Pages

Saturday, September 25, 2021

05.20 – கன்றாப்பூர்

05.20 – கன்றாப்பூர்


2015-01-25

கன்றாப்பூர் (திருக்கன்றாப்பூர்) (இக்காலத்தில் "கோயில் கண்ணாப்பூர்")

-----------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")


1)

ஊண்பாறு வெண்டலையில் உகந்தானை ஆகத்தில்

ஆண்பாதி பெண்பாதி ஆயவனை அரவத்தைப்

பூண்போல அணிந்தானைப் பூவிட்டுப் புகழ்ந்தேத்திக்

காண்பார்தம் நெஞ்சகலான் கன்றாப்பூர் நடுதறியே.


* கன்றாப்பூர் நடுதறி - கன்றாப்பூரில் ஈசன் திருநாமம் "நடுதறியப்பர்".


ஊண் பாறு வெண் தலையில் உகந்தானை - உடைந்த வெள்ளிய மணையோட்டில் உணவு விரும்பியவனை; (ஊண் - உணவு); (பாறுதல் - அழிதல்); (சுந்தரர் தேவாரம் - 7.36.5 - "பாறு வெண்டலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர்");

ஆகத்தில் ஆண் பாதி பெண் பாதி ஆயவனை - திருமேனியில் ஆணும் பெண்ணும் ஆனவனை; (ஆகம் - உடல்);

அரவத்தைப் பூண் போல அணிந்தானைப் - நாகாபரணனை; (பூண் - அணி; ஆபரணம்);

பூ இட்டுப் புகழ்ந்து ஏத்திக் காண்பார்தம் நெஞ்சு அகலான் - மலர் தூவிப் புகழ்ந்து போற்றிக் கண்டு தொழுவார்களின் நெஞ்சத்தில் நீங்காமல் உறைகின்றவன்; (காண்தல் - தரிசித்தல்; வணங்குதல்);

கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பர்.

(அப்பர் தேவாரம் - 6.61.1 - "முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்திக் காதன்மையால் தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே");


2)

மாதவஞ்செய் பகீரதற்கு வரமருளி வானதியைப்

பூதலத்தில் ஓடவிடு பொற்சடையன் இருநான்கு

போதகத்துக் கொண்டுநிதம் பொன்னடியைப் போற்றிசெய்து

காதலிப்பார் நெஞ்சகலான் கன்றாப்பூர் நடுதறியே.


வானதியைப் பூதலத்தில் ஓடவிடு - கங்கையைப் பூமியில் ஓடும்படி விடுத்த;

இருநான்கு போது அகத்துக் கொண்டு - மனத்தில் எட்டு மலர்களைக் கொண்டு; (போது - பூ); (அப்பர் தேவாரம் - 6.34.9 - "நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்" - உள்ளத்தில் இருந்து ஞானபூசைக்கு உரியவாகும் மலர்கள் எட்டாவன "கொல்லாமை, பொறியடக்கம், பொறுமை, இரக்கம், அறிவு, வாய்மை, தவம், அன்பு" என்பன);


3)

பெருகுவிடம் கண்டஞ்சிப் பெருந்தேவர் தொழஉண்டு

கருகுமிட றுடையண்ணல் கல்லாலின் புடையமர்ந்தான்

உருகுமனத் தினராகி உமைபங்கன் கழலிணையே

கருதடியார் நெஞ்சிலுறை கன்றாப்பூர் நடுதறியே.


கருகு மிடறுஉடை அண்ணல் - நீலகண்டன்; (கருகுதல் - நிறங்கறுத்தல்; இருளுதல்); (அப்பர் தேவாரம்- 5.29.1 - "கருகு கண்டத்தன்");

கல்லாலின் புடை அமர்ந்தான் - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி;

கருதுதல் - விரும்புதல்; சிந்தித்தல்;


4)

தண்ணதிபாய் சடைமீது தளிர்மதியம் தாங்குமரன்

ஒண்ணுதலாள் மாதுமையாள் ஒருபாகம் மகிழ்பெம்மான்

கண்ணுடைய கரும்பொன்றைக் கையேந்து மன்மதனைக்

கண்ணுதலால் பொடிசெய்த கன்றாப்பூர் நடுதறியே.


