐய - ஐயனே, ஆள்வாயாக;
இடு பலி - இடும் பிச்சை;
எல்லை இல் - அளவில்லாத;
ஆடலினான் - ஆடுபவன்;



6)
பரவிய பத்தரைப் பற்றப்
.. பாய்ந்தவன் கூற்றினை அன்று
குரைகழ லாலுதை செய்து
.. குமைத்துயிர் காத்தருள் வானும்
விரைகம ழும்தமிழ்ச் செய்யுள்
.. விழைதரு மிக்கருள் வானும்
திரையினில் மீன்பிடிப் பானும்
.. திருப்பரங் குன்றமர்ந் தானே.



* திருவிளையாடல் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்;
* திருவிளையாடல் - வலை வீசின படலம்;
பரவுதல் - துதித்தல்;
பத்தர் - பக்தர் - மார்க்கண்டேயர்;
வன் கூற்று - கொடிய எமன்;
விரை - மணம்;
விழைதல் - விரும்புதல்;
திரையினில் மீன் பிடிப்பான் - கடலில் மீனவனாகச் சென்றவன்; (திரை - அலை; கடல்;)


7)
புரமெரி புன்னகை யானும்
.. போதணி பொற்சடை யானும்
சுரமலி தண்டமிழ் பாடித்
.. துணையடி வாழ்த்திவ ணங்கி
வரமளி வள்ளலென் பார்க்கு
.. வாரிவ ழங்கிடு வானும்
சிரமலி மாலையி னானும்
.. திருப்பரங் குன்றமர்ந் தானே.



புரம் எரி புன்னகையான் - முப்புரங்களைச் சிரித்து எரித்தவன்;
போது அணி பொற்சடையான் - பொற்சடையில் மலர்கள் சூடியவன்;
சுரம் மலி தண் மிழ் - இசை மிகுந்த தமிழ்ப் பதிகங்கள்; (சுரம் - ஸ்வரம்);
துணையடி - இரு திருவடிகள்; காக்கும் திருவடி;
வரம் அளி வள்ளல் - வரம் அளிக்கும் வள்ளல்;
சிரம் மலி மாலையினான் - தலைமாலை அணிந்தவன்;



8)
பரபரத் தேமலை தன்னைப்
.. பலமிகு தோள்கொடு பேர்க்க
விரையரக் கன்முடி பத்தை
.. மெல்விரல் வைத்தடர்த் தானும்
பரவிட வாளருள் வானும்
.. பாய்புலித் தோலுடை யானும்
திரைவிடம் சேர்மிடற் றானும்
.. திருப்பரங் குன்றமர்ந் தானே.



பரபரத்தே மலை தன்னை - அவசரப்பட்டுக் கயிலாய மலையை;
பலம் மிகு தோள்கொடு பேர்க்க விரை அரக்கன் - வலிய புஜங்களால் பெயர்க்க விரைந்த இராவணனின்;
முடி பத்தை மெல்விரல் வைத்து அடர்த்தானும் - பத்துத்தலைகளையும் ஓர் மென்மை மிக்க விரலை ஊன்றி நசுக்கியவனும்;
பரவிட வாள் அருள்வானும் - துதிகள் பாடித் தொழுத இராவணனுக்குச் சந்திரஹாசம் என்ற வாளை அருளியவனும்;
பாய்புலித்தோல் உடையானும் - பாயும் புலியின் தோலை அணிந்தவனும்;
திரைவிடம் சேர் மிடற்றானும் - கடல் விடம் சேரும் கண்டத்தை உடையவனும்;
திருப்பரங்குன்று அமர்ந்தானே - திருப்பரங்குன்றத்தில் விரும்பி வீற்றிருக்கும் சிவபெருமான்.



9)
அரிவையைப் பங்குடை யானும்
.. அடல்விடை ஒன்றமர் வானும்
அரியொடு நான்முகன் நேடி
.. அடியொடு மேலினைக் காண
அரிதென நின்றிருந் தானும்
.. அடிதொழும் உம்பரைக் காக்கத்
திரியரண் மூன்றெரித் தானும்
.. திருப்பரங் குன்றமர்ந் தானே.



அரிவை - பெண் - பார்வதி;
அடல் விடை - வலிய இடபம்;
நேடுதல் - தேடுதல்;
உம்பர் - தேவர்;
திரி அரண் மூன்று - திரியும் மூன்று கோட்டைகள்;



10)
புந்தியில் லாதவர் கூறும்
.. பொய்ந்நெறிச் சென்றுழ லாமல்
மந்திர அஞ்செழுத் தோதி
.. வணங்கிடும் பத்தருக் கெல்லாம்
தந்தையும் தாயுமென் றாகிச்
.. சகலமும் தந்தருள் வானும்
செந்தழல் மேனியி னானும்
.. திருப்பரங் குன்றமர்ந் தானே.



புந்தி - புத்தி;
செந்தழல் மேனி - தீயைப் போல் செந்நிற மேனி;


(இலக்கணக் குறிப்பு: நெறிச்செல்லுதல் - ஒற்று மிகும்.
பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம் - # 299
உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
நம்பு மாறறி யேனை நடுக்குற
வம்பு மால்செய்து வல்லியின் ஒல்கியின்று
எம்பி ரானரு ளெந்நெறிச் சென்றதே.)



11)
இனமலர் இட்டிரு போதும்
.. இன்தமிழ் மாலைகள் பாடித்
தினமடி போற்றிசெய் வாரின்
.. தீவினை தீர்த்தருள் வானும்
கனலுமிழ் கண்ணுடை யானும்
.. கறைதிகழ் மாமிடற் றானும்
சினவிடை மேல்வரு வானும்
.. திருப்பரங் குன்றமர்ந் தானே.



இனமலர் - சிறந்த பூக்கள்;
இரு போதும் - காலை மாலை என்ற இருவேளைகளிலும்; பகல் இரவு என்ற இருவேளைகளிலும்;
இன் தமிழ் மாலை - இனிய தமிழ்மாலை - தேவாரம், திருவாசகம், முதலியன;
கனல் உமிழ் கண் - தீயைக் கக்கும் நெற்றிக்கண்;
கறை திகழ் மா மிடறு - அழகிய நீலகண்டம்;
சினவிடை - கோபிக்கின்ற இடபம்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • "தானன தானன தானா" என்ற அரையடி அமைப்பு.
  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்துகள்; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்துகள்.
  • அரையடியுள் வெண்டளை பயிலும்.
  • விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீரோ மாங்காய்ச்சீரோ வரலாம்.
  • அரையடியின் ஈற்றுச் சீர் மாச்சீர்.



2) சம்பந்தர் தேவாரம் - 2.69.1 -
பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாரும்
கண்ணமர் நெற்றியி னாரும் காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரும் இமையவர் ஏத்தநின் றாரும்
பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

----------------- ----------------

No comments:

Post a Comment