* மாதுமை - திருக்கன்றாப்பூர் இறைவி திருநாமம்;


தண்ணதி - தண் நதி - குளிர்ந்த கங்கை;

ஒண்ணுதலாள் - ஒள் நுதலாள் - ஒளிபொருந்திய நெற்றியை உடையவள்;

மாதுமையாள் - உமாதேவி;

கண் உடைய கரும்பு - கணு இருக்கும் கரும்பு; (கண் - மரக்கணு - Joint in bamboo or sugar-cane);

கண்ணுதலால் - நெற்றிக்கண்ணால்;


5)

தினமலர்கள் பலதூவிச் சேவடியை வழுத்திமிக

நினையடியார் நெஞ்சத்தில் நீங்காது நின்றபரன்

சினவிடையான் திருநாமம் செபஞ்செய்மார்க் கண்டர்க்காக்

கனைகழலால் நமனையுதை கன்றாப்பூர் நடுதறியே.


தினமலர்கள் - தினம் மலர்கள் - தினந்தோறும் பூக்கள்; (தினமலர் = நாண்மலர் (நாள்மலர்) = "அன்று பூத்த பூ" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

மார்க்கண்டர்க்கா - மார்க்கண்டேயருக்காக;

கனைகழல் - ஒலிக்கின்ற வீரத்தண்டையை அணிந்த திருவடி;

நமன் - எமன்;


6)

சலந்தரனைச் சக்கரத்தால் தடிந்தவன்பின் மாலுக்கு

வலந்திகழ அதனையருள் மாதேவன் வார்கழலில்

நலந்திகழும் மலர்தூவி நாளுநினை வார்நெஞ்சில்

கலந்துறையும் கண்ணுதலான் கன்றாப்பில் நடுதறியே.


தடிதல் - வெட்டுதல்;

வலம் - வலிமை; வெற்றி; வலப்பக்கம்;

நலம் - அழகு; நன்மை;

நாளுநினைவார் - நாளும் நினைவார் - தினந்தோறும் எண்ணுபவர்கள்;

கன்றாப்பு - கன்றாப்பூர்; (அப்பர் தேவாரம் - 6.79.8 - "கனியைத் தேனைக் கன்றாப்பின் நடுதறியைக்")


7)

பெருங்களிற்றின் உரிபோர்த்த பித்தனொரு வஞ்சியன

மருங்குலுடை மலைமகளை வாமத்தில் மகிழ்பெருமான்

அருங்கலமா அஞ்செழுத்தை அணிநாவர்க் கரணாவான்

கருங்குயிலார் பொழில்சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியே.


பெரும் களிற்றின் உரி போர்த்த பித்தன் - பெரிய யானையின் தோலைப் போர்த்திய பித்தன்;

ஒரு வஞ்சி அன மருங்குல் உடை மலைமகளை வாமத்தில் மகிழ் பெருமான் - ஒரு கொடி போன்ற இடையை உடைய உமையம்மையை இடப்பாகம் விரும்பிய பெருமான்;

அருங்கலமா அஞ்செழுத்தை அணி நாவர்க்கு அரண் ஆவான் - தம் நாவில் அணிகலனாகத் திருவைந்தெழுத்தை அணிந்தவர்களுக்குப் பாதுகாவல் ஆவான்;

கருங்குயில் ஆர் பொழில் சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியே - கரிய குயில்கள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்.


8)

நீர்புடைசூழ் இலங்கைக்கோன் நீள்வரையை இடந்தக்கால்

ஓர்விரலை வெற்பின்மேல் ஊன்றிநெரித் திசைகேட்டான்

சீர்பரவும் யாவர்க்கும் திருவருள்செய் நம்பெருமான்

கார்வளம்சேர் வயல்சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியே.

நீர் புடைசூழ் இலங்கைக்கோன் நீள்வரையை இடந்தக்கால் - நீரால் சூழப்பெற்ற இலங்கைக்கு மன்னனான இராவணன் நீண்ட மலையான கயிலையைப் பெயர்த்தபொழுது; (இடந்தக்கால் - பெயர்த்தபோழுது);

குறிப்பு - "கால்' என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்து, 'இடந்தக்கால், கால் ஓர் விரலை" என்று கொண்டும் பொருள்கொள்ளலாம்;

வெற்பு - மலை;

யாவர்க்கும் - எவருக்கும்; எல்லார்க்கும்;

கார் - மேகம்; மழை; நீர்;


9)

புயல்வணனும் புண்டரிகப் போதினனும் அடிமுடியை

முயல்வணமோர் முடிவில்லா முழுத்தழலாய் ஓங்கியவன்

இயல்வணமேத் தடியார்கட் கெளியவனாய் நின்றருள்வான்

கயலுகளும் வயல்சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியே.


புயல்வணன் - மேக நிறம் உடைய திருமால்;

புண்டரிகப் போதினன் - தாமரைப்பூவில் இருக்கும் பிரமன்;

முயல்வணம் - முயலும்படி;

இயல்வணம் - இயன்ற அளவில்;

கயல் உகளும் - கயல்மீன்கள் தாவுகின்ற;


10)

எந்தவழி நல்லவழி என்றறியார் இருவினைதீர்

வெந்தபொடி பூசாத மிண்டரவர் உரைகொள்ளேல்

வந்தனைசெய் தடைவார்க்கு மட்டின்றி வரமருள்வான்

கந்தமலி பொழில்சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியே.


இருவினைதீர் வெந்தபொடி - இருவினையைத் தீர்க்கும் திருநீறு;

மிண்டர் - கல் நெஞ்சர்;

மட்டின்றி - அளவின்றி;

கந்தமலிபொழில் - கந்தம் மலி பொழில் - மணம் நிறைந்த சோலை;


11)

அளிமண்டு நெஞ்சினராய் அலர்தூவி அடிதொழுவார்க்

கெளிவந்த எம்பெருமான் இருஞ்சடைமேல் இளமதியம்

மிளிர்கொன்றை அணிந்தபரன் விரிபொழிலில் மதுவுண்டு

களிவண்டு பண்முரலும் கன்றாப்பில் நடுதறியே.


அளி - அன்பு;

மண்டுதல் - மிகுதல்;

அலர் - பூ;

எளிவந்த எம்பெருமான் - எளிதில் அடையப்படும் எம்பெருமான்;

இருஞ்சடை - பெரிய சடை;

களி வண்டு - களிக்கின்ற வண்டு;

பண் முரலும் - இசை ஒலிக்கின்ற;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


05.19 – கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்)

05.19 – கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்)


2015-01-19

கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம் - நன்னிலத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(அறுசீர் விருத்தம் - "காய் காய் காய் காய் மா தேமா" அமைப்பு;

"மா காய் மா காய் மா தேமா" என்று நோக்கலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.72 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி")


1)

ஏலக் குழலாளை இடப்பால் மகிழ்ந்தானை எழில்மி டற்றில்

நீல மணியானை நேயர் மனக்கோயில் நீங்கா தானைச்

சூலத் தொடுமானும் சுடரும் தரித்தானைச் சுரும்பொ லிக்கும்

கோலப் பொழில்சூழ்ந்த கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


ஏலக்குழலாளை இடப்பால் மகிழ்ந்தானை - மயிர்ச்சாந்து அணிந்த கூந்தலை உடைய உமையை இடப்பக்கம் விரும்பியவனை;

எழில் மிடற்றில் நீல மணியானை - அழகிய கண்டத்தில் கருமணி உடையவனை;

நேயர் மனக்கோயில் நீங்காதானை - பக்தர்களின் மனம் என்ற கோயிலில் என்றும் உறைபவனை;

சூலத்தொடு மானும் சுடரும் தரித்தானை - கையில் சூலத்தையும் மானையும் தீயையும் ஏந்தியவனை;

சுரும்பு ஒலிக்கும் கோலப் பொழில் சூழ்ந்த கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - வண்டுகள் ரீங்காரம் செய்யும் அழகிய சோலை சூழ்ந்த திருகொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக!


2)

துன்றிச் சுரரெல்லாம் துதிகள் பலபாடித் தொழுபி ரானை

மன்றிற் றிருநட்டம் மகிழும் பெருமானை மழவெள் ளேற்று

வென்றிக் கொடியானை மேவார் புரமூன்றும் வேவ எய்த

குன்றச் சிலையானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


துன்றிச் சுரரெல்லாம் துதிகள் பல பாடித் தொழு-பிரானை - நெருங்கித் தேவர்களெல்லாம் பல துதிகள் பாடி தொழும் தலைவனை;

மன்றில் திருநட்டம் மகிழும் பெருமானை - அம்பலத்தில் திருநடம் செய்யும் பெருமானை;

மழ-வெள்-ஏற்று வென்றிக் கொடியானை - இளைய, வெண்ணீற இடபச் சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவனை;

மேவார் புரம் மூன்றும் வேவ எய்த குன்றச் சிலையானைக் - பகைவர்களது முப்புரமும் வெந்து அழியும்படி எய்த மேருவில்லை ஏந்தியவனைக்;

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே.- திருகொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக!


3)

பன்றி மருப்பணிந்த பவளத் திருமார்பில் பாம்பு மாலை

ஒன்றும் உடையானை ஒற்றை விடையானை ஓது வார்க்கு

நன்று மிகநல்கும் நங்கள் பெருமானை நறவம் நாறு

கொன்றை முடியானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பன்றி மருப்பு - பன்றிக்கொம்பு ;

ஒற்றை - ஒப்பற்ற ;

ஓதுவார்க்கு நன்று மிக நல்கும் நங்கள் பெருமானை - (அப்பர் தேவாரம் - 4.77.3 - "அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே" - பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன);

நறவம் நாறு கொன்றை முடியானை - வாசனை கமழும் கொன்றைமலரைச் சூடியவனை;


4)

தொடுக்கும் சரம்சாத்தித் தொழுத அடியவர்க்குத் துன்பம் செய்ய

அடுக்கும் அடற்கூற்றின் அகலம் தனிலுதைத்தங் கருளி னானைக்

கடுக்கும் கடல்நஞ்சைக் கரந்த மிடற்றானைக் கரவி லாது

கொடுக்கும் கரத்தானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


அடுக்கும் அடல் கூற்றின் அகலம்தனில் உதைத்து - மார்க்கண்டேயரை நெருங்கிய வலிய நமனது மார்பில் உதைத்து; (அடுத்தல் - நெருங்குதல்); (அகலம் - மார்பு);

கடுக்கும் கடல்நஞ்சு - எவரும் வெறுக்கும் கசக்கின்ற விஷம்; (கடுத்தல் - மிகுதல்; வெறுத்தல்; கசத்தல்);

கரந்த மிடற்றானை - ஒளித்த கண்டனை;

கரவு இலாது கொடுக்கும் கரத்தானை - ஒளித்தல் இன்றி வாரி வழங்கும் கரத்தை உடையவனை;


5)

இனியெம் துணைநீயென் றேத்தும் அடியார்உண் இன்பத் தேனைத்

தனிவெள் விடையானைத் தக்கன் பெருவேள்வி தனைய ழித்த

முனிவும் உடையானை முக்கட் பெருமானை முடியின் மீது

குனிவெண் மதிசூடும் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


அடியார் உண் இன்பத்தேனை - (8.10.3 - திருவாசகம் - திருக்கோத்தும்பி - "நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும்");

தனி வெள் விடை - ஒப்பற்ற வெண்ணிற இடபம்;

முனிவு - கோபம்;

குனி வெண் மதி - வளைந்த வெண் திங்கள்; (குனிதல் - வளைதல்);


6)

பாதித் திருமேனி பாவை வடிவேற்ற பரமன் தன்னை

ஆதி நடுவாகி அந்தம் எனவாகும் அளவி லானைப்

பூதிப் பொலிவோடு பூக்கள் பலதூவிப் போற்றிப் பாடிக்

கோதில் அடியார்சேர் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பூதி - சாம்பல் - திருநீறு;

கோது இல் அடியார் சேர் - குற்றமற்ற அடியவர்கள் சேர்கின்ற;


7)

பறைகள் ஒலிக்கநடம் பயிலும் பசுபதியைப் பணிந்து வானோர்

இறைவ எமக்கருளாய் என்று துதிசெய்ய இரங்கி நஞ்சுண்

கறைகொள் மிடற்றானைக் கையால் மலர்தூவிக் கருது வார்தம்

குறைகள் களைவானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


8)

கருவம் மிகவாகிக் கயிலை மலைபேர்த்த கார ரக்கன்

வெருவ மலைமீது விரலிட் டடர்த்தானை வேதத் தானை

அரவப் புனற்கங்கை அணிகூ விளமாலை அரவம் கொன்றை

குரவம் புனைந்தானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


கார் அரக்கன் வெருவ - கரிய நிறத்து இராவணன் அஞ்சுமாறு;

அடர்த்தானை - நசுக்கியவனை;

அரவப் புனற்கங்கை, அணி கூவிள மாலை, அரவம், கொன்றை, குரவம் புனைந்தானை - ஒலிக்கும் புனல் பாயும் கங்கையையும் அழகிய வில்வமாலையையும் பாம்பையும் கொன்றைமலரையும் குரா மலரையும் சூடியவனை;


9)

நாற்ற மலர்மேலான் நாரா யணனிவர்கள் நண்ண ஒண்ணாத்

தோற்றச் சுடரானைச் சுடலைப் பொடியேறும் தோளி னானை

ஆற்றுச் சடையானை ஆல நிழலானை அன்பர்க் காகக்

கூற்றை உதைகோனைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


நாற்றமலர் மேலான் நாராயணன் இவர்கள் நண்ண ஒண்ணாத் தோற்றச் சுடரானை - வாசத்தாமரைமேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் அடைய இயலாத தோற்றம் உடைய தீ ஆனவனை; (தோற்றம் - புகழ்; வடிவம்)

ஆல நிழலானை - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை;


10)

பொக்கம் மலிநெஞ்சர் பொய்கள் பலசொல்லும் புல்லர் மார்க்கம்

துக்கம் மிகவாக்கும் துரிசர் உரைநீங்கித் தூவெண் ணீறும்

அக்கும் அணிவார்தம் அல்லல் களைவானை அரவத் தோடு

கொக்கின் இறகுமணி கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பொக்கம் - வஞ்சகம்;

புல்லர் - கீழோர்;

துரிசர் - குற்றம் உடையவர்; (துரிசு - குற்றம்);

அக்கு - உருத்திராக்கம்;

கொக்கின் இறகும் அணி - கொக்கு வடிவுடைய குரண்டாசுரனைக் கொன்று அவ்விறகைச் சூடிய;


11)

தளிகள் பலநாடித் தமிழின் தொடைபாடித் தாழ்வார்க் கெல்லாம்

எளியன் எனவாகி இன்னல் வினைதீர்க்கும் இறைவன் தன்னை

அளிகள் இசைபாடி அலரில் மதுமாந்தி அகங்க ளிக்கும்

குளிரும் பொழில்சூழ்ந்த கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


தளி - கோயில்;

தமிழ் இன்தொடை - இனிய தமிழ்ப் பாமாலைகள்;

தாழ்வார்க்கு - வணங்குபவர்களுக்கு;

எளியன் - எளிதில் அடையப்படுபவன்;

இன்னல் வினை - துன்பம் செய்யும் வினை; துன்பத்தையும் வினையையும்;

அளி இசை பாடி அலரில் மது மாந்தி அகம் களிக்கும் - வண்டுகள் இனிய ஒலிசெய்து பூவில் தேன் உண்டு மனம் மகிழும்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :

  • அறுசீர் விருத்தம் - "காய் காய் காய் காய் மா தேமா" அமைப்பு;

  • காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்;

  • இப்பதிகத்தில் 1, 3-ஆம் சீர்கள் மாச்சீர்கள். 2, 4-ஆம் சீர்கள் புளிமாங்காய் / கருவிளங்காய்.

  • (சம்பந்தர் தேவாரம் - 2.72 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி")